
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,026
Date uploaded in London – —26 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 5-7-25 அன்று பிரசுரமான கட்டுரை!
உபரத்தினங்கள் வரிசை!
சக்தி தரும் கால்ஸைட் (CALCITE); விலை மலிவு – பலன்கள் பல!
ச. நாகராஜன்
உபரத்தினங்களின் வரிசையில் ஒன்றாகக் கருதப்படுவது கால்ஸைட் (CALCITE).
விலை மலிவு ஆனால் பலன்களோ அதிகம்.
இது ஒரு ரசாயன உப்பு (Mineral). இதற்கு இப்படிப் பெயர் வைத்தவர் ப்ளினி தி எல்டர்.(Pliniy the Elder)
இதன் கெமிக்கல் ஃபார்முலா CaCO3. இது கால்ஸியம் அலுமினியம் கொண்ட ஒரு கலவையாகும்.
Calx என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது கால்ஸைட் என்ற சொல். இதனுடைய அர்த்தம் சுண்ணாம்பு என்பதாகும்.
பகுத்தறிவைத் தூண்டி ஆற்றலைத் தரும் கல் இது.
இதை அறையில் வைத்தாலேயே போதும் இதன் வலிமை வாய்ந்த அதிர்வுகள் நமக்கு பல நன்மைகளை உண்டாக்கும்.
நமது சக்தியைப் பன்மடங்காக்கும் ஆம்ப்ளிபையர் போல இது செயல்படும்.
உடல் வலிமை மற்றும் மன வலிமை ஆகிய இரண்டையும் சேர்த்து இது தருகிறது. உடலில் உள்ள வியாதியை உருவாக்கும் தீய சக்திகளை இது விரட்டி அடிக்கிறது. உணர்வுபூர்வமான மன அழுத்தத்தை நீக்கி உணர்வு கோஷண்ட் எனப்படும் எமோஷனல் கோஷண்டை இது சீராக்குகிறது.
காதலுக்கு ஒரு கல் இது. உறவுகளை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. மணவாழ்க்கையை சீராக்கி முறிந்த உறவுகளைச் சேர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
இது பளபளப்பாகவும் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு சக்தி உண்டு.
இது உடலில் உள்ள ஆதார சக்கரங்களைத் தூண்டி விட்டு அதிக சக்தியைத் தருகிறது.
ஆரஞ்சு நிற கால்ஸைட் ஸ்வாதிஷ்டான சக்ரத்துடன் இணைந்து படைப்பாற்றல், பாலுறவு, புலனின்பம் ஆகியவற்றை நல்குகிறது.
மஞ்சள் நிற கால்ஸைட் மணிப்பூரக சக்ரம் தரும் அபூர்வ ஆரோக்கியப் பலன்களைத் தருகிறது. பயத்தை விரட்டி அடிக்கிறது.
நீல நிறக் கல்லானது படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.
எகிப்தியர்கள் இந்தக் கல்லை மிகவும் கொண்டாடி வந்தனர். தங்களது பாரோக்களின் கல்லறைகளில் இதை வைத்து அலங்கரித்தனர்.
இந்தக் கல் அமெரிக்கா, செக்கோஸ்லேவேகியா, ருமானியா, ஐஸ்லேண்ட், பெல்ஜியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் கிடைக்கிறது. உலகெங்கும் கிடைப்பதால் “எங்கும் கிடைக்கும் கல்” என்ற பெயரும் இதற்கு உண்டு.
உடலில் அணியும் ஆபரணங்களாகவும் செய்து கொண்டு இதை அணியலாம். அல்லது வெறும் கல்லாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்.
இதை சுத்தப்படுத்துவதற்காக கரடுமுரடான பொருள்களால் இதைத் தேய்க்கக் கூடாது.
ஓடும் நீரில் சுத்தப்படுத்தினாலேயே போதும்.
எந்த ரத்தினக்கல்லாக இருந்தாலும் சரி, உபரத்தினமாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரின் உடல், மன, ஆன்மீகத் தன்மைகள் வேறு வேறாக இருப்பதால் தகுந்த ஒரு ரத்தினக்கல் நிபுணரிடம் சென்று (GEMMOLOGYST) அவரது ஆலோசனையைப் பெறுதல் அவசியம்.
பணத்தைக் கொடுத்து வாங்குகின்ற கல் உண்மையிலேயே அந்தக் கல் தான் என்பதை அதற்குரிய சர்டிபிகேட்டைப் பார்த்து அறிந்து பின்னர் வாங்க வேண்டும். அல்லது நமது நலத்தை நாடும் அன்பரிடம் மட்டுமே நவரத்தின மற்றும் உபரத்தினக் கற்களை வாங்க வேண்டும்.
இதுவே வாங்குவதற்கான அடிப்படை விதி!
**