
Post No. 15,004
Date uploaded in London – —20 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.comxxxx
அமர்நாத் குகையின் அதிசய வரலாறு!
ச. நாகராஜன்
ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் பெஹல்காம் தாலுக்காவில் லிடர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிதமான குகை ஸ்தலம் அமர்நாத்.
ஹிந்துக்கள் யாத்திரையை மேற்கொள்ளும் அற்புதமான இடம் இது.
வருடத்தில் பெரும்பாலான நாட்கள் இந்த குகையை பனி மூடி இருக்கும்
ஜூலை- ஆகஸ்ட் மாதம் மட்டும் பனி சற்று விலகி இருக்க குகை தென்படும். இது ஹிந்து பஞ்சாங்கத்தின் ஆவணி மாதத்தை ஒட்டி நிகழும்.
அப்போது அமர்நாத் சிவலிங்கத்தைத் தொழுது வழிபட பாரதத்தில் உள்ள மக்கள் அனைவரும் திரள்வர்.
குகையின் உள்ளே ஸ்வயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. இது குகையின் மேலிருந்து நீர்த்துளிகள் சுண்ணாம்பு மீது விழ அது கட்டியாகி உறைவதால் செங்குத்தாக எழுந்து லிங்க வடிவமாக ஆகிறது.
கல்ஹணரின் ராஜ தரங்கிணி மற்றும் நீலமாதா புராணம் உள்ளிட்ட பல பழம்பெரும் நூல்களில் அமர்நாத் யாத்திரை பற்றி குறிப்பிடப்படுகிறது.
பிராங்கோயில் பெர்னியர் (Francois Bernier ) தனது நினைவேடுகளிலும் (Memoirs) இதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏராளமான வரலாறுகள் இந்த குகை பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. ஏராளமான நூல்களும் இது பற்றி எழுந்துள்ளன.
புராண வரலாற்றின் படி அமர்நாத் குகையை முதலில் கண்டுபிடித்தவர் பிருகு மஹரிஷி. காஷ்மீர் பள்ளத்தாக்கு பல நூறு ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தது. காஸ்யப மஹரிஷி இந்த நீரை எல்லாம் நீரோடைகள் பலவற்றை உருவாக்கி வெளியேற்றினார்.
இமயமலைக்கு வந்து கொண்டிருந்த பிருகு ,மஹரிஷி இதை அப்போது கண்டுபிடித்தார்.
அமர்நாத் குகை பற்றி பிரிங்கிஷ் சம்ஹிதா மற்றும் அமர்நாத் மாஹாத்மியம் உள்ளிட்ட நூல்களில் விரிவாகக் காணலாம்.
காலம்காலமாக இந்த வட்டாரத்தில் வழங்கி வரும் நாடோடிக் கதைகள் பலவும் உண்டு.
ஒரு சமயம் சிவபிரானிடம் பார்வதி தேவி என்றும் நிலைத்து வாழும் அமர வாழ்வு குறித்த ரகசியத்தைக் கூறுமாறு கேட்டார். சிவபிரான் அதை பார்வதி தேவிக்கு விளக்கினார். அந்த ரகசியத்தை விரிவாகக் கூறுமாறு கேட்க அதை ஒரு தனியான ரகசியமான இடத்தில் மட்டுமே கூற முடியும் என்றார் சிவபிரான்.

ஒருவரும் அதைக் கேட்டு விடக் கூடாது என்று சிவபிரான சொல்லவே அவர்கள் இருவரும் இந்த அமர்நாத் குகைக்கு வந்தனர்.
நந்தியை பெஹல்காமில் இருக்கும் படி கூறிய சிவபிரான் தலையில் இருந்த சந்திரனையும் மார்பை அலங்கரித்த பாம்பையும் சேஷாங் ஏரியில் விடுத்தார். கணேசரை மஹாகுண மலையில் இருக்கச் செய்தார். காற்று, ஆகாயம், அக்னி, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களையும் பஞ்சதர்ணியில் இருக்கச் செய்தார். தனது உடைமைகள் அனைத்தையும் இப்படி நீத்து விட்ட சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்து ஆடினார்.
பின்னர் தேவி பார்வதியுடன் அமர்நாத் குகைக்குள்ளே சிவபிரான் நுழைந்தார். அங்கே சமாதி நிலையில் ஆழ்ந்தார். அதற்கு முன்பாக காலாக்னியை உருவாக்கி காலாக்னியிடம் புனிதமான குகையைச் சுற்றி தீ பரவச்செய்யுமாறு கூறினார். ஒருவிதமான ஜந்துவும் உள்ளே தான் அமரத்தன்மை அடையும் ரகசியத்தை தேவியிடம் கூறும் போது கேட்டுவிடக் கூடாது என்று அவர் ஏற்பாடுகளை இப்படிச் செய்த போதிலும் கூட இரு புறாக்கள் இந்த ரகசியத்தை ஒட்டுக் கேட்டு விட்டன. இவைகள் அங்கு இன்றும் சுற்றுகின்றன.
இப்படி பழங்காலத்திய நாடோடிக் கதையைக் கூறும் இங்குள்ள பூர்வகுடிவாசிகள் அங்கே குகையின் மேலே சுற்றித் திரியும் புறாக்களைக் காண்பிக்கின்றனர். இந்த உயரத்தில் இவ்வளவு குளிரில் வேறு புறாக்கள் பறப்பது சாத்தியம்தானா என்றும் வினவி தங்கள் கூற்றை மெய்ப்படுத்துகின்றனர்..
கட்டுரை ஆதாரம்: 5-7-25 OPINDIA செய்தி அறிக்கை
TRUTH VOL 93 ISSUE 22 Dated 12-9-25 யில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கம் : இந்தக் கட்டுரை ஆசிரியர்
***