
Post No. 15,061
Date uploaded in London – – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சந்திர சிந்தனை! 10-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சந்திரனுக்கு என்ன நிறம்?
ச.நாகராஜன்
வாரோயோ வெண்ணிலாவே என்று பாடி விட்டு சந்திரனின் நிறம் என்ன என்று கேட்டால் சிரிப்பு தான் வரும் இல்லையா?
அது தான் வெண்ணிலவு என்று பாடி ஆயிற்றே, அப்போது வெண்மை தானே நிறம், இது தெரியவில்லையா என்று கேட்போம்.
ஆனால் சந்திரனுக்கு நிஜமான நிறம் எது?
ப்ளூ மூன், ஹனி மூன், ப்ளட் மூன் என்று பலவேறு விதமாகச் சொல்லி மகிழ்கிறோம் இல்லையா, அந்த சந்திரனின் நிறம் தான் என்ன?
உண்மையில் சொல்லப்போனால் சந்திரன் தானாக எந்த ஒளியையும் உருவாக்குவதில்லை. பதிலாக சந்திரன் சூரியனிடமிருந்து வரும் வெண்மை ஒளியைப் பிரதிபலிக்கிறது, அவ்வளவு தான்!
அப்படியானால் பூமியிலிருந்து பார்க்கும் போது ஏன் பல நிறங்களில் சந்திரன் காட்சி தருகிறான்?
அறிவியல் அறிஞர்கள் சந்திரனிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ந்தார்கள்.
குறிப்பாக ல்யூனார் அண்ட் ப்ளானிடரி இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் எங்கேஜ்மெண்ட் மானேஜராகப் பணிபுரியும் பெண்மணி கிறிஸ்டைன் ஷுப்லா (Christine Shubla) தனது ஆய்வின் முடிவில் கூறுவது இது: சந்திரனில் உள்ள அனார்தோஸைட் (anorthosite) என்னும் சாம்பல் நிறக் கல்லே இதற்குக் காரணம். அது ஒளியை உறிஞ்சி எடுத்துக் கொண்டு வெண்மை நிற ஒளியை பூமிக்குப் பிரதிபலித்து அனுப்புகிறது,. ஆகவே சந்திரன் இளஞ்சாம்பல் நிறத்தில் காட்சி அளிக்கிறது.
என்றாலும் பல்வேறு வளிமண்டலச் சூழல்களும் வானியல் நிகழ்வுகளும் சந்திரனுக்கு வெவ்வேறு நிறத்தைப் பூமியிலிருந்து பார்க்கும் போது காட்டுகின்றன.

பூமியிலிருந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பார்த்தால் சந்திரன் வெவ்வேறு நிறத்தோடு காட்சி தருவான்.
பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் (Blood Moon) அல்லது சிவப்பு நிலவு என்கிறோம்.
ப்ளட் மூன் டே (Blood Moon Day):
பூமியில் பூரண சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி நேர்பட சூரிய ஒளி விழாது தடுக்கவே சந்திரன் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள அதன் பிரதிபலிப்பு ஒளியையே வெளி விடுகிறது. இது ரத்தச் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த தினம் தான் இரத்தச் சிவப்பு சந்திர தினமாகும்.(இந்தியாவில் 2025 மார்ச் 14ம் தேதி ப்ளட் மூன் டே வந்தது)
ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால் உலகம் அழியவில்லை!
ப்ளூ மூன் (Blue Moon) : ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வந்தால் அது ப்ளூ மூன் ஆகும். இப்படிப்பட்ட நிகழ்வு அரிதாகவே தான் நிகழும். வளிமண்டலத்தில் உள்ள பெரிய துகள்கள் சந்திரனுக்கு லேசான ஒரு நீல நிறத்தைத் தரும்.
பிங்க் மூன் (Pink Moon): ஏப்ரலில் வரும் முதல் பௌர்ணமியை இளஞ்சிவப்பு சந்திரன் என்று கூறுவது வழக்கம். வட அமெரிக்காவில் மலரும் ஒரு வகை இளஞ்சிவப்பு பாசியை அடிப்படையாகக் கொண்டு இந்த பிங்க் மூன் என்று சந்திரனை அழைக்கும் பழக்கம் வழக்கத்தில் வந்தது.
மஞ்சள் நிலா : வழக்கமாக இரவில் மஞ்சள் நிறமாக காட்சி தருகிறது சந்திரன். இதுவே தான் தங்க நிலா என்று புகழப்படுகிறது!
பகல் நேரத்தில் வானத்தின் அடியில் சந்திரன் ஆரஞ்சு நிறத்திலோ அல்லது சிவப்பாகவோ காட்சி தருகிறது.
இன்னும் வயலட், ஆழ்ந்த சிவப்பு என பல வர்ண ஜாலங்களையும் சந்திரன் நமக்கு அளிக்கிறது.
தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற ஏராளாமான நிலாப் பாடல்களில் வண்ண நிலவே, வண்ண நிலவே என்று ஆரம்பித்து மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் (கண்ணதாசன், முதல் இரவு படம்) வெள்ளி நிலா முற்றத்திலே (கண்ணதாசன் வேட்டைக்காரன் படம்), தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது (கண்ணதாசன், ரத்தத் திலகம் படம்) என தொகுத்துக் கொண்டே போகலாம்.
அட நிலாவுக்கு இவ்வளவு நிறமா சார்? இது நிஜமா சார்?
***