
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,138
Date uploaded in London – – 1 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
13-8-25 அன்று கல்கிஆன்லைனில் வெளியான கட்டுரை!
தங்கம் வெள்ளி, ரத்னங்களை அணிவதால் என்ன பயன்?
ச. நாகராஜன்
தங்க நகைகளையும், வெள்ளியினால் ஆன நகைகளையும் கூடவே அவற்றில் பல ரத்னங்களையும் எதற்காகப் பதித்து வைத்து அணிய வேண்டும். இந்த ஆடம்பரம் தேவையா?
இது பகுத்தறிவுவாதிகளின் கேள்வி.
அனுபவம் வாய்ந்த நமது முன்னோர் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்ததோடு அவற்றை நல்ல பல நூல்களாகத் தொகுத்துத் தந்து விட்டனர். அவற்றைப் படித்தால் பகுத்தறிவுகளுக்கு நல்ல பதில் கிடைக்கும்.
எல்லாவற்றையும் இங்கு பார்க்க முடியாவிட்டாலும் (கட்டுரையின் நீளம் கருதி) சிலவற்றைப் பார்ப்போம்.
புஷ்பராகம் (TOPAZ) பற்றிய முழு அதிசயத் தகவல்களையும் நமது முன்னோர் அறிந்து வைத்திருந்தனர். இதனால் ஏற்படும் பயன்களைப் பற்றிய நல்ல ஏராளமான குறிப்புகளும் புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பிரசவ காலத்தில் ஏராளமான பெண்மணிகளின் உயிரைக் காப்பாற்றிய பெருமை புஷ்பராகத்திற்கு உண்டு. புஷ்பராகத்தைச் சூடு படுத்தும் போது அதிலிருந்து நிலை மின்சக்தி (STATIC ELECTRICITY) உருவாகிறது. இதை எப்படி மனித நலனுக்குப் பயன்படுத்துவது என்பதை முன்னோர்கள் அறிந்திருந்தனர். இதை பிரசவ காலத்தில் பெண்மணிகளுக்குக் கொடுத்து அவர்களின் பிரசவ வலியையும் வேதனையையும் குறைத்தனர். அவர்கள் உயிரைக் காப்பாற்றினர்.
அடுத்து நீலம் சனிக்கு உரிய ரத்னமாக அறியப்பட்டது. சனியின் முழு ஆற்றலும் அதற்குள் உள்ளடக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்த முன்னோர் அதை சனி கிரகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்தனர்.
டர்க்காய்ஸ் என்னும் உபரத்தினக் கல்லை நோய் அறியும் கல்லாக ஹிந்துக்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தி வந்தனர். நோய் வருவதை முன் கூட்டியே இது தெரிவித்து விடும்! எப்படி? தாயத்து போல இதை அணிந்திருப்போருக்கு நோய் வரப்போகிறது என்றால் தோலின் மீது அணிந்திருக்கும் இதன் வர்ணம் மாறும். உடனடியாக பாதிக்கப்படப்போகின்றவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். நோய் வராமால் அவர் பாதுகாக்கப்படுவார்.
அனைத்து ரத்தினங்களையும் பற்றி ரஸ ஜல நிதி என்ற நமது நூல் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அதன் முக்கிய அறிவுரை இது தான்:
“மிக அருமையான குணநலன்கள் கொண்ட ரத்தினங்களையே நாம் மருத்துவத்திற்காகப் பயன்படுத்த வேண்டும், தோஷம் உள்ள கற்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது.”
தங்கத்தைப் பற்றிக் கூறுகையில் ரஸஜலநிதி, “தங்கம் ஆறுதல் அளிப்பது, தூய்மையானது, ஊட்டச்சத்து தருவது, விஷத்தை முறிப்பது, காச நோயைப் போக்க வல்லது, பைத்தியம் உள்ளிட்ட வியாதிகளைக் குணமாக்குவது நினைவாற்றலைக் கூட்டவல்லது, அறிவைப் பெருக்க வல்லது,உணவை நன்கு ஜீரணமாக்குவது வயிற்றில் ஜீரணமான பின் அது மூன்று தோஷங்களையும் நீக்க வல்லது. இனிமையான ருசி உடையது.” என்று கூறுகிறது.
மருத்துவக் கலவையில் தங்கத்தை உரிய முறைப்படி சேர்த்து நமது முன்னாள் வைத்தியர்கள் பல வித நோய்களைப் போக்கினர்.
ஒரு பெண்ணின் உடலில் குந்துமணி அளவாவது தங்கம் இருக்க வேண்டும் என்பது ஹிந்து சாஸ்திரங்களின் அறிவுரை, அது அவர்களுக்கு ஏராளமான நலன்களைக் கொடுக்கும், ஆகவே தான் காலம் காலமாக ஏழையாக இருந்தாலும் தாலியில் ஒரு குந்துமணி அளவாவது தங்கத்தைக் கொள்வது மரபாக இருந்து வருகிறது.
உடலுக்கு வலிமை தருவது இளமையைத் தக்க வைப்பது, நினைவாற்றலைக் கூட்டுவது என்று வெள்ளியின் குணநலன்களாகக் கூறப்படுகிறது.
இதே போல வராஹமிஹிரர் இயற்றிய ப்ருஹத் சம்ஹிதா,, போஜராஜன் இயற்றிய யுக்தி கல்பதரு,விஷ்ணுதர்மோத்தர புராணம், அக்னி புராணம், அகத்தியர் அருளிய ரத்ன சாஸ்த்ரம்,, திருவிளையாடல் புராணம், ஆகியவற்றில் ரத்னங்களைப் பற்றிய அரிய விஷயங்களை அறியலாம்.
தக்க வல்லுநர்களை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி தோஷங்கள் அற்ற ரத்தினக் கற்களை தேவைக்குத் தகுந்தபடி அணிந்தால் வாழ்க்கை வளமாகும் என்பது திண்ணம்.
***