ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post No.15,059)

Written by London Swaminathan

Post No. 15,059

Date uploaded in London –  6 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 5 -ம் தேதி 2025-ம் ஆண்டு

****

ராமர் உருவ பொம்மை எரிப்பு: 4 பேர் கைது; சிறையில் அடைப்பு

ராமர் உருவ பொம்மையை எரித்து, அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் திருச்சி போலீஸார்  4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவெறும்பூர் அருகே குண்டூர் அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராமர் உருவப்படத்தை எரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், ராமபிரானை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் குண்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராமரின் படத்தை எரித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மதஉணர்வை தூண்டும் திமுக அரசையும், இந்து விரோத அமைப்புகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அளித்த பேட்டியில்,

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழா ஒன்றில் வைரமுத்து ராமரை அவமரியாதையாக பேசினார். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்கின்றார். அதேபோல் வி.சி.க வின் நிர்வாகி வன்னி அரசு ராமபிரானை ஆணவ படுகொலைகாரர் என விமர்சித்துள்ளார். இவர்களுக்கெல்லாம் ராமரைபற்றி பேச தகுதி இல்லை. இவர்கள் மீது விஸ்வந்த் பரிஷத் புகார் அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமன் படத்தை எரித்தவர்களை  குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழக மட்டுமல்லாது தேசிய அளவில் இந்த சம்பவத்தை எடுத்துச் சென்று உச்ச நீதிமன்றத்தை நாடி அதன் வழியாக நடவடிக்கை எடுக்க எடுக்கப் போவதாக பாலாஜி தெரிவித்தார்.

கடவுள் ஸ்ரீ ராமரை அவமதித்த 5ம் தமிழ் சங்க அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும், அந்த அமைப்பு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்

***

முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையாஹிந்து முன்னணி கேள்வி

”முதல்வர் ஸ்டாலின், மதச்சார்பற்றவராக இல்லை” என்று ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:


சிவகங்கை, அடைக் காட்டூர் இருதய ஆண்டவர் சர்ச்சில், அரசு நிதியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்துள்ளார்.

இது அப்பட்டமான மதவாத அரசியல். தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றியை, கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக கூறினார்.

தற்போது, மக்கள் வரிப்பணத்தை நிதியாக வழங்கி, சர்ச்சுகளில் புனரமைப்பு பணிகள், அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதில் ஒரு பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்

அந்த பணியை கூட, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததில்லை. அன்னிய மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதோடு, நேரடியாக அந்த பண்டிகைகளில் பங்கேற்று மகிழும் ஸ்டாலினை, சர்ச்சுக்கு செல்வதும் மத நம்பிக்கை தான் என அவரது பகுத்தறிவு தடுக்கவில்லை.

ஹிந்து பண்டிகை, ஹிந்து கோவில்கள் என்றால் மட்டும், அவருக்கு பகுத்தறிவு குறுக்கே வந்து தடுக்கிறது. இஸ்லாமிய மாணவர்கள், பத்து பேர் வெளிநாடு சென்று பயில, 3.60 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஸ்டாலின் வழங்கினார்.

இது போன்ற அவரது நடவடிக்கைகள், அவர் மதச் சார்பற்றவராக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் நடுநிலையோடு நடப்பார் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஹிந்துக்கள் 85 சதவீதத்துக்கு மேல் இருந்தும் மரியாதை இல்லை. ஆனால், 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களின் ஏவலாளாக தி.மு.க., செயல்படுகிறது.

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து, ஹிந்துக்களை மதிப்பவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும். அது தான் வருங்காலத்தில் நமக்கு பாதுகாப்பு. இவ்வாறு, காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.

****

மைசூரில் கண்கவர் யானைகள்  அணிவகுப்பு 

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் கடைசி நாளான தசரா நாளில்  கண் கவர் யானைகள்  அணிவகுப்பு  நடைபெற்றது. கஜப் படைகள் அணிவகுத்து சென்றன. 750 கிலோ தங்க அம்பாரியில் அமர்ந்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்து இந்த கண்கொள்ளா காட்சியை கண்டனர். பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

கஜப் படைகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் அபிமன்யு மீது தங்க அம்பாரியில் அமர்ந்து அம்மன் அருள் பாலித்தார்.

மைசூர் அரண்மனையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், மைசூரின் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுத்துச் சென்று மாலையில் வன்னி மண்டபத்தில் முடிந்தது.

****

மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு

பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், மகாநவமி நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மகாநதி நவராத்திரி உற்சவம் நடக்கிறது.

