சபரிமலை அய்யப்பன் கோவிலை ஆட்டிப்படைக்கும் இரண்டு பிரச்சினைகள்

ஞானமயம் வழங்கும் (14 9 2025) உலக இந்து செய்திமடல்

Written by London Swaminathan

Post No. 14,988

Date uploaded in London –  15 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 14-ம்  தேதி 2025-ம் ஆண்டு

****

SABARIMALAI TEMPLE CONTROVERSY

ILAYARAJA DONATION TO KOLLUR MOOKAMBIKAI TEMPLE

சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்;

கேரள ஹைகோர்ட் கண்டனம்

கேரளத்தில் மேலும் ஒரு இந்து விரோத நடவடிக்கை நடந்திருக்கிறது. இதற்கு கேரள ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே பம்பையில், இருபதாம் தேதி கடவுள் நம்பிக்கை  இல்லாதவர்கள் நடத்தப்போகும் ஐயப்ப  சங்கமக் கூட்டத்தினை இந்துக்கள் கண்டித்து வருகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகளை அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதமான சந்நிதானத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள துவாரபாலக சிலைகளில் பொருத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை அகற்றி சென்னைக்கு அனுப்பிய திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் செயல், முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மீறியது என்று குற்றம் சாட்டி, அந்தத் தகடுகளை உடனடியாக சபரிமலைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கோவிலின் தங்கப் பொருட்கள் தொடர்பான அனைத்து வேலைகளும் சந்நிதானத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் 2023 ஜூன் 20 அன்று வழங்கப்பட்ட உத்தரவை தேவசம் போர்ட் மீறியுள்ளது.

, “இது முற்றிலும் தவறானது; முன் அனுமதி பெற போதிய நேரம் இருந்தும் ஏன் செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பி, போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேவசம் போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த், தகடுகள் சேதமடைந்ததால், மண்டலம் காலம் முன் சரிசெய்ய சென்னைக்கு அனுப்பியதாக விளக்கம் அளித்தார். கோவில் தந்திரி (முக்கிய புரோகிதர்) அனுமதி அளித்ததாகவும், சிறப்பு ஆணையரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் வாதிட்டார்.

Board போர்ட்,  இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது, ஏனெனில் சரிசெய்யும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இது சபரிமலை கோவிலில் முதல் முறை அல்ல; பக்தர்கள் இந்தச் சம்பவத்தை கண்டித்து, கோவில் சொத்துகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம், பக்தர்களின் நம்பிக்கைக்கு இது சவாலாக மாறியுள்ளது..

****

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்குத் தடை கோரிய மனு தொடர்பாக விளக்கமளிக்கக் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர்  தேவசம் போர்டுக்கும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

பம்பையில் வரும் 20ம் தேதியன்று சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த திருவிதாங்கூர்த் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டுக்குத் தடை விதிக்கக்கோரி ஹைந்தவீயம் அமைப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது..

அந்த மனுவில், மாநாட்டைத் தேவசம்போர்டு நடத்துவதாகக் கூறி கேரள அரசே நடத்துவதாகவும், ஒரு மதசார்பற்ற அரசு மாநாடு நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம் மனு தொடர்பாக விளக்கமளிக்கக் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர்த் தேவசம் போர்டுக்கும் உத்தரவிட்டது.

****

மூகாம்பிகை கோவிலுக்கு இளையராஜா வைர கிரீடம் நன்கொடை

கர்நாடகா மாநிலத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள வைர கிரீடம், தங்க வாள் மற்றும் நகைகளை காணிக்கையாக இளையராஜா வழங்கினார்.

பிரபல இசை அமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகளை காணிக்கையாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தனது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுடன் உடுப்பியில் உள்ள  புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வருகை தந்த இளையராஜா, அம்மனுக்கு இரண்டு வைர கிரீடங்கள், ஒரு நெக்லஸ், மற்றும் வீரபத்ர சுவாமிக்கு ஒரு தங்க வாள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.

கோவில் வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த காணிக்கைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும்.

இளையராஜா புதன்கிழமை காலை, கோவிலுக்கு சென்று பூசாரிகள் முன்னிலையில் கோயிலுக்கு நகைகளை வழங்கினார்.

*****

வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் TWITTER பதிவு

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் முன்பு, 1893–ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது; அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை ஒரு திருப்புமுனை தருணமாக கருதப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலக அரங்கில் இந்திய கலாசாரம் பற்றி அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இது உண்மையிலேயே நமது வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.

****

கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த விபரத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு, கடந்த 2022 மே 15ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் ஆஜராகி, ஹிந்து அறநிலையத் துறை அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கான உரிய விளக்கங்கள் இடம்பெற்ற அறிக்கையை தாக்கல் செய்தனர்.அதையடுத்து, ”கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்,” என, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அறிநிலையத் துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ”கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதை பொது தீட்சிதர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்; தற்போது, அதை மாற்ற முடியாது,” என்றார்.

