
Image of Paayasam
Post No. 15,150
Date uploaded in London – 4 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

லலிதா சஹஸ்ரநாமத்தில் ரத்தினக் கற்கள், புனித நகரங்களின் பெயர்கள், புஷ்பங்கள் என்ற தலைப்புகளில் மூன்று கட்டுரைகளை படித்தீர்கள் ; இப்போது தேவிக்குப் பிடித்த உணவு வகைகள், அதாவது நைவேத்யங்கள் என்ன என்ன என்பதைக் காண்போம். அகஸ்தியரிடம் ஹயக்ரீவர் சொன்ன நாமங்களைப் பார்த்தால் நாம் இறைவிக்கு என்ன படைக்கலாம் என்ற தெளிவான கருத்து உருவாகும்.
உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம் ஒன்றுதான் . பெண்களை தெய்வமாக வணங்குவதும், குணங்களை பெண்பால் சொற்களில் அழைப்பதும், இயற்கைச் சக்திகளை தாயாக வருணிப்பதும் இந்துமதம் ஒன்றுதான் .
வேத மாதாவாவான காயத்ரீயை மந்திரம் சொல்லி நாள்தோறும் வழிபடும் இந்துக்களின் எண்ணிக்கை பல கோடிகள் ஆகும் அதிதி என்ற பெண் கடவுள்தான் கடவுளர் அனைவருக்கும் தாய் என்று ரிக் வேதம் இயம்புகிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றினை மட்டும் 4 வேதங்களும் பகர்கின்றன.
இன்னும் ஒரு அதிசயம்! உலகிலேயே அதிகமான வகை நைவேத்தியங்கள், பிரசாதங்கள் , கோவில் தொடர்பான , இறைவன் தொடர்பான உணவு வகைகள் உள்ளதும் இந்து மதம் ஒன்றில்தான் . இந்தக் கிழமைக்கு என்ன பிரசாதம், இந்தப் பண்டிகைக்கு என்ன பட்சணம், இந்தக் கோவில் என்ன பிரசாதம் வாங்க வேண்டும் என்ற பட்டியலை எழுத ஒரு புஸ்தகமே தேவை
பூரி ஜெகந்நாதருக்கு ஒரு நாளில் செய்யப்படும் படைப்புகளின் எண்ணிக்கை:- பூரி ஜெகநாதர் கோவிலில் தினமும் 56 வகையான உணவுகள் சமைக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படுவது வழக்கம்.
***
இப்போது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களைக் கேளுங்கள் :
குடான்ன ப்ரீதா மானசா

தேவிக்குப் பிடித்தது வெல்லம் கலந்த சக்கரைப் பொங்கல் ஆகும் ; இப்போதும் வீடுகளிலும் கோவில்களிலும் வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்கிறோம் . பஜனைகளில் கூட அடுப்பே இல்லாமல் அவலையும் வெல்லத்தையும் கலந்து பிரசாதம் தருகிறார்கள்.
ஆண்டாளோ திருப்பாவையில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா பாடலில் அக்காரை அடிசில் பற்றிப்படுகிறார்
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
அதிலும் நெய்யைக் கலந்து அது கையில் வழியும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று ‘ரெசிப்பி’யும் கொடுக்கிறார்; இதனால் பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தில் அந்த திருப்பாவை வரும் நாளில் தடா தடா-வாக — அதாவது அண்டா அண்டாவாக- சர்க்கரைப் பொங்கலை நைவேத்யம் செய்கிறார்கள்.
***
பாயஸான்ன ப்ரியா

இன்னும் ஒரு நாமத்தில் அம்பாளுக்குப் பாயசம் பிடிக்கும் என்று வருகிறது . பாயாசங்களில் நிறைய வகைகள் உண்டு ; எதுவாகிலும் அதில் இனிப்பு இருக்கும் முந்திரி , திராட்சை, ஏலக்காய் முதலியனவும் இருக்கும் . பருப்பினை வேகவைத்து வெல்லம் போட்டு நைவேத்யம் செய்வது வழக்கம்; இது பருப்புப் பாயசம் ;மலையாள தேசத்தில் பகவதி அம்மனுக்கு சக்கப்பிரதமன் என்னும் பலாப்பழ பாயாசத்தையும் படைக்கிறார்கள் அதன் சுவையே தனி. அதில் தேங்காயை நெய்யில் வறுத்தும் போட்டிருப்பார்கள்; முந்திரிப் பருப்புக்குத் தேவையே யில்லை.
சேமியா, ஜவ்வரிசி, அவல் பாயாசங்கள் , அடைப்பிரதமன் — முதலிய எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடுத்தால் போதும் ; திருப்பதி லட்டுதான் தேவை என்பதல்ல

