ஆலயம் அறிவோம்! ஆழ்வார் திருநகரி(Post No.14,987)

 WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 987

Date uploaded in London – 15 September 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-9-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்

பாடியாடிப் பணிந்து பல் படிகால் வழியேறிக் கண்டீர்

கூடி வானவரேத்த நின்ற திருக்குருகூர் அதனுள்

ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதே

                                                                                      – நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரி தலமாகும்.

மூலவர்: ஆதிநாதன், ஆதிப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி இருவருக்கும் தனித்தனியே கோவில்கள் உள்ளன

தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

விமானம் : கோவிந்த விமானம்

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் 35 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

இத்தலத்திற்கு தாந்த க்ஷேத்திரம், வராஹ க்ஷேத்திரம், சேஷ க்ஷேத்திரம், தீர்த்த க்ஷேத்திரம் என்று பல பெயர்கள் உண்டு.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகளும் சரித்திர வரலாறுகளும் பல உண்டு.

முன்னொரு காலத்தில் பிரம்மா திருமாலை நோக்கி பூமியில் தவம் செய்ய சிறந்த ஒரு இடத்தைத் தெரிவிக்குமாறு வேண்ட அவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த இந்த இடத்தைச் சொல்லி இங்கு அதிப்பிரான் என்ற திருநாமத்தோடு தான் எழுந்தருளி இருப்பதையும் கூறினார். இங்கு வந்து தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக வந்து உபதேசித்து அருளினார். அதனால் இந்தத் தலத்திற்கு குருகூர் என்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வளநாடனின் பாட்டனாராகிய குருகன் என்ற அரசன் இதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தமையால் இது குருகாபுரி என்ற பெயர் பெற்றது என்று வரலாறு கூறுகிறது.

குருகு என்பதற்கு நாரை, கோழி, சங்கு ஆகிய பல பொருளுண்டு, இங்கு குருகாகிய சங்கு வந்து மோட்சம் பெற்றதால் இது குருகூர் என்ற பெயரைப் பெற்றது என்றும் கூறுவர்.

வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் சடகோபன் என்றும் அறியப்படும் நம்மாழ்வாரின் அவதார மகிமையால் ஆழ்வார் திருநகரி என்ற பெயரை இத்தலம் பெற்றது.

இங்கு ஆழ்வார் சந்நிதியும் ஆதிப்பிரான் சந்நிதியும் தனித்தனியே உள்ளது. பெருமாள் சந்நிதியிலிருந்து 60 அடி தூரம் தள்ளி ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

வேடன் ஒருவன் தனது தவத்தால் சங்கன் என்னும் முனிவனாக மறுபிறப்பில் பிறந்து தவம் செய்து கொண்டிருந்த போது அவனைச் சந்தித்த நாரதர் அவனிடம் அவன் தவம் இயற்றும் காரணத்தைக் கேட்டார். அவன் எட்டுத் திக்கும் காவல் புரியும் ஒரு காவலனாக ஆக தவம் செய்வதாகக் கூறினான். நாரதர் அவனை நோக்கி, அதை விட மேலான பதமளிக்கும் நாராயணனைக் குறித்துத் தவம் செய்யுமாறு கூறினார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சங்கன் கேட்க,

“நீ சங்கரக உவர்க் கடலில் பிறந்து குருகூரில் ஏறி அங்கு ஆதிநாதனை 1000 ஆண்டுகள் சூழ வருவாயாக” என்று கூறினார். அவனும் அப்படியே செய்ய ஆரம்பித்தான். ஆயிரம் ஆண்டுகள் கழியவே ஆதிப்பிரான் கருட வாகனத்தில் தேவியருடன் காட்சி அளித்தார். சங்கினங்களுடன் சங்கன் ஏறி வந்த துறைக்கு திருச்சங்கணித்துறை என்று பெயர் வழங்குகிறது. அதை இன்றும் காணலாம்.

ராமாவதாரத்தில் ஶ்ரீ ராமர் தன் அவதாரத்தை முடிக்க இருக்கும் போது அவரைப் பார்க்க எமன் வந்தான். அப்போது ராமர் யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று லட்சுமணனிடம் ஆணையிட்டார். அந்தச் சமயம் பார்த்து துர்வாச முனிவர் ராமரைப் பார்க்க வரவே அவரது சாபத்திற்கு அஞ்சி லட்சுமணன் அவரை உள்ளே அனுமதித்தான்.