பக்தர் ராதா தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, ”கடந்த 3ம் தேதி, சிதம்பரம் கோவிலில் நேரில் ஆய்வு செய்தேன். கோவிலில் பொருத்தப்பட்ட, 55 கண்காணிப்பு கேமராக்களில், 25 மட்டுமே இயங்குகின்றன. கடந்த 2016 மே 1 முதல், சிதம்பர ரகசிய வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வு செய்ததில், 16க்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவற்றை பட்டியலிட்டு, அறிக்கையாக தாக்கல் செய்துள்ளேன்,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட பொது தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர், ‘அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின் நகல் வழங்கப்படவில்லை. பக்தர் என கூறி கொண்டு, அறநிலையத் துறைக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்’ என, குற்றம்சாட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய, யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக, பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். பக்தர் ராதா தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைக்கும் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை அக்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

****

திருப்பரங்குன்றத்தில் ஆடு , கோழி  பலியிடத் தடை

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளைப் பலியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சில இஸ்லாமிய அமைப்புகள் மலை மீது ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதால், இதற்கு பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது மத நல்லிணக்கத்தைக் காக்கும் அரசின் நோக்கம் என்றும், எந்தப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

*******

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

ஆஸ்திரேலியா விமான நிலையத்திற்கு மல்லிகைப்பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிபி மலையின் இஷ்டம், நந்தனம், அழகிய தீயே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நவ்யா நாயர் சென்றிருந்தார். அப்போது தனது தந்தை கொடுத்த மல்லிகைப் பூவில் ஒரு பகுதியைத் தலையில் சூடிய நவ்யா நாயர், மீதமுள்ள பூவைப் பையில் எடுத்துச் சென்றார்.

கொச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்றபின் அங்கிருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் பயணித்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், சட்டத்திற்கு எதிராகப் பூ எடுத்துச் சென்றதாகக் கூறி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

xxxxxx

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பாரதி நினைவு தினம் செப்டம்பர் 11  ஆம் தேதி நாடு முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது

‘முண்டாசுக் கவிஞர்’ மகாகவி சுப்ரமணிய பாரதியார்  நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வின் போது, தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள்.

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியாரின் 104ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையிலும் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

****

சத்குரு’ பேசுவது போல அச்சு அசல் ‘வீடியோ’: பெண்ணிடம் ரூ.3.75 கோடி ‘சைபர்’ மோசடி

பெங்களூரு: ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவது போல, அச்சு அசல் ‘வீடியோ’ வெளியிட்டு, 57 வயது பெண்ணிடம், 3.75 கோடி ரூபாயை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.முதலீடு கர்நாடக மாநிலம், பெங்களூரு, சி.வி.ராமன் நகரை சேர்ந்த, 57 வயது பெண், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, முகநுாலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கோவை ஈஷா நிறுவனர் சத்குரு, ‘ஆன்லைன் டிரேடிங்’ எனப்படும், இணையதளம் வாயிலாக செய்யப்படும் வர்த்தகம் குறித்து பேசுவது போல வந்த வீடியோவை பார்த்தார்.

வீடியோவில் குறிப்பிடப்பட்ட, ‘வாட்ஸாப்’ எண்ணை தொடர்பு கொண்டு, வங்கி எண் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுத்தார்.

இதையடுத்து, அந்த பெண்ணை வலீத் என்பவர் தொடர்பு கொண்டு, ‘ஆன்லைன் டிரேடிங்’ குறித்து விளக்கினார்.

வலீத் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்த அப்பெண், பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.

‘ஸ்விட்ச் ஆப்’ அந்த செயலியில், அவர் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாக காண்பித்தது. இதை நம்பியவர் ஏப்ரல் 23ம் தேதி வரை, 3.75 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தார்.

இந்த தொகையை சில நாட்களுக்கு முன், அவர் எடுக்க முயற்சித்தபோது, எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து, வலீத்திடம் கேட்டார். அதன்பின், அவரது மொபைல் போன், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் போலீசாரிடம் புகா ர் தெரிவித்தார்.

போலீசார் கூறுகையில், ‘சைபர் மோசடி நடந்து, பல மாதங்களுக்கு பின், அப்பெண் புகார் அளித்துள்ளார். பணத்தை மீட்பது சவாலான விஷயம். இருப்பினும், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

‘சத்குரு பேசுவது போல் அச்சு அசல் தொழில்நுட்பத்தில் போலியான வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதை பார்த்து, உண்மையிலேயே அவர் பேசுவதாக அப்பெண் நினைத்து, முதலீடு செய்துள்ளார்’ என்றனர்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 21–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 14 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi, Latha

Leave a comment

Leave a comment