***
மது ப்ரீதா
மது ப்ரீதா என்று ஒரு நாமம் வருகிறது . இதற்கு உரை எழுதியோர் தேன் போன்று இனிமையானவள் என்றும் தேனினைப் பிரியமாக உண்ணுபவள் என்றும் சொல்கிறார்கள் ; ஆயுர்வேத, சித்த வைத்திய நூல்களில் மது என்னும் தேனைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன பஞ்சாமிர்தத்தில் கலக்கிறோம் மருந்துப்பொடிகளைத் தேனில் குழைத்து உண்ணும்படி வைத்தியர்கள் கூறுவார்கள்
மது நமக்கு மது நமக்கு மதுரமிக்க தமிழ் நமக்கு என்று பாரதியார் ஆடிப்பாடி கூத்தாடியதிலேருந்தே தமிழின் சுவையும் மதுவின் சுவையும் இனிமையிலும் இனிமையானது என்பதை அறியலாம் . இந்தச் சொல் வேதங்களிலும் புழங்குவதால் குறைந்தது 5000 ஆண்டுகளாக இதன் பெருமையை இந்துக்கள் அறிந்ததையும் அறிய முடிகிறது. வேதத்தில் அபூர்வ மருத்துவர்களாக வருணிக்கப்படும் அஸ்வினி தேவர்களுக்கும் பெயர் மதுச் சாட்டை; சம்ஸ்க்ருதத்தில் மது கஸஹ . நாம் சொல்லும் கசை, கசையடி என்பதெல்லாம் தமிழ் அல்ல .
ரிக்வேதத்தில் முதல் மண்டலத்தில் அருமையான பத்து துதிகளை நமக்குச் சொல்லிப் புகழ்பெற்ற புலவரின் பெயர் மத்துச் சந்தஸ் ; அதாவது தேனினும் இனிய செய்யுட்களை நமக்குக் கொடுத்தவர் ; இது தவிர சதபத பிராஹ்மண நூலில் மது பிராஹ்மண என்ற நூலினையும் குறிப்பிடுகிறார்கள். தாமரை மலரில் மொய்க்கும் அறுகாலியாக – ஆறுகால் தேனீயாக நான் உன்னைச் சுற்றிவரவேண்டும் என்று ஆதிசங்கரர் முதல் நாராயண தீர்த்தர் வரை பலரும் சம்ஸ்க்ருதத்தில் கவிமழை பொழிந்திருக்கிறார்கள்
பாஸ்கர ராயர் உரையினை நமக்குத் தமிழில் நல்கிய கணேச அய்யர் வேத வாக்கியத்தையும் நமக்கு மேற்கோளாகத் தந்துள்ளார் –யன் மதுனா ஜுஹோதி மஹதீமேவ தத் தேவதாம் ப்ரீணாதி
***
தத்யன்னா சக்த ஹ்ருதயா

மதுவை அடுத்து வரும் நாமம் இது . அம்மன் என்றால் இனிப்பு மட்டும்தான் அவளுக்குப் பிடிக்கும் என்று நினைத்து விடக்கூடாது . புளிப்புடைய தயிரில் செய்யப்பட அன்னமும்—தத்யோன்னம்– என்னும் தயிர் சாதமும் அவளுக்குப் பிரியமானதே ; ஆகையால் இதையும் நிவேதனம் செய்யலாம்.
தயிரில் நீர் கலந்தால் மோர்; அதன் பெருமையைக் கூறும் சுபாஷித ஸ்லோககங்கள் நிறையுள்ளன.
நாமங்களுக்குப் பெரியோர்கள் எழுதிய உரைகளைப் படித்தால் மேலும் பல நிவேதனைப் படைப்புகளை நாம் அறியலாம்
பிள்ளையார் என்றால் கொழுக்கட்டை, முருகன் என்றால் பஞ்சாமிர்தம் சிவன் என்றால் வெண்பொங்கல், பெருமாள் என்றால் புளியோதரை, அனுமார் என்றால் வடை, கிராம தேவதை என்றால் சத்து மிக்க கஞ்சி, ஐயப்பன் என்றால் நெய்யப்பம் என்பது போல அம்பாள் என்றால் சர்க்கரைப் பொங்கல், பாயசம் என்று சொல்லலாம் .

–subham—
Tags- லலிதா சஹஸ்ர நாமம் , உணவு வகைகள் நைவேத்யம் பிரசாதம் சர்க்கரைப் பொங்கல்,பாயசம் ,தயிர் சாதம் , கூடாரை வெல்லும்