Post No. 15,008
Date uploaded in London – 21 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழனுக்கு தாலி உண்டு! தமிழர்கள் தீ வலம் வந்து திருமணம்!!
அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்
சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும்
தமிழ்ப் பல்கலைக்கழகம் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996
இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ் இராம கிருஷ்ணன் , மீனாட்சி புஸ்தக நிலையம், மதுரை, 1971
தமிழர்கள் பற்றி கால்டுவெல் கும்பல்களும் திராவிடக் கும்பல்களும் டே ஒன் DAY ONE முதல் பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி வருகின்றன. முட்டாள் தமிழர்களை BRAIN WASH மூளைச் சலவை செய்துவருகின்றன; இந்தக் கும்பல்களுக்கு தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மு சண்முகம் பிள்ளையும் வலது / சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ் அறிஞர் எஸ் ஆர் கே யும் செமை அடி கொடுக்கின்றனர். எஸ் ஆர் கே எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் மதுரைப் பலக்லைக்கழகத்தில் கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் ; மதுரை வடக்கு மாசி வீதியில் எங்கள் வீட்டுக்கு ஐந்து வீடுகள் தள்ளி வசித்ததால் அடிக்கடி அவருடன் காரசாரமாக விவாதம் செய்வோம். வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிரசாரத்தினால் ஆங்கிலப் பேராசிரியர் பதவியை இழந்தவர்; அவரிடம் நான் எம் ஏ படித்தேன்.
ஒல்காப்புகழ் தொல்காப்பியனைப் புகழ்ந்த உச்சிமேற்புலவன் நச்சினார்க்கினியன் , அவர் ஒரு பிராமணன் என்றும் அவரது பெயர் த் ருண தூமாக்கினி என்றும் எழுதிவைத்தார்; அந்தப் பிராமண தொல்காப்பியனோ சதுர்வேதி- நான்மறைமுற்றிய –அதங்கோட்டு ஆச்சார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கி தொல்காப்பியதத்தை தமிழ் கூறு நல்லுலகத்துக்கு ஈந்தார் .அவரோ மனு நீதி சொல்லும் எட்டுவகைத் திருமணம் பானிணீயம் சொல்லும் உவமை இயல் ஆகியவற்றை அப்படியே கொடுத்தார்; கூசாமல் நூல் முழுதும் அறம்,பொருள் இன்பம் என்ற தர்மார்த்த காமத்தையும் சொல்லி ஸம்ஸ்க்ருதச் சொற்களை அள்ளித் தெளித்தார் ; இதை எல்லாம் மறைக்க திராவிடர்கள் அவருக்கு மீசை வைத்து மேல் துண்டு போட்டுப் படமும் வெளியிட்டனர்; திருவள்ளுவரின் பூணூலை மறைத்து விபூதியை அழித்தது போல இதைச் செய்தவர்கள் இப்போது வள்ளலாளரின் விபூதியை அழித்து வடலூர் ஆஸ்ரமத்தை கபளீகரம் செய்துவருகின்றனர் . நிற்க ;தாலி பற்றிக் காண்போம்.
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.– உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்; புறம் 127
ஐம்படைத் தாலியையும் புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக் காப்பணியாக அணிவிக்கும் வழக்கத்தை ஏற்கும் திராவிடங்கள் இந்தத் தாலியை மட்டும் ஏற்கவில்லை; நல்ல வேளையாக அதுகள் சொன்னது போல தாலியை அறுக்காமல் தமிழ்ப்பெண்கள் வாழ்வது பெருமைக்குரியது.
இதில் ஆய் அண்டிரன், மகளிரின் தாலியைத் தவிர ஏனைய அனைத்தையும் தானம் செய்துவிட்டார் என்பதை ஈகை அரிய இழையணி என்ற சொல் தொடரின் மூலம் அறிகிறோம்
முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதில் திராவிடங்களை மிஞ்ச எவராலும் முடியாது ; சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், கண்ணகி -கோவலன் எல்லாம் இரண்டாம் நூற்றாண்டு — அதாவது சங்ககாலம் — என்று ஒரு பக்கம் தம்பட்டம் அடிக்கும் திராவிடங்கள் சிலப்பதிகாரத்தில் பார்ப்பனன் செய்து வைத்த அக்கினி சாட்சி கல்யாணத்தை மறைத்தும் பசப்பியும் வருகின்றன ; இதன் பெயர் திராவிடியன் மாடல் DRAVIDIAN MODEL!
கோவலன் கண்ணகியை மணந்தபோது ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி’யதாகவும் மணமக்கள் தீ வலம் செய்ததாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். இதைச் சொல்லும்போது மட்டும் சிலப்பதிகாரம் ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று சொல்லி மழுப்பி விடுகின்றனர்.
