
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,177
Date uploaded in London – – 13 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
27-8-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
கோமோரெபி (Komorebi): இயற்கை அன்னை தன்னைப் போற்றும் போது தரும் அருள் கொடை!
ச. நாகராஜன்
எழில் கொஞ்சும் இயற்கை அன்னை மனித குலத்தை நேசிக்கும் அருள் தாய். தன்னைப் போற்றி வணங்குபவர்க்கு அவள் உள்ள நலம், உடல் நலம், நீடித்த வாழ்வு, மன அமைதி உள்ளிட்டவற்றை வழங்குகிறாள்.
இந்திய நாகரிகம், ஜப்பானிய நாகரிகம், சீன நாகரிகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இதை உணர்ந்தவர்களாவர்.
ஜப்பானிய நாகரிகத்தில் கோமோரெபி என்பது ஒரு முக்கியமான அம்சம்.
கோ, மோ, ரெபி ஆகிய மூன்று வார்த்தைகள் சேர்ந்தது தான் கோமோரெபி.
கோ என்றால் மரம் என்று பொருள். மோ என்றால் ஊர்ந்து நகர்தல் என்று பொருள். ரெபி என்றால் சூரிய ஒளி என்று பொருள். ஆக கோமோரெபி என்ற வார்த்தைக்கு சூரிய ஒளி மரங்களுக்கு இடையில் வடிகட்டப்பட்டு ஊர்ந்து செல்லும் போது ஏற்படும் மாயாஜால விளைவு என்று பொருள்.
ஒளி அந்த இயற்கைச் சூழலில் மரங்களுக்கு இடையே செல்லும் போது மரங்களின் இலைகள் மீது பட்டு வடிகட்டப்பட்டு நம் மீது வந்து விளையாடும்.
இயற்கைக்கும் நமக்கும் உள்ள புனிதமான தொடர்பை வலுப்படுத்துவது கோமோரெபி.

இது நமக்கு ஏற்படுத்தும் முக்கியமான நல்ல விளைவு மன அழுத்தத்தைக் குறைப்பது தான். மன நிலையைச் சீராக்கி மூளை இயக்கத்தை இது மேம்படுத்துகிறது.
சூரிய ஒளி நியூரோ டிரான்ஸ்மிட்டரை வெளிப்படுத்தும் செரோடோனினை வெளிப்படுத்தி மன மகிழ்ச்சியையும் நல்ல உணர்வையும் ஏற்படுத்துகிறது.
அது மட்டுமல்ல, படைப்பாற்றலை ஊக்குவித்து விழிப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு ஓய்வை நல்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
ஒரு முறை இந்தக் கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பில் நாம் சிறிது நேரத்தைக் கழித்தாலும் அது நாம் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலும் அன்றாட வாழ்வில் நம்மிடம் குடி கொண்டு விடும்.
அடிக்கடி குற்றாலம், பொதியமலை, தேக்கடி உள்ளிட்ட இடங்களுக்கும் முடிந்தவர்கள் இமயமலைச் சாரல் சார்ந்த இடங்களுக்கும் சென்று கோமோரெபி பயனைப் பெறலாம்.
இப்படி இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அதைத் தங்கள் இல்லத்திலும் கூட கொண்டு வரலாம்.
இதற்கென உள்ள, வீட்டில் வளரும் நல்ல செடிகளை வாங்கி அதை ஒளி உள்வாங்கும் இடங்களில் வைப்பதன் மூலம் செடிகளில் வடிகட்டப்பட்ட ஒளியையும் நிழலையும் பெறலாம்.
இயற்கைக் காட்சிகள் நிறைந்த காட்டு வளத்தைக் காட்டும் ஓவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இவற்றை அறையின் சுவரில் மாட்டி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு காட்டின் நடுவே இருப்பது போன்ற உணர்வை மனதில் கொண்டு வந்து அனுபவிக்கலாம்.
எங்கு வாழ்ந்தாலும் கூட அன்றாட வாழ்வில் கோமோரெபி எஃபெக்டைக் கொண்டு வர முடியுமா?
முடியும். இதோ வழிகள்:
பூங்கா, மரம் அடர்ந்த பகுதிகளுக்குச் சென்று எப்படி ஒளியானது மரங்களின் ஊடே வருகிறது என்பதைக் கூர்ந்து கவனித்து ஒளியையும் அதன் நிழலையும் மனதில் இருத்தி ஓய்வைப் பெறலாம்,
வீட்டின் உள்ளே உட்புறத்தை அலங்கரிக்கும் போது திரைச்சீலைகளை இயற்கைக் காட்சிகளுடன் கூடியதாக -, மரங்களின் மீது ஒளிபடும் காட்சியுடன் – வாங்கி அதை மாட்டலாம். வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய செடிகளை வாங்கி கோமோரெபி விளைவை அனுபவிக்கலாம்.
போட்டோ பிரியர்கள் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து அதை பெரிய சைஸில் வீட்டில் மாட்டலாம். ஓவியர்கள் தங்களுக்குப் பிடித்த வனக் காட்சிகளை வரைந்து அதை மாட்டிக் கொள்ளலாம்.
இப்படி காட்டு வளத்தை, வீட்டு வளம் கூட ஒருமுனைப்பட்ட கவனத்துடன் இல்லத்தில் திறம்படக் கொண்டு வந்தால் ஜப்பானின் கோமோரெபி நமது வீட்டிற்குள் வந்தது போல் தான்!
இந்த இயற்கை வனப்பை அனுபவிக்கலாமே!
***