உலகெங்கும் சென்ற இந்திய மருத்துவ ஞானம்! (Post No.15,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,135

Date uploaded in London –   31 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அக்டோபர் 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

உலகெங்கும் சென்ற இந்திய மருத்துவ ஞானம்! 

ச. நாகராஜன் 

இன்றைய நவீன உலகில் அல்லோபதி மருத்துவம் அடைந்து விட்ட சிகரத்தை யாராலும் மறுக்க முடியாது.

 ஆனால் அதே சமயம் அற்புதமான மருத்துவ ஞானத்தை ஆதியிலேயே இந்தியா கொண்டிருந்தது என்பதையும் மறக்க முடியாது.

 சம்ஸ்கிருத மற்றும் தமிழ் மொழியில் இருந்த ஏராளமான மருத்துவ புத்தகங்கள் இன்று காணவில்லை அல்லது இருந்தாலும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் அவற்றை ஒருங்கு திரட்டி அவற்றைப் பிரசுரிக்கும் முயற்சி குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேறவில்லை.

 மருத்துவத்த்தில் நாம் சிறந்து விளங்கியதை எடுத்துக் காட்டும் சில உதாரணங்களைச் சொல்லலாம்.

 இவையெல்லாம் பல அறிஞர்களால் சமீப காலங்களில் கூறப்பட்டவை.

ஹர் பிலாஸ் சார்தா எழுதிய ஹிந்து சுபீரியாரிடி (HAR BILAS SARDA – HINDU SUPERIORITY) என்ற நூலில் மருத்துவம் பற்றி மேலை நாட்டோர் மற்றும் அராபியர் கூறியதை அவர் தொகுத்துத் தந்திருக்கிறார்.

 புராதன பாரதத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ நிபுணர்களின் பட்டியல் நம்மை மலைக்க வைக்கும் ஒன்று.

ஆத்ரேயர், அக்னிவேசர், சரகர், தன்வந்தரி, சுஸ்ருதர், பாரத்வாஜர், கபிஸ்தலர், பேதா, லடுகர்ணா, பராசரர், ஹரிதா, க்ஷரபரு, ஆஸ்வால்யனர்,

பத்ராயணர், காத்யாயனர், பைஜ்வாபி, க்ரிஸா, ஸம்க்ருத்யாயனர், பப்ரவ்யர், க்ருஷ்ணாத்ரேயர், ஔத்தாலகர், ஸ்வேதகேது, பாஞ்சாலர், கோனார்தீயர், கோனிகபுத்ரர், சபந்து, சங்கரர், காங்கேயனர் உள்ளிட்டோர் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினர்.

உடல் சார்ந்த மருத்துவத்திலும் உளவியலிலும் சிறந்து விளங்கிய இவர்கள் மனித வாழ்க்கையை நூறாண்டு காலம் ஆரோக்கியத்துடனும் செல்வ வளத்துடனும் நீடிக்க உள்ள வழிகளை அறிவுறுத்தி வந்தனர்.

“கிரேக்க மருத்துவர்கள் பாம்பு கடிபட்டு விஷம் ஏறி மரணம் அடைவதைக் குணப்படுத்தத் தெரியாதவர்கள். ஆனால் ஹிந்து

வைத்தியர்களோ பாம்புக் கடி விஷத்தை இறக்கி உடனே குணப்படுத்த வல்லவர்கள்” என்று கூறி இருக்கும் நியர்ஸஸ் (NEARCHAS),  அலெக்சாண்டரின் அரசவைக்கு வந்தால் இப்படிக் கடிபட்டவர்களைக் குணப்படுத்தும் தங்கள் வல்லமையையும் காணலாம் என்று அவர்கள் குறிப்பிட்டதையும் கூறுகிறார்.

 இரசாயனத்தில் ஹிந்து வைத்தியர்களின் நிபுணத்துவத்தைக் கூற வந்த எல்பின்ஸ்டோன் கூறுவது இது: அவர்களின் இரசாயனம் பற்றிய அறிவு மிகவும் ஆழமானது மற்றும் எதிர்பார்க்க முடியாதது”

(Mr Elphinstone : Their (Inidan) chemical skill is a fact more striking and more unexpected)

 ரஸரத்னாகரம் மற்றும் ரஸார்னவா ஆகிய இரண்டு தந்திர சாஸ்திர நூல்கள் மருத்துவத்தைப் போகிற போக்கில் மிகத் துல்லியமாகச் சொல்கின்றன. மருந்துகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை இதில் காண முடிகிறது.