ஆனால் திராவிடர்களுக்கு செமை அடி கொடுக்கும் வாதத்தை பேராசிரியர் சண்முகம் பிள்ளை நமக்கு அளிக்கிறார்
குறுந்தொகை 106
106. குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி, தோழி! நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
”தான் மணந்தனையம்” என விடுகம் தூதே.
இதில் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
”தான் மணந்தனையம்’
என்று அக்கினி சாட்சியாக கல்யாணம் செய்துகொண்டதை சொல்கிறாள் ; எல்லாவற்றுக்கும் மேலாக நெய் பெய் தீ என்னும் உவமை சம்ஸ்க்ருத நூல் முழுதும், உபநிஷத் தோறும் வழங்கி வருகிறது; அதுமட்டுமல்ல இது யாக யக்ஞங்களைத் தமிழர்கள் செய்ததால் பரவிய உவமை என்பதையும் அறிய முடிகிறது.
தமிழர்கள் பங்குனி மாதம், ரோகிணி , கார்த்திகை, ஓணம், ஆருத்ரா என்னும் ஆதிரை நட்சத்திரம் ஆகியவற்றை அப்படியே ஸம்ஸ்க்ருதப் பதம் மூலம் சொல்வதையும் கவனிக்க வேண்டும் இதில் ரோகிணிக்கு சம்ஸ்க்ருதத்தில் உள்ள வண்டி என்ற SYMBOL சிம்பலையும் சகடம் என்ற சொல்லால் வடித்துள்ளனர்.
இதை இந்தியப்பண்பாடும் தமிழரும் என்ற நூலில் எஸ் ராமகிருஷ்ணன் 1971- ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் காட்டி,
போதாயன கிருஹ்ய சூத்திரமும், மானவ கிருஹ்ய சூத்திரமும் கூறியிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார் ; அவைதான் கல்யாணத்துக்கு உகந்த நட்சத்திரம் ரோகிணி என்று முன்காலத்திலேயே சொல்லிவிட்டன.
அதுமட்டுமல்லாமல்
பாணிக்கிரகணம் என்னும் கைத்தலம் பற்றுதல், ஓமம் வளர்த்தல் தீ வலம் செய்தலை கலித்தொகையிலும் 69-3/5 காண்கிறோம் என்கிறார் SRK எஸ் ஆர் கே.
காம உணர்வு கொண்டு திருமணம் செய்துகொண்டு மனைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி. இவள் தெரிவிக்கும் செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.
போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,
ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
திருமணம் செய்துகொள்ளும் அந்தணன் தீயை வலம் வருவான். அதுபோல அன்னம் தன் பெடையுடன் தாமரையைச் நுற்றிவரும் புனல் மிக்க ஊரை உடையவனே!
தாமரைப் போது மலரும் பொய்கை. புதிய போது கட்டவிழும் தாமரை, தாது சூழ்ந்திருக்கும் தாமரை. தன்னந்தனியே பூத்திருக்கும் தாமரை. அதனை அழகிய தூவியை உடைய அன்னம் தன் அழகு-நடை போடும் பெண்-அன்னத்தோடு திரிந்தது. காதல் கொள்ளும் திருமணச் சடங்கு நாளில், தன் புத்தாடையுள் ஒடுங்கிக்கொண்டு ஆசை மிக்கு, மான் போல மருண்டு பார்த்துக்கொண்டு வரும் தன் மணப்பெண்ணோடு வேதம் ஓதும் அந்தணன் வலம் வருவது போல அன்னம் தாமரையைச் சிற்றிவரும்.
புதுமணப் பெண்ணும் மாப்பிள்ளையும் – காதல் அன்னங்கள்
வலம் வரும் தீ – தனியே பூத்திருக்கும் தாமரை.– கலித்தொகை 69 Kalitogai 69
***
MY OLD ARTICLE ON TAMIL WEDDING
ரோகிணி நட்சத்திர மர்மம்! தமிழர் திருமணம் நடத்தியது ஏன்?
கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1055; தேதி:– மே 21, 2014.
தமிழர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் திருமணம் செய்ததாக அகநானூற்றில் இரண்டு பாடல்களும் கண்ணகி- கோவலன் திருமணம் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்ததாக சிலப்பதிகாரமும் கூறும். ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம் ஏன்?
தமிழர்களுக்கு சோதிடத்திலும் பல்லி சொல்லும் பலனிலும், புள் (பட்சி) நிமித்தத்திலும், தும்மல்,கண் துடிப்பு விஷயத்திலும், அபார நம்பிக்கை இருந்ததை சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்த ரோகிணி நட்சத்திர நம்பிக்கை வட இந்தியாவிலும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் இது இடம்பெறும் 500, 600 ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கிறது.
