அதிசய அனுபவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஈ ஈ ஜி (E E G)! (Post.15,167)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,167

Date uploaded in London –   10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

18-8-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

அதிசய அனுபவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஈ ஈ ஜி (E E G)! 

ச. நாகராஜன்

 இன்று மருத்துவத் துறையில் பல்வேறு வியாதிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு முன், ஈஈஜி எனப்படும்  எலெக்ட்ரோ என்செபலோகிராம் (Electroencephalogram) மூளையில் உள்ள மின்துடிப்புகளை அளக்க உதவும் ஒரு வழிமுறை.

லட்சக்கணக்கான பேர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? ஹான்ஸ் பெர்கர் (Hans Berger தோற்றம் 21-5-1873 மறைவு 1-6-1941) என்ற ஒரு ஜெர்மானிய விஞ்ஞானியின் விசித்திரமான அனுபவத்தினால் தான்!

பத்தொன்பது வயது ஆகும் சமயத்தில் அவர் ஜெர்மனியில் உள்ள வுர்ஸ்பெர்க்கில் ராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் அவர் ஒரு குதிரை மீது சவாரி செய்து போய்க் கொண்டிருந்தார்.

திடீரென்று குதிரைகள் தடுமாற அவர் ஒரு வண்டியின் சக்கரங்களில் விழுந்து நசுங்க இருந்தார். நல்லவேளையாக குதிரைகள் சடக்கென நின்றன. கீழே விழுந்த அவர் சின்னக் காயங்களுடன் தப்பினார்.

 அன்று மாலை அவரது தந்தையிடமிருந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டு ஒரு தந்தி வந்தது. இப்படி ஒரு தந்தி அவருக்கு முன்னும் வந்ததில்லை. பின்னாலும் வந்ததில்லை.

 இதன் காரணத்தை ஆராயப் போனார் பெர்கர். அவர் குதிரை தடுமாறி நிற்கும் போது கீழே விழ இருந்த அதே சமயத்தில் அவரது மூத்த சகோதரிக்கு தனது சகோதரன் ஒரு ஆபத்தில் சிக்கப் போகிறான் என்ற உணர்வு ஏற்பட்டது. உடனே அவர் தனது தந்தையிடம் பெர்கரின் உடல்நலத்தைச் சரிபார்க்குமாறு தூண்ட அவர் தந்தி அடித்து நிலைமையைத் தெரிந்து கொண்டார்.

 இது சுயேச்சையாக செய்தி அனுப்பப்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம் என்று எழுதிய பெர்கர், அந்த அபாயமான கட்டத்தில் நான் ஒரு டிரான்ஸ்மிட்டர் போலச் செய்தி அனுப்பினேன், அதை எனது சகோதரி ஒரு ரீசீவர் போலப் பெற்று என்னைக் காப்பாற்றினார் என்றார்.

 இதிலிருந்து அவருக்கு எண்ணம் மூலம் செய்தி அனுப்பும் டெலிபதியில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. கணிதத்துறையில் சிறந்து விளங்கி வானியல் விஞ்ஞானியாக ஆக விரும்பிய அவர்,  ஜெர்மனியில் ஜீனா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ராணுவத்தில் ஒரு வருடப் பயிற்சிக்காகச் சேர்ந்தார்.

 ஆனால் இந்த அனுபவத்திற்குப் பின்னர் அவர் டெலிபதியில் ஆர்வம் கொண்டு உளவியல் படிக்கத் தொடங்கினார்.

மூளை இயல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் மூளையில் இயங்கும் மின்அலைகளைப் பார்த்து அதிசயப்பட்டார். 1924ம் ஆண்டு முதன் முதலாக மூளையில் இயங்கும் அலைகளை ரிகார்டு செய்யும்

ஈ ஈ ஜியை அவர் கண்டுபிடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு வியந்த மருத்துவர்கள் அப்போதிலிருந்து உலகெங்கும் ஈஈஜியை எடுக்கத் தொடங்கினர்.

பால் ப்ரோகா என்பவர் மூளைஉளவியலில் ஒரு நிபுணர். அவர் மூளை எப்படி மொழியை உணர்கிறது என்று ஆராயலானார். நோயாளி ஒருவருக்கு பேசும் சக்தி போய்விட்டது. ஆனால் அவர் மிக புத்திசாலியாரக் இருந்தார். அவரை ‘பேஷண்ட் டாம்’ என்று அனைவரும் கூற ஆரம்பித்தனர். ஏனெனில் அவரால் டாம் என்ற ஒரு வார்த்தையை மட்டுமே கூற முடிந்தது. அவர் இறந்த போது அவரது உடல்கூறை ஆராய்ந்த ப்ரோகா இடது ஃப்ரண்டல் லோபில் இருந்த ஒரு பகுதியே மூளையே மொழியை அறிந்து தகவல் பரிமாற்றத்திற்கு  ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.

இந்தப் பகுதிக்கு ‘ப்ரோகா பகுதி’ (Broca’s Area)  என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஏதேனும் ஒரு பெரிய மோசமான சம்பவம் ஒரு நோயாளிக்கு நிகழ்ந்த பின்னர் தான் அவரது மூளை மீது மருத்துவர்களின் கவனம் சென்று கொண்டிருந்த காலத்தில், ஈஈஜி கண்டுபிடிப்பு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. முன்னாலேயே வரப் போகும் ஆபத்தைத் தடுக்க உதவியது.

இதைக் கண்டுபிடிக்க பெர்கரைத் தூண்டியது அதிசயமான ஒரு டெலிபதி செய்தியின் அனுபவம் அவரது சகோதரிக்கு ஏற்பட்டதால் தான்!

விஞ்ஞானம் வளரும் விதமும் விந்தையானது தான்!

**

Leave a comment

Leave a comment