அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்! (Post.15,030)

Written by London Swaminathan

Post No. 15,030

Date uploaded in London –  27 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேச முத்துமாரி

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.

எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,

ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி

பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,

யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,

இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.

நம்பினோர் கெடுவதில்லைநான்கு மறைத் தீர்ப்பு,

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் மஹா கவி பாரதியார்

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்று மஹா கவி பாரதியார் ஏன் சொன்னார்?  இது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை என்பது பாரதியாருக்குத் தெரியும். முதலில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு ஷெல்லி தாசன் என்ற புனைப்பெயரில் பாடிய பாரதி, பின்னர் சக்திதாசன் என்ற பெயரில் எழுதினார். இதனால் இன்றளவும் அவரை மிஞ்சும் கவிஞன் பிறக்கவில்லை.

சக்தியைப் பாடிப் பயன் அடைந்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது ஆதி சங்கரர்,மூக கவி, காளிதாசன், தெனாலி ராமன், வித்யாரண்ய சுவாமிகள், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய பாஸ்கர ராயர், நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி, சிருங்கேரி மடாதிபதிகள் , புதுக்கோட்டை சாந்தானந்த  சுவாமிகள் ஆகியோர் தினமும் சக்தியை- தேவியை – வழிபட்டுப் புகழ் அடைந்தனர். ஒரு சில விஷயங்களை நவராத்ரி காலத்தில் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஆதிசங்கரர் அம்பிகையின் அருள்பெற்று நாடு முழுதும் பல கோவில்களில் ஸ்ரீ சுக்ர யந்திரத்தை ஸ்தாபித்து எல்லோருக்கும் தேவியின் அருள் கிடைக்க வழி செய்தார் ஸ்ரீநகர் முதல் கன்யாகுமரி வரை அவருடைய காலடிபட்டு புனிதம் பெற்றது காஷ்மீரின் தலைநகருக்கே ஸ்ரீ நகர் என்று தேவியின் பெயரைச் சூட்டினார்.

இன்றுவரை ஆதிசங்கரரின் துதிகளை சிருங்கேரி, காஞ்சி மடாதிபதிகள் பரப்பியும், தேவியைப் பூஜித்தும் வழிபடுகின்றனர் . 

காளிதாசன்

ஆட்டிடையனாகப்  பிறந்த காளிதாசனை திமிரு பிடித்த மஹாராணிக்குஅந்த நாட்டு மந்திரிகள் மனம் புரிவித்தனர்; முதல் நாள் இரவிலேயே அவன் ஆட்டிடையன் என்று கண்டு கொண்ட ராணி அவனை விரட்டவே,  ஊர்க்கோடியில் உள்ள காளிகோவிலுக்குச் சென்று பிரார் த்தனை செய்தான் காளி  அவன் முன் தோன்றி அவன் நாவில் மந்திர அட்சரத்தினை எழுதவே உலகப் புகழ் பெற்ற கவிஞன் ஆனான்  .ஏழு அற்புத நூல்களை நமக்குத் தந்தான்

இதே போல தெனாலி ராமனுக்கும் காளியின் அருள் கிடைக்கவே அவன் விஜய நகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான விகட கவியாக உயர்ந்து நமக்கு நகைச் சுவைக்கதைகளை விட்டுச் சென்றான்

மூக கவி என்பவர் குமர குருபரர்  போல ஊமையாகப் பிறந்து ,  இறைவியின் அருள் பெற்று நமக்கு அருட்கவிகளை மழை யெனப் பொழிந்து சென்றார்.

 நமது தாத்தா , கொள்ளுத்   தாத்தா காலத்தில் வாழ்ந்த அப்பய்ய தீட்சிதர் பாஸ்கர ராயர்முத்து சுவாமி தீட்சிதர் , நீல கண்ட தீட்சிதர் முதலிய எண்ணற்ற கவிஞர்கள் நமக்கு துதிகளை உரைகளையும் நல்கினர் .

வீர சிவாஜியோ பவானி தேவியின் வாளினைப் பெற்று முஸ்லீம் படைகளை நிர்மூலமாக்கி ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். குமார கம்பன்னன்மஹா  ராணி  கங்கா தேவி, திருமலை நாயக்கர் முதலிய மன்னர்களை வானுயரும் கோபுரங்களை அன்னைக்கு எழுப்பி அழியாத  புகழ் பெற்றனர்.

இவர்களுக்கு முன்னோடியாக இருந்த வித்யாரண்யர் இறைவியை வேண்டி டன்  கணக்கில் தங்கம் கேட்கவே அவளும் தந்தாள்; ஆனால் அதை அடுத்த பிறவியில்தான் அனு பவிக்க முடியும் என்றாள், அவரும்  அடுத்த பிறவிக்காக ஸந்யாஸத்தை ஏற்றவுடன் ஞானம் பிறந்தது; தங்கத்தை தொடாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹரிஹரன் ,புக்கன் என்ற இடையர்களை அழைத்துப் பயிற்றுவித்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யததை நிறுவி முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தார்.

இதற்கெல்லாம் முன்னோடியாக சங்க இலக்கியத்திலே உமா என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சொல்லி தமிழ்ச் சங்கப்புலவர்களும் தேவியின் பெருமையைப் பாடினர்.

தமிழ்ச் சங்கப்புலவர்களில் உண்மையான புலவர் யார்? போலிகள் யார்? என்பதைத் தீர்மானித்தது  மதுரை அன்னை மீனாட்சி கோவில் பொற்றாமரைக்குளத்தில் மிதந்த சங்கப்பலகையே!

அங்கையற்கண்ணியையும் ஆலவாய் உறை   அப்பனையும் பாடி  கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய திரு ஞான சமப்ந்தர் சைவத்தை மீண்டும் தமிழ் நாட்டில் நிலைநாட்டினார். அவர்  பயன்படுத்திய அங்கையற்கண்ணி என்ற மீனாட்சியின் தமிழ்ப்பெயர் இன்று வரை பெயர் சூட்டலில் இடம்பெறுகிறது.

இவ்வளவு கதைகளையும் அறிந்த பாரதியார் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்றார். அதில் வியப்பதற்கொன்றுமில்லை

—subham—

Tags–அம்பிகையைச் சரண், புகுந்தால், அதிக வரம்,  பெறலாம்!

Leave a comment

Leave a comment