Written by London Swaminathan
Post No. 15,169
Date uploaded in London – 10 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் இரண்டாம் தேதி , 2025-ம் ஆண்டு
****
முதலில் தேசீயச் செய்திகள்
வந்தே மாதரம் பாடல் வரிகளை ஜவஹர்லால் நேரு… நீக்கினார்!: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு
“தேசபக்தி பாடலான வந்தே மாதரத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய வரிகள், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவால் வேண்டுமென்றே வெட்டி துாக்கி எறியப்பட்டன. அதுவே பிரிவினைக்கான விதைகளை விதைத்து, பிளவுபடுத்தும் மனப்பான்மையை உருவாக்கி, நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
வங்க மொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ‘வந்தே மாதரம்’ பாடலை, 1875 நவ., 7ல், அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், ‘ஆனந்த மடம்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நாடு முழுதும் அடுத்த ஓராண்டுக்கு கலைநிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சிறப்பு தபால் தலை இதன் ஒருபகுதியாக, தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.
வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகளானதை குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை அவர் வெளியிட்டார். தேசிய கலைஞர்களால் பாடப்பட்ட, ‘வந்தே மாதரம்’ பாடலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
வந்தே மாதரம் பாடல், நாட்டின் சுதந்திர போராட்டத்தின் குரலாக ஒலித்தது. அது, ஒவ்வொரு இந்தியரின் உணர்வையும் வெளிப்படுத்தியது. ஆனால் துரதிருஷ்டவசமாக, 1937ல், வந்தே மாதரம் பாடலில் இடம் பெற்றிருந்த சில முக்கிய வரிகள், வெட்டி துாக்கி எறியப் பட்டு, அதன் ஆன்மா அகற்றப்பட்டது.
வந்தே மாதரம் பாடலை பிளவுபடுத்திய செயலே, பிரிவினைக்கான விதைகளையும் விதைத்தது. நாட்டை கட்டமைக்கும் இந்த மஹா மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது என்பதை, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்.
வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம்,. இது பாரத அன்னை மீதான பக்தி வழிபாடு. இது, வரலாற்றுடன் நம்மை இணைக்கிறது. நம் எதிர்காலத்திற்கு புதிய தைரியத்தை அளிக்கிறது. இந்தியர்களான நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை.. என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விழா நவம்பர் 7- ஆம் தேதி துவங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.
****
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1896-ல் தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் இனிமையான இசையில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல், தேசத்தின் ஆன்மாவின் குரல், பிரகடனம் மற்றும் உணர்வாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்வயம்சேவகர்கள் உட்பட அனைவரும் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம்
நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலையில் தேவஸ்தானத்தின் மாதந்திர கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், திருமலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
****
ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்கம்: தமிழக ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் பங்கேற்பு
பகவத் ராமானுஜரின் பீடங்களை ஒருங்கிணைத்து, தென்னாச் சாரியார் சம்பிரதாய சபை சென்னையில் துவக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், வானமாமலை, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கோவிலுார், ஆழ்வார்திருநகரி பிள்ளான், தொட்டாசார், எம்பார், ஆளவந்தார் உள்ளிட்ட 74 பீடங்களை நியமித்தார்.
இந்த 74 பீடங்கள், துவங்கிய காலகட்டத்தில் இருந்தே ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தன. பல்வேறு காலகட்டங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல ஜீயர்கள் ஈடுபட்டனர்.
டாக்டர் வெங்கடேஷின் உபன்யாசத்துடன் விழா துவங்கியது. ஒரே மேடையில் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரிய சுவாமிகள், திருமலை அநந்தாண்பிள்ளை அக்கா ரக்கனி ராமானுஜாசாரியார் சுவாமிகள்…
விழா சிறப்பு மலரை, திருக்கோவிலுார் எம்பெருமானார் ஜீயர் வெளியிட, திருவெள்ளறை மேலத்திருமாளிகை அம்மாள் ஸ்ரீ விஷ்ணுசித்தன் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.
பிற்பகல், ஜீயர்கள் மற்றும் ஆச்சாரியா புருஷர்கள் ஒருங்கிணைந்து, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபையை வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கை நாராயணன் மற்றும் விழாக் குழுவினர்களான கல்யாணி நாராயணன், மல்லி சதீஷ்குமார், சவுரிராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
****
பட்டீஸ்வரம் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் அடாவடித்தனம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேற்று நடந்த நேர்காணலில், 375 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் கோவில் உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர்.