 இது ஒருபுறமிருக்க மருத்துவத்தில் இந்தியாவிடமிருந்து அராபியா மருத்துவத்தில் பெற்றது ஏராளம் என்று அராபிய அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து காண்கிறோம்.

அல்மனாஸர் கி.பி. 753 முதல் 774 முடிய சம்ஸ்கிருதத்தில் இருந்த பல மருத்துவ நூல்களை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார். சரகர் மற்றும் சுஸ்ருதரின் நூல்கள் இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

 அராபிய எழுத்தாளர்களில் மிகப் பழையவரும் சிறந்தவருமான செராபியன், சரகரை மருத்துவத்தில் தலை சிறந்த நிபுணர் என்று பாராட்டுகிறார்.

 செராபியனை விட மிகச் சிறந்த மருத்துவர் ராஸெஸ் (Rhazes) என்பவர். அல் மம்சம் என்பவருடன் அவர் பாக்தாத்தில் வாழ்ந்து வந்தார்.  அவர் 12 பாகங்கள் அடங்கிய ரசாயன நூலை எழுதியுள்ளார். அவர் இரண்டு இடங்களில் சரகரை தாவர இயலிலும் (மூலிகைகள்) மருந்துகளிலும் சிறந்த நிபுணர் (அதாரிடி) என்று குறிப்பிடுகிறார்.

இன்னொரு அராபிய மருத்துவ நிபுணர் அபு அலி சினா என்பவர்.  இவர் ராஸெஸைத் தொடர்ந்து அரசவை வைத்தியர் ஆனார். இளவரசரின் அந்தரங்க மருத்துவர் இவரே.

 இவர் அரிஸ்டாடிலின் நூல்களை மொழிபெயர்த்தார். கி.பி. 1038ம் ஆண்டு மரணமடைந்தார். இவர் ஒட்டுண்ணி அட்டைகளின் கடியிலிருந்து நிவாரணம் பெறுவதைக் குறிப்பிடுகையில், ‘இந்தியர்கள் கூறுவதாவது’ என்று ஆரம்பித்து சுஸ்ருதர் கூறிய அதே வார்த்தைகளைத் தருகிறார்.

 சுல்தான் பெரோஸ் ஷா நாகர்கோட்டின் மீது படையெடுத்து அதைத் தன் வசப்படுத்தினார். அப்போது சம்ஸ்கிருதத்தில் இருந்த மருத்துவ நூல்களை அராபிய மொழியில் அயாஸுதீன் காலித் என்ற அறிஞரின் மூலம் மொழிபெயர்க்கச் செய்தார்.

 ஹருன் அல் ரஷீதின் ஆட்சிக் காலத்தில் ஹிந்து வைத்தியர்கள் பாக்தாத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 பேராசிரியர் சஸன் (Prlfessor Sachan) இந்திய- பாக்தாத் உறவைப் பற்றி ஆய்வு செய்துள்ள அறிஞர். இந்தியா இரு வழிகளில் பாக்தாத்திற்கு பங்களித்திருக்கிறது என்று இவர் கூறுகிறார்.

 ஒரு பகுதி நேரடியாக சம்ஸ்கிருத நூல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வந்தவை. இன்னொரு பகுதி இரான் வழியாக சம்ஸ்கிருதத்திலிருந்து பெர்சிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு அங்கிருந்து வந்தவை.

 இன்னும் ஏராளமான விவரங்களை அராபிய அறிஞர்களும் மேலை நாட்டு நிபுணர்களும் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

 ஹிந்துக்கள் தாம் முதன் முதலில் மருத்துவமனைகளை ஏற்படுத்தியவர்கள்; அவர்களே அதைத் திறம்பட நடத்தியவர்கள்

இதை உலகில் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.

சீன யாத்ரீகரான பாஹியான் தனது யாத்திரையில் தான் பாடலிபுத்ரத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்குச் சென்றது பற்றி விரிவாகக் கூறுகிறார்.

 அங்கு எல்லா விதமான வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் இருந்தனர் என்றும் அவர்களது தேவைக்கு ஏற்றபடி மருத்துவ சிகிச்சையும் உணவும் அளிக்கப்பட்டன என்றும் அவர் கூறுகிறார்.

 இவை அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிய வருவது ஒரு பாரம்பரியம் மிக்க பண்பாட்டில் வந்தவர்கள் இந்து நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் உலகெங்கும் உள்ளவர்களுக்குத் தங்கள் மருத்துவ அறிவை எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் அளித்தவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

பழைய ஞானத்தை மீட்டெடுப்போம்; புதிய ஞானத்தை வரவேற்று அதிலும் முன்னணியில் நிற்போமாக!

**

Leave a comment

Leave a comment