கூத்தனூர் சரஸ்வதி தேவி- ஆலயம் அறிவோம்! (Post No.15,036)


 Written by Mrs Chitra Nagarajan 

Post No. 15,036

Date uploaded in London – 29 September 2025

 Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

28-9-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது சித்ரா நாகராஜன்

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகல கலா வல்லியே

            ஶ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து சுமார் அரைகிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கூத்தனூர் என்னும் திருத்தலம் ஆகும்.

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு என்று அமைந்த ஒரே திருத்தலமாக இது திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடன், தாமரை மலரில் பத்மாசனத்தில் வெண்மையான ஆடை அணிந்து அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள், அவளது இடது கீழ்க் கரத்தில் ஒரு புத்தகமும் வலது கீழ்க் கரத்தில் சின்முத்திரையும் திகழ்கிறது. வலது மேல் கரத்தில் அக்ஷர மாலையும் இடது மேல் கரத்தில் அமிர்தகலசமும் திகழ்கிறது.

புன்னகையுடன் கூடிய திருமுகமும், கருணை பொழியும் விழிகளும் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது. அவளது மூன்றாவது கண் ஞான தீக்ஷையை அளிக்கிறது. பலிபீடத்தின் முன்னே அன்னம் உள்ளது.

கோவிலில் ஒரு பிரகாரமே உள்ளது. தென்மேற்குப் பகுதியில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். இவர் ஸ்வயம்பு விநாயகர் ஆவார்.

சரஸ் என்றால் ஆறு என்று பொருள். வதி என்றால் உறைகின்றவள் என்று பொருள். ஆக சரஸ்வதி என்றால் ஆற்றில் உறைகின்றவள் என்று பொருளாகிறது.

ஸரஸ்வதி என்ற சொல்லுக்கு அழகான வியாக்யானம் ஒன்று உண்டு. ஸாரம் – ஸ்வ – இதி என்று இந்தச் சொல்லைப் பிரிக்க வேண்டும். ஸ்வ – அதாவது ‘தான்’ என்பதன் சாரத்தைத் தருபவள் என்று பொருள்.

அதாவது தன்னைத் தனக்கு உணர்த்தும் மேலான ஞானம் –  அதைத் தருபவள் சரஸ்வதி.  இதிலிருந்து சரஸ்வதி தருகின்ற ஞானம் வெறும் நூலறிவோ அல்லது உலக அறிவோ அல்ல,  பிரம்ம ஞானம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

சரஸ்வதி தேவி ‘வாக்கிற்கும்” அதி தேவதை;  நீருக்கும் அதி தேவதை!

ரிக் வேதம் சரஸ்வதி தேவியை நதிகளுள் சிறந்தவள், தேவதைகளுள் சிறந்தவள், அன்னைகளுள் சிறந்தவள் என்று புகழ்ந்து துதிக்கிறது.

இக்கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

கவிகளுள் சிறந்தவராக விளங்கிய ஒட்டக்கூத்தர் என்னும் கவிஞர் தினமும் கலைமகளைப் பூஜித்து வந்தார். பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தினமும் தக்ஷிணாவாஹினி எனப்படும் அரிசிலாறு நீரால் தேவிக்கு அபிஷேகம் செய்து வந்தார். அதனால்  மகிழ்ந்த சரஸ்வதி தேவி தன் தாம்பூலத்தை ஒட்டக்கூத்தருக்கு அருள அவர் பெரும் கவிஞர் ஆனார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் ஆனார்.  ஆஸ்தான கவிச்சக்கரவர்த்தி என்ற புகழையும் பெற்றார். 

சோழமன்னன் அவருக்கு இந்த இடத்தைத் தானமாக வழங்க அவர் இங்கு ஞான சரஸ்வதிக்கு ஒரு கோவிலை அமைத்தார். ஆகவே இந்த ஊரும் கூத்தனூர் என்ற பெயரைப் பெற்றது.

தீயவரிடம் சிக்கிக் கொண்ட ஒட்டக்கூத்தரை விடுவிக்க பரணி பாட வைத்து அவர்களிடமிருந்து சரஸ்வதி தேவி அவரை மீட்டாள். தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக “ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே” என்று கூத்தர் பாடினார்.

நான்கு வீதிகளின் நடுவே இந்தக் கோவில் அழகுற அமைந்துள்ளது.

இங்குள்ள கோவிலின் விமான கோபுரத்தில் ஐந்து கலசங்கள் அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

இதே சரஸ்வதி தேவி கவிச்சக்கரவர்த்தி கம்பரைக் காப்பாற்ற கிழங்கு விற்கும் பெண்மணியாகவும் மோர் விற்கும் பெண்ணாகவும் வந்தாள் என்றும் வரலாறு கூறுகிறது.

இன்னொரு சுவையான வரலாறும் உண்டு.

குடந்தையைச் சேர்ந்த சாரங்கபாணி தீக்ஷிதரின் மகன் புருஷோத்தமன் என்பவன் பிறவியிலிருந்தே பேசும் திறன் அற்றவனாக இருந்தான். இதனால் வருந்திய சாரங்கபாணி தீக்ஷிதர் இங்கு புருஷோத்தமனை அனுப்ப அவன் தினமும் சரஸ்வதி தேவியை வழிபடலானான். அவனது பக்தியை மெச்சிய சரஸ்வதி அவனுக்கு அருள் பாலிக்க அவன் பேசத் தொடங்கியதோடு சிறந்த அறிவாளியாக விளங்கினான்.

புருஷோத்தம பாரதி என்று அழைக்கப்படலானார்.

இதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

இந்தக் கோவிலில் நவராத்திரி தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று ஏராளமான மக்கள் கூடி சிறப்பான வழிபாடு செய்வது வழக்கம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இங்கு வந்து தொழுது துதித்து நல்லறிவைப் பெறுகின்றனர். வித்யாரம்பம் என்று சொல்லும் கல்வி தொடங்கும் நாளையும் இங்கேயே செய்வது வழக்கம். கோவிலின் வெளியில் உள்ள கடைகளில் பூஜா திரவியங்களுடன், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.

இசைக் கலைஞர்களும் வாத்திய கலைஞர்களும் இங்கு வந்து வழிபட்டுத் தங்கள் கலையைச் மேன்மையுறச் செய்து கொள்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

பௌர்ணமி மற்றும் மூல நட்சத்திர தினங்களில் பக்தர்கள் திரளாக இங்கு கூடுவது வழக்கம். மூல நட்சத்திரம் சரஸ்வதி தேவியின் நட்சத்திரமாகும். நவமி சரஸ்வதிக்குரிய திதியாகும்.

இத்தலத்திற்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இங்கு, கோவில்பத்து கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை  கிலோமீட்டர் உள்ள அரசலாற்றுக் கரையில் பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து மெய்யறிவை அருளும் ஶ்ரீ ஞான சரஸ்வதி தேவி,

அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

–subham—

Leave a comment

Leave a comment