Post No. 15,020
Date uploaded in London – —24 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2025 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமான கட்டுரை!
தெரியாமல் ஆளைக் கொல்லும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்!
ச. நாகராஜன்
தெரிந்தே கொல்லும் வியாதிகள் உலகத்தில் ஏராளம் இருக்க தெரியாமல் ஆளைக் கொல்லும் ஒரு புதிய பொருள் நவீன உலகத்தில் உண்டாகி இருக்கிறது. இந்தப் பொருளை உருவாக்கியவர்கள் மனிதர்களே!
இந்தப் பொருள் தான் மைக்ரோ பிளாஸ்டிக்!
பெரிய பிளாஸ்டிக் துகள்களிலிருந்து உருவாகும் இவை ஒரு நானோ மீட்டரிலிருந்து 5 மில்லிமீட்டர் வரை இருக்கும்.
ஒரு நானோ மீட்டர் என்பது மனித தலைமுடியின் அகலமாகும்.
சரி, இந்த பிளாஸ்டிக் துகள்களை உருவாக்குபவர் யார்? மனிதர்களே தான்!
சிகரட் பில்டர்கள், நைலான், பாலிஸ்டர் துணிகள், ஏராளமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இவற்றின் மூலம் உருவாவது தான் பிளாஸ்டிக் துகள்கள்!
கடல் உணவிலிருந்து நமக்கு விடமின் டி மற்றும் ஒமேகா 3 கிடைப்பது உண்மை தான்! ஆனால் இப்போது கடல் வாழ் மீன்களைச் சாப்பிடும்போது நாம் எண்ணற்ற மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பது அதிர்ச்சி தரும் உண்மை!
மனிதர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தூக்கி எறியும் கழிவுப் பொருள்களை கடல் வாழ் உயிரினங்கள் உண்ண, அது நம் உணவுச் சங்கிலியின் உள்ளே புகுந்து விடுகிறது.
ஒரு இஃப்ரிமெர் ஆய்வின் படி ( IFREMER RESEARCH) 24400 கோடி அளவு மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கடலின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன.
1950களிலிருந்து பிளாஸ்டிக்கின் உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போனது. ஐரோப்பாவில் மட்டும் 2022ம் ஆண்டு வாக்கில் இது 580 லட்சம் டன்களை எட்டியது.
அப்படி என்றால் உலகளாவிய விதத்தில் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து திடுக்கிடலாம்!
2017ல் பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதன்படி ஒவ்வொரு மனிதனும் வருடத்திற்கு 11000 பிளாஸ்டிக் துகள்களை உண்ணுகிறார்கள்!
காலப்போக்கில் காற்றினாலும், கடல் அலைகளினாலும் மைக்ரோ ஆர்கானிஸம் உடைந்து தூள் தூளாகி நானோ பிளாஸ்டிக்காக் ஆகிறது.
இவை சுற்றுப்புறச் சூழலில் காற்று, நீர், மண் உள்ளிட்டவற்றில் கலந்து அவற்றை மாசு படுத்துகிறது.
இந்த மோசமான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் ஆக்கிரமிப்பிற்து பயோஅக்குமுலேஷன் (bioaccumulation) ‘என்று பெயர்.
இவை கடல் வாழ் உயிரினங்களின் மீது எல்லையற்ற மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சோதனைச்சாலைகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை ஜீரண உறுப்புகளை தடைப்படுத்தி டிஎன் ஏ சேதத்தைக் கூட விளைவிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிளாஸ்டிக்கில் அதிக அளவு phthalates இருப்பதால் எண்டாக்ரின்களை சீர் குலைக்கிறது. இவை ஹார்மோன் அமைப்புகளில் சேர்ந்து கடல்வாழ் உயிரினங்களையும் மனிதர்களையும் ஆபத்துக்குள்ளாக்கி ஆரோக்கியக் கேட்டை உருவாக்குகிறது.
அடுத்து மனிதரை எடுத்துக் கொண்டோமானால் மனிதரிடம் தீய பாக்டீரியாக்களைச் செலுத்தி அபாயகரமான வியாதிகளை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உருவாக்குகின்றன.