அயிலூர் அனந்தநாராயணன் மாராரின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய யானைகள் அணிவகுப்பில் ‘காழ்ச்ச சீவேலி’  நடந்தது.

அதன்பின், 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற ‘பஞ்சாரிமேளம்’ என்ற செண்டைமேளம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை, 4:30 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், பூக்காவடி, நாதஸ்வரம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்து மணி வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது.

****

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி புகழாரம்

100 ஆண்டுகளுக்கு முன் ஆர். எஸ். எஸ் அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் என்றால் தீமையை வென்றது என்ற பொருளைக் கொண்டது எனக் கூறினார். நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் பல சேவைகளைச் செய்துள்ளதாகக் கூறிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் பண்டிகை விஜயதசமி எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, தேசிய நலனே முதன்மையானது என்ற கொள்கையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், உயர்ந்த குறிக்கோளைப் பின்பற்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசத்தை கட்டியெழுப்பும் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது,” எனவும்  பிரதமர் மோடி தெரிவித்தார்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள, நாடு துடிப்புடன் இருக்க வேண்டும். என்று  பிரதமர் மோடி கூறினார்.

சிறப்பு தபால்தலையையும் நூறு ரூபாய் நாணயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்டார் ; அதில் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் படங்கள் உள்ளன. 

*******

வாழும் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு

நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில், சிறுமியரை அம்மனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. நேபாளத்தின் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, பல கட்ட சோதனைகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கின்றனர்.

சிறுமியின் உடல், மன வலிமையை சோதித்து அவர் கன்னி தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிந்துக்கள், புத்த மதத்தினரால் வழிபடப்படுகிறார். பருவம் எய்தும் வரை அச்சிறுமியை கன்னி தெய்வமாக கருதி பூஜிக்கின்றனர்.

அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயதானதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார். அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, அங்குள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமியர், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். பண்டிகைகளுக்காக ஆண்டில் சில முறை மட்டுமே வெளியே அனுப்பப்படுவர்.

அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குமாரிகள் இப்போது அரண்மனைக்குள் கல்வி கற்கவும், டிவி பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு அரசு ஒரு சிறிய மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.

***

திருப்பதியில் தங்க ரத தேரோட்டம்

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின்  தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாக  அமைக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.

திரு​மலை- திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பாக ஆண்​டாண்டு காலமாக தேர்த் திரு​விழாவை வெகு சிறப்​பாக நடத்தி வரு​கின்​றனர். ஒவ்​வொரு பிரம்​மோற்​சவத்​தி​லும் தேர்த்திரு​விழா 8-ம் நாள் காலை பிரம்​மாண்​ட​மான முறை​யில் மாட வீதி​களில் உலா வரும்.அதில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் பக்​தர்​களுக்கு அருள் புரிவது வழக்கம்., இத்​துடன் ஒரு வெள்ளி தேரை​யும் திருப்​பதி தேவஸ்​தானத்​தின் உரு​வாக்​கினர். அந்​தத் தேரில் பிரம்​மோற்சவ நாட்​களில் உற்சவ மூர்த்​தி​கள் 6-ம் நாள் பவனி வந்து பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தனர்.
ஆனால், அந்த வெள்​ளித் தேரில் அடிக்​கடி மராமத்து பணி​கள் நடை​பெற்​ற​தால், அதனை மாற்ற வேண்​டும் என தேவஸ்​தான அதிகாரி​கள் தீர்​மானித்​தனர்.
வெள்ளித் தேருக்கு பதிலாக தங்கத் தேரை ஏற்பாடு செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தங்க ரதத்தை செய்ய தமிழக கைவினை தயாரிப்பு சங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 18 கைவினை கலைஞர்கள் திருமலைக்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து தங்கத்தேரை தயாரித்தனர்.
28 டன் எடை கொண்ட இந்த தங்கத் தேர் 32 அடி உயரம் உள்ளதாகும். இதில் 2,900 கிலோ செப்பு தகடுக்கு 74 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்டது. இதில் 25,000 கிலோ மரம், 18 அங்குலம் செப்பு தகடுகள் 9 அடுக்குகளாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.


இதனை தயாரிக்க அப்போது ரூ.24.34கோடி செலவானது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

12 ஆண்டுகள் நிறைவு

2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இந்த தங்க ரதத்தின் முதல் தேரோட்டம் நடந்தது.

செப்டம்பர் மாதம் 30-ம் தேதி யன்று , இந்த தங்க ரதம் உருவாக்கப்பட்டு சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆண்டுதோறும் இந்த தங்க ரதம் பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 3 நாட்களில் மட்டுமே கோயிலில் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 12 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 5-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi

Leave a comment

Leave a comment