WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,191
Date uploaded in London – 17 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-11-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஆற்றிய உரை.
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
நிலைமை சொல்லு நெஞ்சே! தவம் என் செய்தாய்?
கலைகள் ஆய வல்லான், கயிலாய நல்
மலையன், மா மயிலாடுதுறையன், நம்
தலையின் மேலும், மனத்துளும் தங்கவே
– திருநாவுக்கரசர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான மாயூரம் என்று அறியப்படும் மயிலாடுதுறை திருத்தலமாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இது அமைந்துள்ளது,
இறைவன் : மயூர நாதர்
இறைவி : அபயாம்பிகை
தல விருட்சம் : மாமரம், வன்னி மரம்
தீர்த்தம்: பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரி ஆறு
இத்தலத்திற்கு சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென் கயிலை ஆகிய பெயர்களும் உண்டு.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.
பார்வதி தேவியின் தந்தையான தட்சன் தான் செய்த யாகத்திற்கு சிவனையும் பார்வதியையும் அழைக்காமல் விட்டு விட்டான். இதனால் பார்வதி தேவியிடம் சிவபிரான் அந்த யாகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் தந்தை நடத்தும் யாகமாதலால் பாரவதி அங்கே சென்றார். அங்கு தட்சன் பார்வதியை மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபிரான் பார்வதி தேவியை மயில் வடிவில் பிறக்குமாறு சாபமிட்டார்.
சிவனிடம் தேவி மன்னிப்பு கோர, மனமிரங்கிய சிவபிரான் சாபத்தின் காலத்தைச் சுருக்கினார். மயில் வடிவம் கொண்ட தேவி சிவனை லிங்க வடிவில் பல தலங்களில் வழிபட்டார். அவற்றுள் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலும் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாத ஸ்வாமி திருக்கோவிலும் குறிப்பிடத்தக்கவையாகும்.
இங்கு தான் பார்வதி தேவி தன் சாபவிலக்கைப் பெற்றார். தன் இயல்பான வடிவமான அபயாம்பிகையாக சிவபிரானுடன் தேவி இணைந்தது இங்கு தான். இதனால் இங்கு சிவபிரான் மயூரநாதர் என்ற பெயரைப் பெற்றார்.
ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தை இங்குள்ள கோவில் கொண்டுள்ளது. கோவிலின் உள்ளே செல்லும் போது குளம் இடது புறத்தில் அமைந்துள்ளது. அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் கணபதி சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன் பலிபீடமும் மூஞ்சூறும் உள்ளன. இடது புறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்கு பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன.
அடுத்து நுழைவாயில் உள்ளது. அதைக் கடந்து சென்றால் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது.
பிரகாரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், 63 நாயன்மார்கள் ஆகியோருடன் பல லிங்கங்கள் காட்சி தருகின்றன.
கர்பக்ருஹத்தில் மயூரநாதர் காட்சி தருகிறார். தொடர்ந்து நடராஜர், விநாயகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தெய்வங்களும் காட்சி தருகின்றனர். அடுத்து அபயாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இங்கு பிரகாரத்தில் லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
இங்கு காவிரி ஆறு குறுகிய அளவில் ஓடுகிறது.
காவிரியைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஒரு அசுரன் காவிரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். இந்த இடம் தான் மயூரம். இங்கு ஸ்நானம் செய்து மயூரநாதனை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தேவி மயில் ரூபமெடுத்து சிவபிரானை பூஜித்த தலம் இது.
இங்குள்ள முக்குறுணிப் பிள்ளையார் பிரபலமானவர். கோவிலின் வட கோடியில் ஆதி மயூரநாதர் என்னும் சந்நிதி உள்ளது. இங்கு தான் துலா ஸ்நானம் பூர்த்தி ஆகிறது என்பது ஐதீகம்.
தேவலோக ரம்பை, காவிரியில் ஸ்நானம் செய்து, தனது கல் உருவம் நீங்கப் பெற்ற தலம் இது.
காவேரியின் துலா ஸ்நான கட்டத்திற்கு ரிஷப கட்ட தீர்த்தம் என்று பெயர். இங்கு மயிலம்மை சந்நிதியையும் சட்டநாதரையும் கடைமுகத்தன்று அல்லது அதற்கு மறுநாள் நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால் துலா ஸ்நான பலன் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.
விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர் கோவில் ரிஷப தீர்த்தக் கரையில் உள்ளது.
சூரியன், சந்திரன், நவகிரகங்கள், புலஸ்தியர், வியாஸர், சூதர், சௌனகர் உள்ளிட்டோர் காவிரியில் ஸ்நானம் செய்து மயூரநாதரை தரிசித்து தங்கள் இஷ்டபலனை அடைந்தனர்.
மாயூரம் காசிக்கு சமமான ஸ்வேதாரண்யம், பஞ்சநதம், கௌரிமாயூரம் அர்ஜுனம், சாயாவனம், ஶ்ரீ வாஞ்சியம் ஆகிய ஆறு தலங்களுள் ஒன்றாக அமைகிறது.
பிராஹ்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்கள் மாயவரம் மற்றும் அருகில் உள்ள கோவில்களில் வழிபட்டுள்ளனர். இதில் சாமுண்டி மாயவரம் கோவிலில் வழிபட்டுள்ளார்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பதிகம் பாடி அருளியுள்ளனர்.
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது என்ற வழக்கு மொழி ஒன்றே மாயவரத் தலம் பற்றிய சிறப்பை நன்கு விளக்கும்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மயூரநாதரும் அபயாம்பிகை அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி! வணக்கம்!!