அப்போது, ‘ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்? ஈ.வெ.ரா.வின் பொன்மொழிகளில் உங்களை கவர்ந்தது எது? திராவிட மாடல் அரசு, தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு செய்த பணிகள் என்ன?’ போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பங்கேற்ற பலரும் தடுமாறினர். நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘ஆன்மிகத்துக்கும், ஈ.வெ.ரா.வுக்கும் என்ன சம்மந்தம்? கடவுள் இல்லை என்று சொன்னவரை பற்றி, வேலை தேடி வருவோரிடம் கேள்வி எழுப்பினால் எப்படி? கோவில் சம்மந்தமாகவோ, சைவ சமயம் சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த கேள்வி எழுப்பினால், நாங்கள் பதில் சொல்லியிருப்போம்’ என்றனர்.
*****
சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா மாநாடு நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனம் என்ற அடிப்படையை கொண்டு பாரதம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாரத நாட்டில் சனாதன கொள்கையை அழிய விடாமல் பாதுகாப்பதில் ஆதீனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார். ஐந்தாயிரம் ஆண்டுகளாக பாரத நாட்டில் சனாதனம் பாதுகாக்கப்பட்டு வருவாதாகவும், சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா மலரை வெளியிட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் 60 வயதை எட்டியதை அடுத்து மணிவிழா மாநாடு நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த விழாவில் குன்றக்குடி ஆதீன பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமிகள், மேகாலயா முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாங்க: ஹிந்து முன்னணி அழைப்பு
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.
மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்திய சட்டப் போராட்டம் இதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும் கோவில் நிர்வாகம் நடைமுறைப் படுத்தவில்லை.
வழிபாடு நம் உரிமை; நீதிமன்றமும் சட்டப்படி அதை உறுதி செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
இதை மாற்றும் வகையில், வரும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபட, முருக பக்தர்கள், ஆன்மிக குழுவினர், பாத யாத்திரை, காவடி குழுவினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
***
மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
கோவை மாவட்டம், மருதமலையில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடம், அடிப்படை வசதிகள் போன்ற முழு விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், ‘மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம், 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு, கடந்த மாதம் 9ல் தடையில்லா சான்று பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் சிலை அமைவதால், யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கூறியதாவது:சிலை அமைவதற்கு, இந்த நீதிமன்றம் தடையாக இருக்காது. அதேநேரம், வனப்பகுதியில் இவ்வளவு உயரத்தில் சிலை அமைக்கப்படும்போது, அதை பார்வையிட எவ்வளவு பேர் வருவர்; குறைந்தபட்சம் 1,000 கார்களாவது வரும்; அவற்றை எங்கு நிறுத்துவீர்கள்?
அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்ய, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது; அவர்கள் விட்டு செல்லும் குப்பை எவ்வாறு அகற்றப்படும்?
இவர்கள் விட்டு செல்லும் திடக்கழிவுகளால், நாளடைவில் வனமே மறைந்து விடாதா? இந்த திட்டத்தால், வனப்பகுதிக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படக் கூடாது.
இங்கு 184 அடி உயர சிலை அமைத்தால், அதை சுற்றிய பகுதிகள் நகரமயமாகாதா; பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகள் சுருங்கி வருகின்றன. இதன் காரணமாக, மனித- – விலங்குகள் மோதல் நிகழ்வுகளும் நடக்கின்றன. போதிய வசதிகள் செய்யப்படவில்லை எனில், நெரிசல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ”நீதிமன்றம் கோரிய விபரங்களுடன் விரிவான அறிக்கையை, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்கிறோம்,” என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், ‘கூட்ட நெரிசல் மேலாண்மை நிர்வகிக்கும் முறை, சிலை அமைய உள்ள சரியான இடம், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்த முழு விபரங்களுடன், அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக, அத்துறை நிபுணர்கள் ஆய்வு செய்வது குறித்து, இந்த நீதிமன்றம் முடிவு செய்யும்’ என உத்தரவிட்டு, விசாரணையை டிச., 5க்கு தள்ளிவைத்தனர். அதுவரை, பணிகளை துவக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
***
பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள்
பீஜிங்: சீனாவில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட நடன நாடகத்தை கலைஞர்கள் அரங்கேற்றினர்.
பிரபல சீன அறிஞர் மறைந்த பேராசிரியர் ஜி சியான்லின் எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகமான “ஆதி காவ்யா-முதல் கவிதை”யை சீன நடனக் கலைஞர்கள் குழு அரங்கேற்றியது.
இது குறித்து இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளதாவது:
சீன பரதநாட்டிய நிபுணர் ஜின் ஷான்ஷான் இயக்கிய இந்த நாடகம், 50க்கும் மேற்பட்ட திறமையான உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண திரண்டு வந்த பார்வையாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.
இந்த நடன நாடகம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி முதன் முதலில் கடந்த ஜனவரி-2025 ல் ஷூனி கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.. இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் 16–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 9-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,