இந்துக்கள் வட இமயம் முதல் தென் குமரி வரை (‘ஆ சேது ஹிமாசலம்’) — ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல, ஆரிய – திராவிட இனவாதம் பேசி நாட்டைப் பிரிக்க, இந்து மதத்தை ஒழிக்க முற்பட்டோரின் பொய்மை வாதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
போதாயன கிருஹ்ய சூத்திரம், மனுதர்ம சாஸ்திரம், வால்மீகி ராமாயணம், காளிதாசனின் படைப்புகள் முதலியன நிலவு- ரோகிணி நெருக்கத்தைப் புகழ்ந்து உரைக்கின்றன. கணவன் – மனைவி, காதலன் – காதலி அன்புக்கு உவமையாகப் பயன்படுவது ‘’நிலவு – ரோகிணி’’ நெருக்கம்தான். சங்க இலக்கியத்திலும் இந்த நெருக்கம் பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
அகநானூற்றில் இரண்டு கல்யாணப் பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் தமிழர் திருமண முறையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதை விட்டால் அடுத்தபடியாக சிலப்பதிகாரத்தில்தான் கல்யாணக் காட்சி. அதையும் விட்டால் ஆண்டாளின் வாரணம் ஆயிரத்தில்தான் அடுத்த கல்யாணக் காட்சி வருகிறது.
ஆல்டிபாரன் என்பது ரோகிணியின் அராபிய பெயர்
அகநானூறு 86 (நல்லாவூர்க் கிழார்) பாடிய பாடலில்
“கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென……….”
பொருள்:- வெண்மையான சந்திரனை குற்றமில்லாத சிறந்த புகழினை உடைய உரோகிணி என்ற நாள் (நட்சத்திரம்) அடைந்தது…………………………
அகநானூறு 136 (விற்றூற்று மூதெயினனார் பாடிய பாடல்)
“மைப்பு அறப்புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப்பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து………………”
(திங்கள்=சந்திரன், சகடம்=ரோகிணி நட்சத்திரம்)
இந்த இரண்டு பாடல்களும் தரும் பொருளின் சுருக்கம்: கல்யாணம் என்பது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நாளில் நடைபெறும். அந்த வீட்டில் ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாடு (வெண்சோறு+ நெய் அல்லது உளுந்து கலந்த பொங்கல்) கிடைக்கும். சுமங்கலிகள் கூடி நின்று மங்கள முழக்கம் செய்வர். வீடு பந்தல் போட்டு, மணல் தூவி அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுவற்றில் தெய்வ ஓவியங்கள் இருக்கும்.புத்தாடைகள் உடுத்தி இருப்பர் முதலிய பல விஷயங்களை நீண்ட பாடலில் காணலாம்.
வால்மீகி ராமயணத்தில் பல இடங்களில் சந்திரனைச் சேர்ந்த ரோகிணி போல என்ற உவமை வருகிறது. காளிதாசனும் விக்ரம ஊர்வசீயம், சாகுந்தலம் நாடகங்களிலும், ரகுவம்ச காவியத்திலும் இந்த உவமைகலைப் பயன்படுத்துகிறான். ஆனால் இவைகளுக்கெல்லாம் முன்னர் படைக்கப்பட்ட போதாயன க்ருஹ்ய சூத்திரத்திலும், மனு தர்ம சாஸ்திரத்திலும் ரோகிணி நட்சத்திர நாள் திருமணத்துக்கு உரிய நாள் என்று தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதை இளங்கோவும் நல்லாவூர்க் கிழாரும் விற்றூற்று மூதெயினனாரும் பின்னொட்டிச் செல்வது பாரதீய கலாசாரத்தின் செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் மணநாள் குறிப்பு தவிர, பொதுவாக ரோகிணி-நிலவு உறவு பற்றிக் கூறும் செய்யுள்கள்: திருமுருகாற்றுப்படை வரி 87/ 88, நெடுநல்வாடை-163, புறம் 60, 160 பாடல்கள்.
சம்ஸ்கிருத இலக்கியத்தில்:- ஐதரேய பிராமணம், சதபத பிராமணம் மற்றும் போதாயன, மானவ க்ருஹ்ய சூத்திரங்கள்; வால்மீகி ராமாயணம்(5-33-7;5-24-10;5-37-24;5-15-22 etc). காளிதாசனின் விக்ரம ஊர்வசீயம்3-4, 3-12
சாகுந்தலம் 7-22; ரகு வம்சம்-14-40.
புராணக் கதை
தக்ஷன் என்ற ரிஷியுனுடைய 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு செலுத்தவே பற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். அவர் சந்திரன் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிட்டார். எல்லா மனைவியரும் அவ்வளவு கடுமையான சாபம் வேண்டாம் என்று மன்றாடினர்.
