
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,012
Date uploaded in London – 22 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
21-9-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை!
கோலாப்பூர் மஹாலெக்ஷ்மி ஆலயம்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
வந்தே பத்மகராம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஷ்வே பங்கஜஸங்க்க பத்மநிதிபிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
ஸரஜிஜ நயனே ஸரோஜஹஸ்தே
தவளதராம் சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
ஶ்ரீ மஹா லக்ஷ்மி ந,மஹ
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது 1மஹராஷ்டிர மாநிலத்தில் பஞ்சகங்கா நதி தீரத்தில் அமைந்துள்ள கோலாப்பூர் என்ற திருத்தலமாகும்.
இது மும்பை நகரத்திற்கு தெற்கே 237 கிலோமீட்டர் தூரத்திலும் புனே நகருக்குத் தெற்கே 656 கிலோமீட்ட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
மஹாலெக்ஷ்மிக்கு என அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
கோலாசுரன் என்ற அசுரன் தனது புத்திரர்கள் தேவர்களால் கொல்லப்படவே மஹாலக்ஷ்மியிடம் வந்து இந்த இடத்தைத் தனக்கு நூறு ஆண்டுகள் தருமாறு வேண்ட தேவியும் அப்படியே அருள்கிறாள். நூறு ஆண்டுகள் இங்கு இருந்த கோலாசுரன் அனைவருக்கும் கொடுமைகள் பல செய்து வந்தான். நூறு ஆண்டுகள் முடிந்தவுடன் லக்ஷ்மி இங்கு வந்து கோலாசுரனை வதம் செய்தாள். இறக்கும் போது கோலாசுரன் இந்த இடத்திற்குத் தன் பெயரை இட வேண்டுமென்று வேண்ட அதன் படியே தேவி அருள் புரிந்தாள். இந்த இடம் கோல்ஹாபூர் என்று பெயரிடப்பட்டது.
கருங்கல்லில் அமைந்த அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் மகுடம் தரித்து தேவி காட்சி தருகிறாள். அலை பாயும் கூந்தலுடன் தங்க நிற மேனியுடன் தேவியின் திருவுருவம் திகழ்கிறது.கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலிப் பழமும், வலது மேல் கரத்தில் தலைகீழாகத் தரையைத் தொட்டபடி உள்ள கௌமோதகி என்ற தண்டாயுதமும் இடது மேல்கரத்தில் கேடகம் என்ற கவசமும் கீழ் இடது கரத்தில் பானபத்திரம் என்ற கிண்ணமும் காணப்படுகின்றன. தேவி மேற்கு நோக்கிக் காட்சி தருகிறாள்.
இந்த விக்ரஹம் மணிக்கற்களால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். சுமார் 40 கிலோகிராம் கொண்ட இந்த விக்ரஹம் மூன்று அடி உயரம் உள்ளது.
கோவிலில் உள்ள ஒரு சுவரில் ஶ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
செல்வத்தை அள்ளித் தரும் அழகிய விக்ரஹத்தின் காட்சியில் ஈடுபட்டு பக்தர்கள் மனமுருகி வழிபடுகின்றனர். தினமும் இங்கு மாலையில் லக்ஷிமி புராண வரலாறிலிருந்து ஒரு திவ்ய சரித்திரம் சொல்லப்படுகிறது.
.கோவிலின் மேற்குத் திசை சுவரில் ஒரு திறந்த ஜன்னல் உள்ளது.
இதன் வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 9, நவம்பர் 10, , 11, ஆகிய தேதிகளில் சூரியன் தன் ஒளிக்கதிர்களை விக்ரஹத்தின் பாதங்களில் தொடும்படியாகச் செய்து சூரியன்
சூரிய பூஜை செய்கிறான்.
மூன்று நாட்கள் விழும் சூரிய கிரணங்கள் முதல் நாளில் தேவியின் பாதத்திலும் அடுத்த நாள் தேவியின் இடை பாகத்திலும் மூன்றாம் நாள் தேவியின் திருமுகத்திலும் விழுவது காணக் கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
இது கிரண் உற்சவம் என்ற பெயரில் பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான மக்கள் இந்த தினங்களில் இங்கு கூடுகின்றனர்
கடந்த பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோவில் செம்மைப்படுத்தப்பட்டதோடு விரிவு படுத்தப்பட்டும் உள்ளது. இது பற்றிய சுவையான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று ஏடுகளிலிருந்து அறியலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ மஹாலெக்ஷ்மி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
***