
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,029
Date uploaded in London – —27 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
11-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்
உலகின் பழமை வாய்ந்த அஜந்தா எல்லோரா குகைச் சிற்பங்கள்!
ச. நாகராஜன்
உலகின் பழமை வாய்ந்த குகைச் சிற்பங்களைக் கொண்டிருக்கும் அஜந்தா மற்றும் எல்லோரா மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள குகைகளாகும். அஜந்தா-எல்லோரா என்று சேர்த்தே சொல்வது பழக்கமாகி விட்டது என்றாலும் இவற்றிற்கு இடையே உள்ள தூரம் சுமார் நூறு கிலோமீட்டராகும்.
யாருமே பார்த்தறியாமல் பல நூற்றாண்டுகளாக இருந்த அஜந்தா குகைகளைக் கண்டு பிடித்தவர் ஒரு பிரிட்டன் அதிகாரி. 1819ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் வாழ்ந்து வந்த ஜான் ஸ்மித் என்ற பிரிட்டிஷ்காரர் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டிற்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்திச் சென்றார். அப்போது அங்கு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என்று சில குகைகளைக் காட்ட, அப்போது தான் அஜந்தா குகைகளைப் பற்றிய விவரத்தை முதன் முதலாக வெளி உலகம் அறிந்து கொண்டது.
குகைகளுக்கு அடியில் ஒரு நதி ஓடுகிறது. காலப் போக்கில் இது பெரும் காடாக மாறி விடவே யாரும் இங்கே வரவில்லை.
ஒரு குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டு கிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 250 அடியாகும். 30 குகைகள் அஜந்தாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இது வரை இத்தாலிய சிற்பங்களே மிகவும் தொன்மை வாய்ந்தது என்று எண்ணியிருந்த உலக மக்களுக்கு மிக மிகப் பழமையான் அற்புதமான சிற்பங்கள் இந்திய சிற்பிகளால் கி.மு. 2 முதல் 6 நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை என்ற செய்தி தெரியவே அவர்கள் பிரமித்தனர்.
இந்தக் குகைகள் அனைத்தும் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டவை என்பது பிரமிக்க வைக்கும் ஒரு விஷயமாகும்.
மேலிருந்து தொடங்கி கீழ் வரை வந்து அழகுற அமைக்கப்பட்ட இந்தக் குகைகள் ஆயிரக்கணக்கானோர் பல்லாண்டு காலம் வேலை பார்த்து உருவாக்கியவை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த 30 குகைகளில் 9,19,26,29 ஆகிய குகைகள் பௌத்தர்களின் வழிப்பாட்டிடங்களாகவும் எஞ்சியவை பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் விகாரங்களாகவும் இருந்தவையாகும்.
அஜந்தாவில் உள்ள ஓவியங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகியும் வர்ணம் மங்காமல் இருப்பது மாபெரும் அதிசயமே.
சரணந்திரி குன்றுகளில் அமைந்துள்ள 34 குகைகள் எல்லோராவில் உள்ளன. இக்குகைகளில் பௌத்த, இந்து மற்றும் சமணர்களது கோவில்களும், மடாலயங்களும் அமைந்துள்ளன. இவை 5ஆம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றில் 12 பௌத்தர்களது குகைகளாகவும் 17 இந்துக்களின் குகைகளாகவும் ஐந்து சமணர்களின் குகைகளாகவும் அமைந்துள்ளன.
பல அடுக்குகளைக் கொண்டதாக இந்த மடங்கள் உள்ளன.
16ம் எண்ணுள்ள குகை கைலாசநாதரது கோவிலாகும். இங்குள்ள முற்றம் 276 அடி நீளமாகவும் 154 அடி அகலமாகவும் உள்ளது. இது பல மாடிகளைக் கொண்ட கோவில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாசநாதர் கோவிலை அமைக்க 107 அடி மலைப் பாறைகளைக் குடைய வேண்டி இருந்திருக்கிறது.

இந்த கோவில்களை யானை, சிங்கம் மற்றும் புலி உள்ளிட்டவைகள் தாங்குவது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தின் தேவதைகள் சிறப்பாக இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
ராமாயணத்திலிருந்து முக்கிய காட்சிகள் மையத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அஜந்தா எல்லோரா குகைகளை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமாகவும் பௌத்த மதத்தின் சிறப்பான வரலாற்றையும் சுட்டிக் காட்டுவதாகவும் விளங்கும் இந்தக் குகைகளைப் பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்; இவற்றைப் பார்த்து பிரமிக்கின்றனர்!
***