Post No. 15,146
Date uploaded in London – 3 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் இரண்டாம் தேதி , 2025-ம் ஆண்டு
****
முதலில் தேசீயச் செய்திகள்
சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி சொற்பொழிவு
சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டு தினம் மற்றும் தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் சர்வதேச ஆர்ய சம்மேளனம் என்ற தலைப்பில் 4 நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆர்ய சமாஜம் அமைப்பானது இந்தியாவின் வேத பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றுவதாக தெரிவித்தார்.சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுத்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட பல்வேறு தியாகிகளுக்கும் ஆர்ய சமாஜம் அமைப்பு ஊக்கமளித்ததாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான சித்தாந்தங்களை ஆர்ய சமாஜம் எதிர்த்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
***
காசியில் 10 மாடி தர்ம சத்திரம்: துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை திறந்து வைத்து பேசிய குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும் தற்போது இருக்கும் காசிக்கும் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த மாற்றம் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இரு கர்மயோகிகளால் சாத்தியமானது என்று புகழாரம் சூட்டினார்.
திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாக தான் இந்த பிரம்மாண்ட கட்டடம் இந்த இடத்தில் எழுப்பி உள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தை கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதை தான் இது காட்டுகிறது. 2020 ல் எம்பியாக காசிக்கு வந்தேன்.
பிரதமர் மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில் ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், ‘இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை’ என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும், இப்போதுள்ள காசிக்கும் சம்பந்தமேயில்லை. மகத்தான மாற்றங்களுக்கு சொந்தமாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் காரணம். மனதும் முயற்சியும் இருந்தால் உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.
பெருமை
ரூ.60 கோடியில் தர்மசத்திரம் எழுந்து நிற்கிறது. இதற்கு கடன் வாங்கவில்லை. நன்கொடையால் சாத்தியமாகியிருக்கிறது. அப்படி இனிய கட்டடத்தை கலாசார பிணைப்பை இணைப்பை காசிக்கும், தமிழகத்துக்கும் இணைப்பை உருவாக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமரின் முயற்சி
சிவனிடம் இருப்பிடமாக முதலாவதாக வருவது காசிதான். காசி நகரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் அற்புதமானது. இந்த மாற்றம் பிரதமர் மோடியின் பிரியத்தையும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. யோகி அரசின் முயற்சி காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
****
சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

கோவை பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து ஆசியுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, பொன்னாடை போர்த்தி, மயில் தோகை மாலை மற்றும் தலைப்பாகை அணிவித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கவுரவித்தார். தொடர்ச்சியாக, 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் திருவுருவ படத்தை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து வழிபட்டார். விழா நிறைவடைந்த பின், பேரூர் திருமடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு நடத்தினார்.
இவ்விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவன் முன் அனைவரும் சமம். இறைவன் என்பதை உணரத்தான் முடியும். கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் இந்த யுகம் நமக்கு போதாது. பிரதமர் மோடி, 25 ஆண்டு காலம், முதல்வராக, பிரதமராக இருக்கிறார். நான் பல பிரதமர்களுடன் பழகியுள்ளேன். மோடி எப்போதும், திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுகின்றதா, அவ்வாறு செயல்படும் திட்டங்களின் பயன்கள் சாதாரண குடிமகன்களுக்கு எந்த அளவு சென்றடைகிறது என்பதை பார்க்கிறார்.
அதனால்தான், மகத்தான வெற்றி பெறுகிறார். சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் செவி கொடுத்து கேட்பாரா, தமிழில் சொன்னால் கேட்க மாட்டாரா என பலருக்கு சந்தேகம் உள்ளது.இறைவன், சமஸ்கிருதத்தில் வழிபடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. தமிழில் வழிபட வேண்டாம் எனவும் சொல்லவில்லை.
சமஸ்கிருதத்தை எதிர்த்துப் பேசுவதன் மூலம், தமிழ் ஒருபோதும் வளர முடியாது. தமிழ் ஒரு தீண்டத்தகாத மொழி என சொல்லி, சமஸ்கிருதம் ஒருபோதும் வளர முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
***
கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!
கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கோயில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
***
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 40வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைஞர்களின் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2ஆம் நாள் நிகழ்ச்சியில் கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய கோயிலில் இருந்து யானை மீது திருமுறைகள் எடுத்து வரபட்டன. இதனை தொடர்ந்து, சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
****
ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022ல் துவங்கியது.
க டந்த ஆண்டு ஜனவரி, 22ல் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
, நவம்பர் .,25ல் கோவில் கொடியேற்று விழா நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி:அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தனர். கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
நவ.,25ல் நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர் என்று நிரிபேந்திர மிஸ்ரா கூறினார்.
***
நெல்லையப்பர் கோவிலுக்கு உத்தரகண்டிலிருந்து யானையா? அரசு பதிலளிக்க உத்தரவு

‘திருநெல்வேலி நெல்லை யப்பர் கோவிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையை அழைத்து வர, தடை கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ‘பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்த, 55 வயதான பெண் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் இறந்தது.
இதையடுத்து, இந்த கோவிலுக்கு, உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து, 5 வயது குட்டி யானையை அழைத்து வர, அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளன.
உத்தரகண்ட் வனத்துறை சரணாலயத்தில் பராமரிக்கப்படும் குட்டி யானை, தாயிடம் இருந்தும், அதன் கூட்டத்தில் இருந்தும் பிரித்து, கொண்டு வரப்பட உள்ளது.
‘யானைகள் வைத்துக்கொள்ள தனி நபர்களுக்கும், கோவில்களுக்கும் உரிமம் வழங்கக்கூடாது’ என, உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.
எனவே, உத்தரகண்டில் இருந்து குட்டி யானையை அழைத்து வர தடை விதிக்க வேண்டும். கோவில் விழாக்களுக்கு இயந்திர யானைகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.
ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து குட்டி யானையை அழைத்து வரும் முடிவை கைவிட கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதத்துக்கு பின், தலைமை நீதிபதி, ”தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது மகிழ்ச்சி அளிக் கிறது. இது, குறிப்பிடத்தக்க வளர்ச் சிக்கு சமம். இருப்பினும், நாட்டின் பிற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை,” என, வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.
***
கோவில், மடங்கள் சொத்துக்கள் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தயக்கம் ஏன்? அறநிலையத்துறைக்கு ‘ஐகோர்ட்‘ கேள்வி
‘கோவில்கள், மடங்கள் மடங்களின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதில், அறநிலையத்துறை தயக்கம் காட்டுவது ஏன்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கோவில்கள், மடங்கள், ஹிந்து மத கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்த அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள், அனுமதிக்கான உத்தரவு போன்றவற்றை, உடனுக்குடன் பொது வெளியில், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய உத்தரவிட கோரி, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”டெண்டர் விபரங்கள் அந்தந்த கோவில் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
”கோவில் சொத்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. அவற்றை கொண்டு ‘சைபர்’ மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது:
தகவல் அறியும் சட்ட பிரிவு 4ன் கீழ், பொது அதிகாரிகள் தாமாக முன்வந்து சில தகவல்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
டெண்டர்கள், தணிக்கை ஆட்சேபனைகள், நில பதிவேடுகள், நிதி தொடர்பான அறிவிப்புகள், சட்டத்தின்படி பொது ஆவணங்கள் என்பதால், அவற்றை பதிவேற்றுவதில் என்ன தயக்கம்.
சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது, ஆவணங்களை பதிவேற்ற முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
அறநிலையத்துறை சட்டப் பிரிவு 29ன்படி, சொத்து விபரங்கள், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து கோவில்கள் விபரங்களும் பதிவேற்ற வேண்டும்.
இப்பணிகளை செய்ய போதுமான நிதி, உள்கட்டமைப்பு, அறநிலையத்துறையிடம் இல்லையா? இவ்வாறு நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
இதையடுத்து, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; பதிவேற்றம் செய்யாத தகவல்கள் என்ன என்பது குறித்து விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ., 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 2-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,