துர்வாசரை உபசரித்து அனுப்பி விட்டு வந்த ராமன் லட்சுமணனை நோக்கி, “என் ஆணையை மீறி மரம் போல நின்றதால் நீ மரமாக இருக்கக் கடவாய்” என்று சாபமிட்டார்.

“எப்படி அண்ணா உங்களை விட்டுப் பிரிவேன்” என்று லட்சுமணன் வருந்திப் புலம்ப, ராமன், “வருந்தாதே. சீதையைக் காட்டில் வாழச் செய்த பாவம் போக 16 ஆண்டுகள் அசையாத பிம்பமாய் நான் பிறக்க வேண்டியுள்ளது. அப்போது நான் மரமாக இருக்கும் உன் மடி மீது அமர்ந்து கொள்வேன்” என்று கூறி அருளினார்.

அதன்படியே லட்சுமணன் இங்கு வந்து ஒரு புளியமரமாக ஆனான்.

அங்கு காஸ்யப முனிவர் காரி என்ற பெயரில் ஒரு குறுநில மன்னராகப் பிறந்தார். அங்கே உடையநங்கை என்ற மங்கை அவருக்கு மனைவியாக ஆனாள். அந்த தம்பதிகளுக்கு விஷ்ணு பிரான் நம்மாழ்வாராகப் பிறந்தார். அவர் புளிய மரமாக இருந்த லட்சுமணனின் மடி மீது ஏறி 16 ஆண்டுகள் யோக நிஷ்டையில் இருந்தார்.

புளியமரத்தின் பொந்தில் 16 ஆண்டுகள் அமர்ந்து பின்னரே வாய் திறந்து அருளினார் நம்மாழ்வார்..

சேஷனான லட்சுமணனே இங்கு புளியமரமாக இருப்பதால் இது சேஷ க்ஷேத்திரம் என்ற பெயரைப் பெற்றது.

ஆழ்வார் தங்கி தவம் செய்த புளியமரம் ஏழு கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஶ்ரீ பராங்குச சதுர்வேதி  மங்கலம் என்று பெயர்.

இங்கு நம்மாழ்வாரின் விக்ரஹம் எந்தவிதமான  உலோகத்தாலும் செய்யப்படவில்லை. தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி அதில் ஆழ்வார் தனது சக்தியைப் பிரயோகிக்க, அதனால் உருவானது இந்த விக்ரஹம்.

வேதத்தின் சாரத்தை திருவாய்மொழியாக நம்மாழ்வார் அருளிச் செய்த தலம் இதுவே. நம்மாழ்வார் 11 பாக்களில் இத்தலத்தை மங்களாசானம் செய்து அருளியுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுக்க முனைந்த நாதமுனிகள் மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தாரிடம் கண்ணி நுண் சிறுத்தாம்பைப் பெற்று அதை பன்னீராயிரம் முறை ஜெபித்தார்.

உடனே நம்மாழ்வாரே பிரத்யட்சமாக எழுந்தருளி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு நாலாயிரம் பாக்களையும் நாதமுனிக்கு அருளினார்.

வராஹ அவதாரத்தைப் பார்க்க விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் கடும் தவம் புரிந்தனர். அவர்களின் தவத்தை மெச்சி வராஹ நாராயணன் தன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சி தந்தார்.

அதனால் இது வராஹ க்ஷேத்திரம் என்ற பெயரைப் பெற்றது.

இங்குள்ள கோவிலில் உள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும் வேலைத்திறம் கொண்டவையாகும்.

இங்குள்ள கல்நாதஸ்வரம் ஒரு அதிசய இசைக்கருவியாகும். இதன் நீளம் ஒரு அடி. மேல்பாகம் கால் அங்குலமும், அடிப்பாகம் ஒரு அங்குலமும் குறுக்களவைக் கொண்டது. அடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் அளிக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயர் உண்டு.

ராமானுஜர் உள்ளிட்ட பெரும் மகான்களும், வைணவ ஆசாரியர்களும் பக்தர்களும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர்.

இதன் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார்.

சடகோபனைப் போற்றி சடகோப அந்தாதி என்ற நூலையும் கம்பர் இயற்றினார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ ஆதிநாதரும் ஆதிநாத வல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

–subham–

Leave a comment

Leave a comment