Post No. 14,985
Date uploaded in London – —15 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நல்ல விதமாக மேம்படுத்தினால் வரும் அபூர்வ பலன்கள்!
ச. நாகராஜன்
உபநிடதம் கூறும் சத்தியம்!
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ: என்று அமிர்த பிந்து உபநிடதம் கூறுகிறது.
மனமே தான் பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணம் என்பது இதன் பொருள்.
மனதிற்கும் உடலிற்கும் உள்ள தொடர்புக்கான ஒரு சோதனை!
மூன்றாம் நெப்போலியன் அரசாண்ட சமயத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஹிப்நாடிஸம் என்ற தனது நூலில் பாரன் நில்ஸ் போஸ் (BAARON NILS POSSE) என்பவர் விவரித்துள்ளார்.
உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை அறிவதற்காக மரணதண்டனை அடைந்த ஒரு கைதியை தன் பரிசோதனைக்காக ஒரு விஞ்ஞானி கேட்க மூன்றாம் நெப்போலியன் சம்மதித்து அந்தக் கைதியை விஞ்ஞானியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டான்.
கைதிக்கோ தன் மரணம் நிச்சயம் என்ற நினைப்பு. விஞ்ஞானி ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று அவன் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போவதாகவும் அப்போது மரணம் சம்பவிக்கும் என்று கைதியிடம் கூறிவிட்டார்.
குறிப்பிட்ட நாள் வந்தது. அவன் கண்களை இறுகக் கட்டி ஒரு டேபிளின் மீது அவனைக் கிடத்தி கட்டி விட்டார் விஞ்ஞானி. அவன் காது மட்டும் எதையும் கேட்கும் நிலையில் வைக்கப்பட்டது. அந்த நிலையில் ஒரு சிறிய ஊசியை எடுத்து கைதியின் கழுத்தில் ஒரு சிறிய கீறு கீறினார் விஞ்ஞானி.
அதே சமயம் அருகில் இருந்த ஒரு குழாயிலிருந்து கீழே உள்ள பாத்திரத்தில் நீர் சொட்டும்படி செய்யப்பட்டது. மற்றபடி எங்கும் நிசப்தம். குழாயிலிருந்து தண்ணீர் சொட்டும் சப்தத்தைக் கைதி தெளிவாகக் கேட்டான். கண்கள் கட்டப்பட்டு காது மட்டும் கேட்கும் நிலையில் இருந்த அவன் தனது ரத்தமே உடலிலிருந்து வெளியே குபுகுபுவென விழுந்து சொட்டுவதாக எண்ணினான். இந்த நிலை தொடர்ந்தது. சரியாக ஆறே நிமிடங்களில் கைதி இறந்து விட்டான்! ஊசியின் மிருதுவான கீறல் மட்டுமே அவன் மீது பட்டது. ரத்தம் ஒரு சொட்டுக் கூட அவன் உடலிலிருந்து வரவில்லை. இருந்தாலும் ஆறே நிமிடங்களில் அவன் இறந்து விட்டான். காரணம் என்ன? குழாயிலிருந்து விழுந்த தண்ணீர் சத்தத்தைக் கேட்டு தன் ரத்தமே உடலிலிருந்து வெளியேறுவதாக அவன் நம்பியதால் தான்! தனது சாவு நிச்சயம் என்று அவன் நம்பி விட்டான். அதனாலேயே அவன் இறந்தும் போனான்.
மனதிற்கும் உடலிற்கும் உள்ள தொடர்பு அவ்வளவு வலிமையானது; நுட்பமானது! மனம் என்ன நினைக்கிறதோ அது உடலைப் பாதிக்கிறது.
அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள்!
இப்போது நவீன அறிவியல் பலவித சோதனைகளை மேற்கொண்டு மனதிற்கும் உடலுக்கும் உள்ள வலுவான தொடர்பை இன்னும் அதிகமாக நிரூபிக்கிறது.
பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் உள்ள உடல்நல அறிவியல் பிரிவு
கூறுகின்ற ஆய்வு உண்மைகள் வியக்க வைக்கின்றன.
மூளை இயல் நிபுணர்கள் செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படும் மூளை மேலுறையையும் அட்ரினல் மெடுல்லா என்ற பகுதியையும் இணைக்கும் Neural Network எனப்படும் நரம்புப் பின்னலமைப்பு தான், ஒரு அவசர காலத்தில் உடனடியாக செயல்படும் பகுதி எனக் கண்டுபிடித்துள்ளனர். இதுவே மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை உறுதியாக்கும் சான்றாக விளங்குகிறது.
