
Post No. 15,106
Date uploaded in London – 20 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு
****
எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .
திங்கட்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் அன்று தொடங்கி,
ஆண்டு முழுதும், எல்லோருக்கும் சகல செளபாக்கியங்களையும் இறைவன் அருளவேண்டும் என்று ஞானமயம் குழு பிரார்த்திக்கிறது .
****
முதலில் தீபாவளிச் செய்திகள்.
அயோத்தியில் தீபாவளி தீப உற்சவம்
அயோத்தியில் தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற திட்டம்..!!
உத்தரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இது உலக சாதனையாக மாறி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி 9-வது தீப உற்சவம் 19-ம் தேதி அயோத்தியில் உள்ள ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 29 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்கும். சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, பிற கோயில்கள் மற்றும் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இந்த விளக்குகள் ஏற்றப்படும்.
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு நரகாசுரனே காரணம் என்பது போல, உ.பி.யில், போருக்குப் பிறகு அயோத்தியை ராமர் வென்றதை நினைவுகூரும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளிக்கு 1,100 ட்ரோன்கள் வானில் ஏவப்படும். இதில் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ராமாயணக் காட்சிகளும் அடங்கும்.
அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தன்னார்வலர்களிடமிருந்து உதவி பெற உ.பி. அரசு முடிவு செய்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.
இந்துக்கள் தவிர பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
*********
தீபாவளிக்கு மறு நாளும் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு மறு நாளும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு அக்.,20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்.,21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்.,25 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது
****
அயோத்தியில் ராமாயண மெழுகு அருங்காட்சியகம்
அயோத்தி ராமர் கோவில் அருகே, ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து, முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அயோத்தியின் சவுதா கோசி பரிக்ரமா பாதையில் கட்டப்பட்டுள்ள இந்த மெழுகு சிலை அருங்காட்சியகம், தென் மாநில கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் ராமர், சீதை, லட்சுமணன், பரதன், ஹனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின், 50 மெழுகு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்த கேரள கலைஞர் சுனில் கூறுகையில், “அருங்காட்சியகத்தை பார்வையிடுவோர் திரேதா யுகத்தில் அடியெடுத்து வைப்பதை உணர்வர். புராணம், தொழில்நுட்பம், கலைத்திறனை ஒருங்கிணைக்கும் தனித்துவ இடமாக இது விளங்கும்,” என்றார்.
பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு, 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 100 பேர் வரை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்படும்.
அண்மையில் தமிழ்க் கவிஞர் அருணாசல கவிராயர், சங்கீத மும்மூர்த்தியலில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர், கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் ஸ்ரீ புரந்தரதாசர் ஆகியயோரின் சிலைகளையும் உத்தரப்பிரதேசமுதல்வர் திறந்து வைத்தது சங்கீதப்பிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
***
சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் மாயம்!
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது தங்க ஆபரணங்கள் தனியாகவும், வெள்ளி ஆபரணங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவேட்டில் 3,247.900 கிராம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுன்)மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
***
சபரிமலையில் தங்கம் திருட்டு – தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார்
பெங்களூரில் இருந்த அவரை சிறப்பு புலனாய்வு குழு படை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து சென்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் கேரள அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. தங்கக் திருட்டு முலாம் பூசுவதற்காக எடுத்துச்சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி என்ற தொழிலதிபர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறப்பு விசாரணை குழுவால் அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது
***
தஞ்சசைப் பெரிய கோவில் பற்றி தமிழ் நாடு அரசு தவறான தகவல்
தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது; பள்ளிக்கல்வி விளம்பரத்தில் தவறு’
பள்ளிக்கல்வி துறை சார்பில், கலை திருவிழாவுக்காக வெளியிடப்பட்ட, ‘வேர்களைத் தேடி’ என்ற விளம்பரத்தில், தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’ என்ற, தவறான தகவல் இடம் பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தஞ்சாவூரில் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது. ‘பெரிய கோவிலின் விமானம், 80 டன் எடையுள்ள, ஒரே கல்லால் ஆனது. அதன் நிழல் கோவிலுக்குள்ளேயே விழும்; அதுவே அதிசயம்.
தற்போது, பள்ளிக்கல்வி துறை சார்பில், ‘கலைத்திருவிழா’ நடத்துவதற்காக, விளம்பரம் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதில், ஒரு தாத்தாவும், பேத்தியும் பேசுவது போல உள்ள உரையாடலில், ‘நிழலே விழாத தஞ்சை பெரிய கோவில்’ என்ற வாசகம் வருகிறது. இது, பள்ளி மாணவர்களிடம் தவறான தகவலை பரப்புவதாக உள்ளது.உண்மையில், காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் நிழல் விழுவதை, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தன், ‘ராஜராஜேச்சரம்’ நுாலில் புகைப்படமாக ஆவணப்படுத்தி உள்ளார். இதையே, பலர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
எனவே, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள, தவறான விளம்பரத்தை, சமூக வளைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வாளர்கள் கூறுகையில், ‘மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நிழல் விழாது என்றும், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் நிழல் விழும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முரணான தகவல்களையும் பள்ளிக்கல்வி துறை சரி செய்ய வேண்டும்,” என் றனர்.
****
பட்டாசு வெடிப்பதில் டில்லிக்கு ஒரு நீதி ! தமிழனுக்கு வேறு ஒரு நீதியா? தினமலர் கேள்வி
டில்லியில் பட்டாசு வெடிக்க 5 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?
சென்னை: தீபாவளி முன்னிட்டு டில்லியில் 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.
தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.
இதனால், பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
*****

பஜனைப் பாடகர் தேர்தலில் போட்டி; இந்துக்கள் மகிழ்ச்சி!
இந்து சமயப் பாடகியான மைதிலி தாகூரை பாரதீய ஜனதா கட்சி, பீஹார் மாநில தேர்தலில் வேட்பாளராக அறிவித்தது இந்து சமய சங்கீதப் பிரியர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
தென்னாட்டில் சூர்யா காயத்ரி, பக்தி இசையைப் பரப்பியது போல வட நாட்டில் பக்தி இசையைப் பரப்பி வருபவர் 25 வயதே நிரம்பிய மைதிலி தாகூர் ஆவார் . அவர் அலிநகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் ; இது இந்துக்களை மட்டுமின்றி இளம் வாக்காளர்களை இழுக்கும் தந்திரம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 26 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 19-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi Anand