இரண்டு லட்சம் மக்கள் வாழ விரும்பும் முதல் விண்வெளி தேசம் (Post No.15,051)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,051

Date uploaded in London –   4 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

இரண்டு லட்சம் மக்கள் வாழ விரும்பும் முதல் விண்வெளி தேசம் –  அஸ்கார்டியா!

(World First Space Nation – ASGARDIA) 

ச. நாகராஜன்

பூமியில் ஏராளமான நாடுகள் இருக்க முதன் முதலாக விண்வெளியில் ஒரு தேசம் உருவாகி இருக்கிறது, தெரியுமா? 

அதன் பெயர் அஸ்கார்டியா! – (ASGARDIA)

அஸ்கார்டியா என்ற விண்வெளி தேசம் உருவாகிவிட்டதாக பாரிஸில் 2016 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

உடனேயே இருபது நாட்களுக்குள் இதன் குடிமக்களாக ஆவதற்கு விருப்பம் தெரிவித்து ஐந்து லட்சம் பேர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த அஸ்கார்டியா கமிட்டி தந்தை தாய் அனுமதியின்றி விண்ணப்பித்த சிறுவர்களையும், இரண்டு முறை விண்ணப்பித்தவர்களையும் நீக்கியது.  பூமியில் உள்ள இருநூறு நாடுகளிலிருந்து நன்கு சரிபார்க்கப்பட்ட பின் இரண்டு லட்சம் பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுடைய பட்டியல் அஸ்கார்டியா தேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அஸ்கார்டியா என்ற பெயர் ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்த ஜெர்மானியக் கொள்கைகள்,  கடவுள்கள், தேவதைகள் உள்ளிட்ட பழைய நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெயராகும், கடவுளரின் தேசம் என்று இதற்கு அர்த்தம்.

இந்த நாட்டிற்கென ஒரு கொடி உண்டு.

ஒரு தேசீய கீதம் உண்டு. ஒரு அரசியல் சட்டம் உண்டு. இதில் 150 பாராளுமன்ற உறுப்பினர்களும் உண்டு. 

குறுங்கோள்கள், விண்கற்கள், மனிதரால் விண்வெளிக்கு அனுப்பப்பட விண்கலங்களில் பல செயலிழந்ததனாலும் விபத்துக்குள்ளாகியதாலும் உருவான துண்டுகள் உள்ளிட்டவை பூமி மீது மோதினால் என்ன செய்வது?

 இதைத் தடுக்க அஸ்கார்டியா ஒரு குறுங்கோள்களின் கூட்டமைப்பை உருவாக்கி பூமியைக் காக்கும் பணியில் ஈடுபடும்.

 முதல் அஸ்கார்டியா தேசம் ஒரு கையளவே தான் இருக்கிறது.

அஸ்கார்டியா – 1 என்று பெயரிடப்பட்டு இந்த தேசம் 2017, நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு சுற்றிக் கொண்டே இருக்கிறது

இதன் மொத்த எடை 2.8 கிலோகிராம். நீளம் 20 செண்டிமீட்டர். இது. அதாவது 8 அங்குலம் – ஒரு கையளவு தான்! 

அஸ்கார்டிய தேச மக்கள் அஸ்கார்டியன் என்று அழைக்கப்படுவர். 

அஸ்கார்டிய தேசத்தின் நிர்வாக அலுவலகம் ஆஸ்திரியாவில் வியன்னாவில் உள்ளது. 

இந்த தேசத்தை உருவாக்கியவர் இகார் அஷுர்பெய்லி. (பிறப்பு 9-9-1963 வயது 61) இவர் அஜர்பைஜன் சோவியத் சோஷியல் ரிபப்ளிக்கில் பாகு என்ற இடத்தில் பிறந்தார். இவரே தான் தேசத்தின் தலைவர். 

ஐநாவின் விண்வெளிக் கொள்கைப்படி மொத்த விண்வெளியும் மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமானது. சந்திர, சூரியன் உட்பட்ட எதையும் எந்த நாடும் தனி உரிமையாகச் சொந்தம் கொண்டாட முடியாது.

 அப்படி இருக்கும் போது அஸ்கார்டியா – 1ம் இதுவரை யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை. 

அமெரிக்காவிலிருந்து இது ஏவப்பட்டதால் தற்போதைக்கு அமெரிக்க விண்வெளிச் சட்டங்களே இந்த விண்வெளி தேசத்திற்கும் பொருந்தும். 

தனி காலனி ஒன்றை விண்வெளியில் அமைக்க அஸ்கார்டியா எண்ணி இருக்கிறது.

ஆனால் ஒரு விண்வெளி நிலையம் அமைத்து அது தொடர்ந்து செயல்பட வைக்கும் ஆகும் செலவோ மலைக்க வைக்கும் நூறு பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 

ஆகவே, அஸ்கார்டியாவின் எதிர்காலம் பொறுத்திருந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது!

அட,, விரும்பினால் நீங்களும் கூட இணையதளத்தில் அப்ளிகேஷனைப் பெற்று அஸ்கார்டியா குடிமகனாக ஆக விண்ணப்பிக்கலாமே!

**

Leave a comment

Leave a comment