மனிதர்கள் வாய் மூலமாக உண்ணும் உணவுப் பொருள்களாலும், சுவாசிக்கும் மூச்சுக் காற்று மூலமாகவும்,, தோலில் ஏற்படும் தொடுதலாலும் மைக்ரோ பிளாஸ்டிக்கின் அபாயமான விளைவுகளுக்கு ஆளாகிறார்கள்!
குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதனாலும் சிறுவர்கள் வாழ்கின்ற சுற்றுப்புறச் சூழலாலும் தொழிலாளர்கள் டெக்ஸ்டைல் ஆலைகள், கட்டுமானப் பணிகள், உள்ளிட்டவற்றில் பணியாற்றும் போதும் இதனால் அதிக அளவு அபாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
இந்த அபாயத்தை எப்படித் தடுப்பது?
சாமானியன் கூட இந்த அபாயத்தை முயற்சி செய்து தடுத்து விடலாம்.
இன்று பெருமளவும் நீரைப் பருக்க வாட்டர் பாட்டில்களே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையோ அல்லது ஸ்டீல் வாட்டர் பாட்டில்களையோ உபயோகிக்கலாம்.
வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைக் கணக்கெடுத்து ஒவ்வொன்றாக அவற்றை அதற்குரிய கழிவுப் பெட்டிகளில் போட்டு விடலாம்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து அதற்குப் பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தலாம்.
சிந்தடிக் பைபர்களினால் ஆன துணி வகைகளின் (synthetic fabrics (polyester, nylon,acrylic) பயன்பாட்டை அறவே நீக்கலாம்.
கார் டயரிகளில் உள்ள இவை சாலைகளில் உரச உரச ஏராளமான துகள்களை சுற்றுப்புறமெங்கும் தூவிக் கொண்டே செல்கிறது. ஆகவே கார் டயர்களின் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.
வீட்டில் உள்ள பைபர் தரை விரிப்புகள், மர சாமான்கள், துணி வகைகளிலிருந்து ஏற்படும் தூசிகளைத் தவிர்க்கலாம்.
தனிநபர் மேக் அப் சாதனங்களில் – காஸ்மெடிக் மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. ஆகவே இவற்றைத் தவிர்க்கலாம். இவற்றை வாங்கும் போது பாலி எதிலின் பாலி ப்ரொபிலின் நைலான் (polyethylene (PE), polypropylene (PP), nylon (PA))அடையாளக் குறிகள் உள்ளதா என்று பார்த்து அவற்றைத் தவிர்க்கலாம்.
அடிக்கடி துணிகளைத் தோய்க்காமல் சீரான இடைவெளியில் தோய்த்து துகள்களை உருவாக்குவதைத் தடுக்கலாம். அல்லது ஆர்கானிக் காட்டன் துணிகளை மட்டுமே பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் நீரில் 2,40,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை அல்லவா? ஆகவே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வாங்குவதை அறவே நிறுத்தலாம்.
மறு சுழற்சிக்கு உள்ளாகும் பிளாஸ்டிக் பொருள்களைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
கடைக்காரரிடம் பேக்கிங் செய்யும் போது பிளாஸ்டிக் பொருள்கலைப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக முன்னமேயே சொல்லி விட வேண்டும்.
டெப்லான், நான் – ஸ்டிக் சமையல் சாதனங்களை வாங்கவே கூடாது.
நாளடைவில் டெப்லான் மைக்ரோ பிளாஸ்டிக்கை உணவுப் பொருளில் சேர்த்து விடும்.
சூயிங் கம் சாப்பிடுபவராக இருந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அதிலும் பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது!
இப்படி அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் இனி ஆய்வுக்கு நாமே உட்படுத்தி மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை ஒழித்தால் தான் நாமும் வாழ முடியும்;
நமது அண்டைவீட்டாரும் ஏன் சந்ததியினரும் கூட இந்த அபாயம் இல்லாமல் வாழ முடியும்.
செய்வோமா?
**