இந்துமதத்தில் கடவுளேயானாலும் ஒரு வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அதைத் திரும்பி எடுக்கவே முடியாது ஏனெனில் இது சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த மதம். ஆனால் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உடனே நிலவு என்பது 15 நாள் தேய்ந்து (கிருஷ்ண பட்சம்) அடுத்த 15 நாள் வளரட்டும் என்றார் தக்ஷன்.
உண்மையில் இது வான சாஸ்திர உண்மை. அந்தக் காலத்தில் விஞ்ஞானப் பாடங்களை இப்படிக் கதையாகச் சொல்வது மரபு. ஆக நிலவின் சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் பற்றி விளக்க இப்படிக் கற்பனைக் கதை உற்பத்தி செய்தனர்.
ஆயினும் ரோகிணிக்கு அதிக அன்பு காட்டியது என்ன விஞ்ஞான நிகழ்ச்சி என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஒருவேளை முன்னொரு காலத்தில் நிலவு ரோகிணிக்கு மிக அருகில் வந்திருக்கலாம். அல்லது அந்த இடத்தைக் கடக்க கூடுதல் நாட்கள் எடுத்திருக்கலாம். இப்போது நிலவு 29 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது.
இதே போல பூமியே நடுங்கும்படியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதன் பிறந்ததாகவும் இன்னொரு புராணக் கதை கூறுகிறது. இதில் பிருஹஸ்பதியும் சம்பந்தப்படுவதால் இதுவும் ஒரு விண்வெளி விஞ்ஞானக் கதையே. பூமி, நிலவு மோதலால் அல்லது குரு (வியாழன் கிரக ஈர்ப்பால்) ஈர்ப்பால் புதன் உருவாகி இருக்கலாம். எதிர்காலத்தில் புதன் கிரகம் பற்றி புதிய தகவல் வரும்போது நம் புராணக் கதைகள் விஞ்ஞானக் கதைகளாகக் கருதப்படும்.
கிரகணம் பற்றி நாம் நன்கு அறிந்து, அதைக் கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும் பாமர மக்களுக்கு இதெல்லாம் விளங்காது என்பதால் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று கதை சொல்லுவது போலத்தான் நிலவு- ரோகிணி கதையும்.
நிலவு பூமியை ஒரு முறை வலம் வர 27 நாட்கள் ஆகும். பூமியும் சூரியனைச் சுற்றுவதால் 27 நாட்களுக்குள் பூமி இரண்டரை நாள் தூரம் முன்னேறி இருக்கும். இதனால் நிலவு ஒரு முறை பூமியை வலம் வர ஆகும் நாட்கள் 29-5 (இருபத்தொன்பதரை) நாட்கள். இதை ஒரு சாந்திர மாதம் என்பர். நிலவு போகும் பாதையில் தெரியும் 27 நட்சத்திரங்களை அவனது மனைவியர் என்று பாமர மக்களுக்காக கதை சொன்னார்கள்.
நிலவுக்கு ‘’அருகில்’’ ரோகிணி நட்சத்திரம் வருகிறது என்பதெலாம் மாயத்தோற்றமே. ஏனெனில் நட்சத்திரங்கள் கோடி கோடி மைல்கள் அப்பால் இருக்கின்றன. நிலவு அவைகளைக் கடந்து போவது போலத் தோன்றினாலும் நிலவுக்கும் அவைகளுக்கும் இடையில் கோடானு கோடி மைல்கள் இருக்கின்றன.
பாலகங்காதர திலகர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை வைத்து அதன் காலம் கி.மு.6000 என்று கணித்தார். இவர் ஆராய்வது தெரியாமல், தனியாக ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் ஜாகோபியும் வான சாஸ்திரத்தை வைத்து ரிக் வேதம் கி.மு.4500 என்று கூறினார்.
பகவத் கீதையில் கண்ணன்– ‘’மாதங்களில் நான் மார்கழி’’– என்று கூறுவது போல கி.மு.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினியும் மார்கழியே வருடத்தின் முதல் மாதம் என்கிறார். அப்போதைய கோள் நிலை கொண்டு கணிக்கப்பட்ட கணக்கில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழர்களும் வடவர்களும் ஏன் ரோகிணியில் கல்யாணம் செய்தார்கள் என்பது தெரியவரலாம்.
contact swami _48@yahoo.com
–SUBHAM—
TAGS- தமிழனுக்கு, தாலி உண்டு, தமிழர்கள், தீ வலம் வந்து திருமணம், திராவிடர்களுக்கு செமை அடி, சண்முகம் பிள்ளை