
Post No. 15,114
Date uploaded in London – – 24 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
8-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! Creativity /Motivation
படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்க மூன்று வழிகள்!
ச. நாகராஜன்
நமக்கு க்ரியேடிவிடி ஆற்றலே (CREATIVITY – படைப்பாற்றல்) – இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.
படைப்பாற்றலை ஊக்குவிக்க மூன்று வழிகள் உள்ளன.
முதலாவது வழி : மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்துப் பின் சில கணங்கள் அதை நிறுத்திப் பின் மெதுவாக வெளியே விடுதல்.
மூச்சை உள்ளே நிறுத்தி வைப்பதால் மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் சென்று சேர்கிறது. இதனால் அதிக தெளிவு ஏற்படுகிறது. ஆழ்ந்த சுவாசமானது ஆல்பா மூளை அலைகளை ஊக்குவிப்பதோடு உடலையும் மனதையும் நல்ல ஓய்வான நிலையில் இருக்க வைக்கிறது.
இரண்டாவது வழி:மூச்சு விடுவதை நாசித் துவாரங்களில் ஒன்று விட்டு ஒன்றின் மூலம் செய்வது. சூரிய நாடி, சந்திர நாடி என்று இரு நாடிகள் இரண்டு நாசித் துவாரங்களைக் குறிக்கும்.
இதில் நம்மை அறியாமலேயே மூச்சு தானே மாறி மாறி இந்த இரு நாடிகளின் ஒன்றின் வழியே செல்லும். இந்தியர்களும் சீனர்களும் இந்த இரு நாடிகளுக்கும் மூளையின் பாகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிந்தனர்.
எந்த நாசி துவாரம் வழியாக நீங்கள் மூச்சு விடுகிறீர்களோ அது மூளையின் எந்தப் பக்கத்தை – இடது பக்க மூளையையா அல்லது வலது பக்க மூளையையா, எதை – நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.
இன்னொன்றும் செய்யலாம். ஒரு நாசி துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து ஐந்து வினாடிகள் அதை நிறுத்தி வைத்து இன்னொரு நாசி துவாரத்தின் வழியே விடுவது நலம் தரும்.
அட, நமது பிராணாயாமம் போல இருக்கிறதே என்றால் அதுவும் சரிதான்! தினமும் பத்து நிமிடம் இந்தப் பயிற்சியைச் செய்தால் மனத் தெளிவு கூடும். உங்கள் மூளை அலைகளை பீட்டா நிலையிலிருந்து ஆல்பா நிலைக்குக் கொண்டு வர முடியும். இதனால் உணர்வூக்கம் அதிகமாகும். உள்ளுணர்வு கூடும்.
ஆல்பா அலைகள் ஓய்வையும் அமைதியான நிலையையும் கவனக் குவிப்புடன் கூடிய மனத்தையும் குறிக்கும். பீட்டா அலைகளோ விழிப்புடன் இருக்கும் தன்மையும், கூரிய சிந்தனையையும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனையும் குறிக்கும்.
மூன்றாவது வழி: எவ்வளவு நேரம் உங்களால் முடியுமோ அவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவது தான்.
மிகப் பெரிய ஜப்பானிய கண்டுபிடிப்பாளரான யோஷிரோ நகாமட்ஸ் (YOSHIRO NAKAMATS) தனது படைப்பாற்றலின் அதீத திறனுக்கு தான் நீருக்கடியில் நீந்துவது தான் காரணம் என்று கூறுகிறார். எடிஸனை விட அதிகம் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகை ஆச்சரியப்பட வைத்தவர் இவர். நீருக்கடியில் ஒரு தனித்துவம் கொண்ட மெடல் நோட்புக்கையும் ஒரு விசேஷ பேனாவையும் எடுத்துக் கொண்டு சென்று தனது படைப்பாற்றல் மூலம் வரும் யோசனைகளைக் குறித்துக் கொள்வது இவர் வழக்கம்.
இந்தப் பயிற்சி கார்பன்/ ஆக்ஸிஜன் சமச்சீர்தன்மையை மூளையில் ஏற்படுத்துகிறது.
இந்த மூச்சுப் பயிற்சியை பிராணாயாமத்தில் தேர்ந்த ஒரு குரு மூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் படி ஒரு யோகா மாஸ்டர் பார்த்துக் கொள்வார்.
ஆக நமது நாசியின் சுவாசத்தில் இருக்குது நல்ல படைப்பாற்றலைப் பெறுவது!
**