
Post No. 14,981
Date uploaded in London – —14 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-6-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
விண்வெளி விந்தை!
விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி!
ச. நாகராஜன்
விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தியை SBSP – SPACE BASED SOLAR POWER என்று கூறுகிறோம்.
சூரிய சக்தியை விண்வெளியில் சோலார் பவர் சாடலைட்டுகள் மூலமாகச் சேகரித்து அதை பூமிக்கு அனுப்புவதே இதன் அடிப்படைக் கொள்கையாகும். சூரிய பிரதிபலிப்பு இல்லை என்பதால் ஏராளமான சூரிய சக்தியை இதனால் சேகரிக்க முடியும்.
நாளுக்கு நாள் அருகி வரும் ஆற்றலை நாம் பெறாவிட்டால் எதிர்கால உலகம் வளமாக இருக்காது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதை நன்கு உணர்ந்து கொண்ட சீனா இந்த சூரிய ஆற்றலை விண்வெளியிலிருந்து பெறக்கூடிய ஆய்வில் முன் நிற்கிறது.
போகிற போக்கில் சீனாவிடமிருந்து நாம் இந்த சக்தியை விலை கொடுத்து வாங்கப் போகிறோமோ என்ற பயம் ஏற்படுகிறது என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் சீனா இன்னும் இருபது ஆண்டுகளில் இதைத் தயாரிக்க ஆரம்பித்து விடும்!
2050ம் ஆண்டிற்குள் இந்த அரிய ஆற்றலைப் பெற பட்ஜெட் தொகையாக 17.3 டிரில்லியன் டாலர்கள் வேண்டுமாம்! ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி என்ற எண்ணைக் குறிக்கும்! ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் இந்த எண்ணைப் பெறலாம்!
இந்தத் தொழில் நுட்பம் சற்று சிக்கலானது. சூரிய சக்தியை விண்வெளியில் சாடலைட்டுகளைப் பயன்படுத்திப் பிடித்து அதை பூமியை நோக்கிச் செலுத்தும் உத்தி இது. இதற்கு மைக்ரோவேவ் அல்லது அல்லது இன்ஃப்ரா ரெட் லேஸர் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்படும்.
இப்போது நாம் பெறும் சூரிய சக்தியைப் பெறுவது போலல்லாமல் இது வருடம் முழுவதும் இடைவிடாது நாள் ஒன்றுக்கு 24 மணிநேரமும் சூரிய சக்தியைப் பெற்று பூமிக்கு அனுப்பும். இப்போது பூமியில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரியத் தகடுகள் மூலம் பெறுவதைப் போல அதே பரப்பளவில் ஆறு மடங்கு அதிகமாக நாம் சூரிய ஆற்றலைப் பெற இந்த உத்தி வழி வகுக்கும்.
இது சூரிய ஆற்றலை உருவாக்குவது அல்ல என்று தெளிவு படுத்தும் சீன் மஹோனி எங்கு தேவையோ அங்கு இந்த சக்தியை டிரான்ஸ்மிஷன் செய்வதே இதன் பணி என்கிறார். இவர் அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் ஃப்ராண்டியர் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் (Executive Director of Space Frontier Foundation)
எந்த விதமான காலநிலையும் இதற்கு ஒரு பொருட்டல்ல; இரவு நேரத்திலும் பெறலாம், என்றும் வை-ஃபி போல இது செயல்படும் என்றும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தில்லாதபடி இது சூரிய ஆற்றலைத் தரும் என்றும் விளக்குகிறார்.
நடக்க வேண்டியது என்ன என்பது இப்போது தெளிவாக இருக்கிறது. விண்வெளி ஆற்றலைப் பெரும் மாபெரும் போட்டியில் ஒரு கமிட்டி இன்னும் 120 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும் என்பது அமெரிக்க நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
எதிர்கால உலகையும் புவி வாழ் மக்களையும் காக்கும் ஒரே சக்தி SBSP – SPACE BASED SOLAR POWER – அதாவது விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி தான்!
***