மன அழுத்தம், மனச் சோர்வு இதர மன நிலைகள் ஆகியவை உடல் அங்கங்களின் செயல்களை மாற்றக் கூடியவை. உளவியல் சார்ந்த நோய்களுக்கும் இது காரணமாக அமைகிறது என்பது அவர்களது கண்டுபிடிப்பாகும்.
இந்தக் கண்டுபிடிப்பு Proceedings of the National Academy of Sciences (PNAS) இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மோசமான இந்த உளவியல் நோய்களைப் போக்க யோகா, தியானம் உள்ளிட்டவை எப்படி உதவுகிறது என்பதையும் மூளை இயல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
“நாங்கள் கண்டுபிடித்துள்ளது மிகவும் குறைந்த அளவு தான். இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்றும் அவர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.
நல்ல தொடர்பு தரும் நல்ல பலன்கள்!
மனதிற்கும் உடலுக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்தால் அதனால் விளையும் நற்பலன்கள் பல.
அவையாவன:
மன அழுத்த நிர்வாகம்: மனம் – உடல் தொடர்பு அன்றாட மன அழுத்த நிலையைச் சமாளிக்க உதவும்.
அதிகமான இதயத் துடிப்பு, தசைகளின் இறுக்கம் இவற்றை உடனடியாக அறியலாம். இதை உடனடியாக அறிவது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.
தூக்கத்தில் நல்ல முன்னேற்றம்:
மனத்தையும் உடலையும் இசைபட இருக்க வைத்தால் நல்ல உறக்கம் ஏற்படும். உடலின் தசை பாகங்கள் ஓய்வு பெறப் பெற நல்ல தூக்கம் ஏற்படும்.
நல்ல மனம் – உடல் தொடர்பு ஏற்பட்டால் தன்னைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். உணர்ச்சியைத் தூண்டும் ஒரு நிலை ஏற்படும் போது அதை சுலபமாகக் கட்டுப்படுத்தி நிதானமாகச் செயல்பட முடியும். இந்தத் தன் உணர்வானது நமது பழக்கவழக்கங்களை அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றத்தை நல்ல விதமாக விளைவிக்கும்.
உணவுத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவற்றில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இதன் விளைவாக மொத்த உடல் நலம் மற்றும் மன நலம் கூடும்,
இதனால் ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட்டு சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.
மனம் – உடல் தொடர்பை நல்ல விதமாக மேம்படுத்த வழிகள்!
நல்ல மனம் – உடல் தொடர்பை எப்படி அடைவது, மேம்படுத்துவது என்ற கேள்வி இப்போது எழலாம்.
அதற்கான வழிகள் இவை தான்:
தியானம்
மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடல் நலம் கூடவும் தொடர்ந்து சீராக குறிப்பிட்ட வேளையில் தியானம் செய்வது மிகவும் நல்லது.
உடல்பயிற்சி
தினமும் உடல் பயிற்சி செய்வது எண்டார்பினை ஊக்குவிக்கும் விளைவுகளைச் செய்கிறது. அது மனநிலையை எப்போதும் மேம்பட்ட நிலையில் வைக்கும். மனச்சோர்வு, கவலை, அழுத்தம் ஆகியவற்றை நீக்கும்.
சமச்சீர் உணவு
நல்ல சத்துள்ள உணவு நமது உடல் மற்றும் மனதின் மீது நேரடியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்த வல்லது. சமச்சீர் உணவைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தால் நமது மனம் தெளிவடையும். உணர்வுகள் நிலையாக இருக்கும். உடலில் சக்தி கூடும்.
தேவையான தூக்கம்
மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. தூக்கமின்மை பலவித உடல் கோளாறுகளுக்கு ஆரம்பமாக அமைகிறது. நல்ல தூக்கம் மூளையைத் திறம்படச் செயல்பட வைக்கிறது. அன்றாடம் நல்ல தூக்கத்தைக் கொள்வது உடல்- மனம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
இப்படி ஏராளமான நன்மைகளை நல்ல மனம்- உடல் தொடர்பு மூலம் அடையலாம். மோட்சத்திற்கே இது வழி வகுக்கும் என்று உபநிடதம் கூறும் போது மற்றவையெல்லாவற்றையும் அடைய முடியாதா என்ன?
***