ஐயையோ ஹாபூப்! (HABOOB) ஒண்ணும் தெரியலையே! (Post No.15,187)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,187

Date uploaded in London –   16 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

30-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

ஐயையோ ஹாபூப்! (HABOOB) ஒண்ணும் தெரியலையே! 

ச. நாகராஜன் 

2025 ஆகஸ்ட் 25ம் தேதி அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தில் வந்து விட்டது ஹாபூப்! அலறி விட்டனர் மக்கள்!!

அரிஜோனா மாநிலத்தில் போனிக்ஸ் பகுதியில் ஏற்பட்டது இந்த ஹாபூப்!

  அது என்ன ஹாபூப் என்று கேட்கிறீர்களா?

 ஹாபூப் என்றல் மணல்காற்றுப் புயல் என்று பொருள்.

 அதி தீவிரமான புழுதிப் புயல் அழுத்தமான காற்றையும் மணலையும் சேர்த்துக் கொண்டு 5000 அடி உயரம் கொண்டு எதிரே வந்தால் எப்படி இருக்கும்? இதை புழுதிச் சுவர் என்றே அனைவரும் கூறுகின்றனர்.

 இந்த ஹாபூப் வார்த்தை ஹப் என்ற அராபிய வார்த்தையிலிருந்து உருவானது. சூடானில் புழுதிப் புயல் ஏற்படும் போது அதை இந்த வார்த்தையால் குறிப்பிடுவது வழக்கம்.

 பலமாக இடி இடிக்கும் போது காற்று வேகமாக அடிக்க அப்போது இந்தப் புழுதிப் புயல் ஏற்படும்.

சில சமயம் இது மழையுடன் ஏற்படும்.

 பொதுவாக இது பாலைவனங்களிலும் மிதவறட்சிப் பிரதேசங்களிலும் ஏற்படும் ஒன்று.

இது ஏற்படும் போது மிக அருகில் இருப்பது கூட எதுவும் தெரியாது.

இந்தச் சமயத்தில் வாகனங்களை ஓட்டிச் சென்றால் அது எவ்வளவு பெரிய அபாயத்தை விளைவிக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எதிரே வரும் வாகனங்களும் தெரியாது. நமக்கு முன்னே போகும் வாகனங்களும் தெரியாது. 

Photo Credit Janet Whalen 

இது போன்ற ஹாபூப் சமயத்தில் கார்களை ஓட்டிச் செல்பவர்கள் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட வேண்டும். பிரேக்கிலிருந்து காலை எடுத்து விட வேண்டும். ஏனெனில் பிரேக் லைட் எரிந்தால் பின்னால் வரும் வண்டிகள் உங்கள் மீது வந்து மோதி விடக்கூடும்.

 ஆகஸ்ட் 25, 2025ல் அடித்த புழுதிப் புயல் போனிக்ஸில் உள்ள ஸ்கை ஹார்பரில் வீசி அங்குள்ள டெர்மினல் 4-இன் கூரைகளைப் பிய்த்து பறக்க வைத்தது. அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன; மரங்கள் வீழ்ந்தன.

பகல் இரவாகி இருளானது.

 ஹாபூப் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 22 மைலிலிருந்து 62 மைல் வரை இருக்கும்.

 இது வரும் என்பதற்கான எச்சரிக்கை எதுவும் இருக்காது. திடீரென்று வரும்.

அடிக்கின்ற காற்று வேகத்தில் மின்கம்பங்கள் அனைத்தும் சாயும். மின்சாரத் தொடர்பு நின்று விடும்.

சுமார் இரண்டு மணி நேரம் வரை இது இருக்கும். பின்னர் அடங்கி விடும்.

\புழுதிப்புயல் அடிக்கும் போது சுவாசத்தைத் தொடர்ந்து அடைவதற்காக சுவாசப் பாதுகாப்பு சாதனைத்தை அணிய வேண்டும். கண் பாதுகாப்புக்கான சாதனத்தையும் அணிய வேண்டும். உடனடியாக ஒரு ஒதுங்குமிடத்தைக் கண்டுபிடித்து அங்கு போய் இருப்பது நல்லது. புழுதிப்புயல் அடங்கியவுடன் மெதுவாக வெளியே வரலாம்.

 அமெரிக்க அரசு உடனே அந்தப் பகுதிகளைச் செப்பனிடும் வேலையை ஆரம்பித்தது. செவ்வாய்க்கிழமை காலை (26-5-25) நிலைமை கட்டுக்குள் வந்தது.

 சாதாரணமாக சஹாரா பாலைவனம், சூடான், குவைத், இராக் உள்ளிட்ட இடங்களில் புழுதிப்புயல்கள் ஏற்படுவது சகஜம்.

இன்னும் வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்காவிலும் ஹாபூப் பாதிப்புகள் உண்டு.

 இதே ஹாபூப் செவ்வாய் கிரகத்திலும் ஏற்படுவதால் அதை பூமி ஹாபூபுடன் ஒப்பிடலாம்.

ஏராளமாக புழுதி படர்வதால் நுட்பமான சாதனங்களைத் தயாரிக்கும் பணி தடைப்படுகிறது. ஆகவே தொழிலகங்கள் முழுவதையும் சீலிட்டு புழுதி வராமல் காக்கின்றனர். இதனால் 50000 டாலர் வருடத்திற்கு சேமிக்கப்படுகிறது என்றும் தயாரிப்புகள் 70 சதவிகிதம் தடையின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும் வணிகர்கள் கூறுகின்றனர். ஆகவே இங்கு எல்லா இடங்களிலும் புழுதி வரமுடியாதபடியான உரைகளை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

 ஏனெனில் புழுதிப்புயலுக்கே உரை போட முடியாதல்லவா?!!!

***

Leave a comment

Leave a comment