WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,151
Date uploaded in London – – 5 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
12-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION
பெரிய சிந்தனையாளராக ஆக 6 நிலைகள்!
ச. நாகராஜன்
ஒரு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் அல்லது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். என்ன செய்வது?
பிரபல உளவியல் நிபுணர்களான லிண்டா எல்டர் மற்றும் ரிச்சர்ட் பால் சிந்தனா முறையில் ஆறு நிலகள் உள்ளன என்கின்றனர்.
ஆறு நிலைகள் என்னென்ன?
முதலாவது நிலை எப்போதாவது சிந்திக்கும் நிலை
தன்னிடம் ஏற்கனவே படிந்து கிடக்கும் கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் தக்கபடி முடிவை எடுப்பது. செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று இவரைச் சொல்லலாம். இவரிடம் தவறான கருத்துக்கள் பலவும் மண்டிக் கிடக்கும். சோதனை செய்து உறுதி செய்யப்படாத கொள்கைகளும் இவரிடம் இருக்கும். இப்படிப்பட்ட ஆசாமிகள் தான் உலகில் மிக மிக அதிகம்.பார்ப்பதை எல்லாம் நம்புவது, படிப்பதை எல்லாம் உண்மை என்று சொல்வது ஆகியவை இவரது இயல்பாகும். எதையும் சுயமாக ஆராய்ந்து உண்மையை அறியாத நிலை இது.
அடுத்த நிலை சவாலான சிந்தனையாளர் நிலை
இவர் தன்னுடைய நம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொள்பவர்.
தனது நம்பிக்கைகளை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக இது உண்மையா என்று கேள்வி கேட்டு ஆராயலாம்.
அப்போது தனது உண்மையான நிலை என்னவென்று புரியும்
ஆரம்பநிலை சிந்தனையாளர்
அடுத்த நிலை தனது கருத்துக்களையும் ஊகங்களையும் சோதனை செய்து ஆராயும் நிலை. இது தனது நம்பிக்கைகள் தோன்றிய ஆரம்ப இடத்தைப் பற்றி கேள்வி கேட்கும் நிலை. தான் நினைப்பது தான் இந்தக் கருத்தைப் பற்றிய உண்மையா அல்லது வேறு சில உண்மைகளும் உண்டா?
ஒவ்வொன்றையும் பற்றி அலசி ஆராய்ந்து பல்வேறு உண்மைகளைத் திரட்டும் நிலை இது.
அடுத்த நிலை உயர் அறிதல் நிலை.
மெடாகாக்னிஷன் (Metacognition) என்று இதைச் சொல்வார்கள். இந்த நிலையில் உங்கள் சிந்தனையைப் பற்றியே நீங்கள் சிந்தனை செய்வீர்கள். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி வேறு பல இடங்களிலிருந்து ஆதாரத்தையும், துல்லியமான தகவலையும் சேர்க்கும் நிலை இது. சேகரிக்கப்படும் அனைத்துத் தரவுகளும் தனது முந்தைய நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகிறதா, மாறிப் போகிறதா, அப்படியானால் ஏன் என்று அலசிப் பார்க்கும் நிலை இது.
அடுத்த நிலை மிக முன்னேறிய சிந்தனா நிலை.
இந்த நிலையானது உங்கள் கருத்துக்கள் உண்மையுடன் ஒத்துப் போகிறதா என்று ஆராயும் நிலை. இதில் கருத்துக்களின் ‘அறிவார்ந்த நேர்மை’ (Intellectual Integrity) ஆராயப்படுகிறது. பற்பல சிந்தனையாளர்களின் சிந்தனை ஓட்டம், செய்தித்தாள்களில் வரும் செய்திகள், விவாதங்களின் முடிவுகள் ஆகிய அனைத்தும் தொகுக்கப்பட்டு அவற்றில் முக்கியமானவை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இது
இறுதி நிலை உயர் சிந்தனையாளர் நிலை.
உலகைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்டு மேன்மையான ஒரு சத்தியம் உங்களுக்கு வழிகாட்ட, இறுதி முடிவை எடுக்கும் நிலை இதுவே.
மதம், ஜாதி, அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தாண்டி உண்மை, மேன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் நிற்கும் நிலை இது.
இந்த நிலைக்கு வரும் போது நீங்கள் வாழ்க்கையின் மிக உயரிய நிலையில் நிற்கிறீர்கள்.
இந்த ஆறு நிலைகளை ஆங்கிலத்தில் “Unreflective Thinker;‘Challenged Thinker’, ‘Beginning Thinker; ‘Practicing Thinker; ‘Advanced Thinker; ‘Master Thinker’ என்று சொல்லலாம்.
அருணகிரிநாதரே முருகனைத் தொழும் போது. “அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்கிறார்.
அறிவால் அறிந்து, பின்னர் முருகனின் இரு தாளைப் பிடிப்பவர்களே உயர் நிலையை அடைந்த உண்மை அடியார் என்று சொல்லும் போது, சாதாரண பிரச்சினைகளை அறிவால் அறிய வேண்டாமா, என்ன?
மாஸ்டர் திங்கராக ஆவோம்; மகத்தான வெற்றி பெறுவோம்!
**