அன்றாட வாழ்வில் புகுந்து விட்ட ஏஐ! (Post No.15,065)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,065

Date uploaded in London –   8 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

ஏஐ என்னும் அதிசயம்!

அன்றாட வாழ்வில் புகுந்து விட்ட ஏஐ!

ச. நாகராஜன்

முழுக்க முழுக்க ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் புகுந்து விட்டது ஏஐ.

இனி அதை நீக்கவே முடியாது. ஆகவே ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் – வேறு வழியே இல்லை.

கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம் (Goldman Sachs Group), ஏஐ வந்ததால்  உலகில் 30 கோடி பேருக்கு வேலை பறி போகும் என்று கூறுகிறது. 2025இல் இப்போதே 76440 பேர்கள் வேலையை இழந்து விட்டனர் என்று கூறுகிறது.

 ஏஐ வரவால் அதற்கான சந்தை 243.70 பில்லியன் டாலருக்கு விரிவடைந்து விட்டது. 2030க்குள் அது 826.70 பில்லியன் டாலருக்கு விரிவடையும் என்பது கணிப்பு. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 85/)

 ஏஐ 12 கோடி பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்பைத் தரும். அது கூடிக் கொண்டே போகும் என்பது இன்னொரு பார்வை!

 ஏஐ-யை ஏற்றுக் கொள்ளும் வணிகம் மட்டுமே இனி உலகில் நிற்கும்.

2025 முடிவதற்குள் ஏஐ தனது நிலையை உறுதி செய்து கொள்ளும்.

 ஐந்து துறைகளில் ஏஐயின் ஆதிக்கம்

 உடல்நலம் பேணும் ஆரோக்கியம் என்ற துறையில் அது ஏற்கனவே வியாதிகளைப் பற்றி துல்லியமாக அறிவிக்க ஆரம்பித்து விட்டது. சிகிச்சை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் சொல்ல ஆரம்பித்து விட்டது.

நிதித் துறையில் தவறான ஃபிராடு பரிமாற்றங்களை அல்காரிதம்  கண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

கல்வித் துறையில் ஏஐ கருவிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தேவையானவற்றைக் கற்றுக் கொடுக்கத் தயார். ஒவ்வொருவருடைய முன்னேற்றம். கிரேடு ஆகியவை பற்றி ஏஐ நிர்ணயித்து அறிக்கை தந்து விடும்.

போக்குவரத்துத் துறையில் கார்கள் சிக்னலில் தானே நிற்கும். தானே புறப்படும். பயணிகளின் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாதபடி அற்புதமாக இருக்கும்.

பொழுதுபோக்குத் துறையில், இனி நெட்ஃபிளிக்ஸ் போன்றவை ஏஐ சிபாரிசு செய்யும் படங்களையே தனது வாடிக்கையாளர்களுக்குக் காட்டும். அட, ஏஐ-யே நல்ல படம் என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டதா, நம்பிப் பார்க்கலாம் என்று வாடிக்கையாளர்கள் அதிக அளவில் படங்களைப் பார்க்க ஆரம்பிப்பர்.

சந்தேகப்படுவோரின் கேள்விகள்!

ஆனால் ஏஐ பற்றிப் பயப்படுவோர் கூறுவது என்ன தெரியுமா?

பதிக்கப்படும் தரவுகளில் (DATA) ஏற்கனவே பாரபட்சம் காண்பிக்கப்பட்டு அவை ஏற்றப்பட்டால் முடிவுகள் தவறாகவே இருக்கும்.

ஏராளமான அந்தரங்க விஷயங்கள் ஒவ்வொருவர் பற்றியும் தரவுகளாக ஏற்றப்படுவதால் அவை பாதுகாப்பாக இருக்குமா? ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க முடியுமா?

எல்லாமே மெஷின் மயம் என்றால் மனிதர்களுக்கு என்ன வேலை? வேலை இழந்தோரும் வேலை தேடுவோரும் உலகில் என்றுமில்லாத அளவில் அதிகமாக இருப்பார்களா?

ஏஐ அமைப்புகள் ஆரோக்கியத் துறையில் முடிவுகளை எடுக்கும் போது சிக்கலான கேஸ்களில் அது சரிப்படுமா?

சரி, யார் இந்த ஏஐயின் முடிவுகள் எல்லாம் சரிதான் என்று நிர்ணயிப்பது?

ஏஐ உலகைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுமோ?

 இவை எல்லாம் ஏஐ பற்றி சந்தேகப்படுவோரின் கேள்விகள்.

 உலகளாவிய அளவில் ஏஐயின் உதவி!

விண்வெளியில் செல்லவிருக்கும் மனிதர்களுக்கு ஏஐ பெரிதும் உதவி செய்யப் போகிறது.

புவி வெப்பமயமாதலைத் தடுத்து ஆரோக்கியமான லட்சிய காலநிலையை ஏஐ கொண்டு வரப் போகிறது.

கலைகளை வேற லெவலுக்கு ஏஐ கொண்டு செல்லும்.

திரைப்படத்துறையிலும் இசைத் துறையிலும் ஒரு பெரும் புரட்சி ஏஐயால் ஏற்படும்.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இனி மனிதர்கள் படைப்பது போல இருக்காது. அது வேற லெவலில் இருக்கும்.

அன்றாடம் செய்தித்தாள்களை எடுத்தால் குழந்தைகளுக்கு ஏஐ மூலம் படிப்பு சொல்லித் தரப்படும் என்பதில் ஆரம்பித்து சாடலைட் ஏவுவதற்கு ஏஐயின் உதவி என்பது வரை ஏராளமானவற்றைப் பார்த்து வியக்கிறோம்!

ஏஐ என்னும் அதிசயம் இன்னும் என்னென்ன மாயாஜாலம் செய்யப் போகிறதோ, தெரியவில்லை!

$$$

Leave a comment

Leave a comment