Written by London Swaminathan
Post No. 15,192
Date uploaded in London – 17 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (16- 11 -2025) உலக இந்து செய்திமடல்
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 16- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
****


திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் தந்தவர் கைது! டில்லியில் இருந்து ரசாயனம் சப்ளை செய்தது அம்பலம்
திருமலை திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க, தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த விவகாரத்தில், ரசாயனங்கள் சப்ளை செய்த டில்லியைச் சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தம். லட்டு தயாரிப்புக்கான நெய் கொள்முதலுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது டெண்டர் விடுவது வழக்கம்.அப்படி, கடந்த ஆண்டு மே மாதம் டெண்டர் விடப்பட்டதில், தமிழகத்தின் திண்டுக்கல்லில் இயங்கும் ஏ.ஆர்.பால் பண்ணை நிறுவனம், 10 லட்சம் கிலோ நெய் வினியோகத்துக்கு டெண்டர் எடுத்தது.
அதிகாரிகள் சந்தேகம் அந்த நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.
இதையடுத்து, புனிதமான லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை வினியோகிக்க, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசு அனுமதி அளித்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
இதனால், இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
நீதிமன்ற காவல் இக்குழு நடத்திய விசாரணையில், கொழுப்பை அதிகரிக்கும் வகையில், ‘மோனோகிளைசிரைட்ஸ், அசிட்டிக் அமிலம்’ போன்ற ரசாயனங்களை பாமாயில் எண்ணெயில் கலந்து, அதை நெய் போன்று மணம் வீச செய்து, திரிதிரியாக உருவாக்கியது தெரியவந்தது.
இந்த ரசாயனங்களை, உத்தரகண்டில் இயங்கி வரும், ‘போலேபாபா’ பால் பண்ணைக்கு, டில்லியை சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா கடந்த ஏழு ஆண்டுகளாக வினியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கலப்பட நெய் தான், வைஷ்ணவி மற்றும் ஏ.ஆர்.பால் பண்ணை போன்ற பிராண்டு பெயர்களில் திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வர்த்தகர் அஜய்குமார் சுகந்தாவை டில்லியில் கைது செய்து திருப்பதிக்கு அழைத்து வந்த அதிகாரிகள், நெல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதே நேரத்தில்
அந்த கால கட்டத்தில் நிர்வாக அதிகாரியாக கோலோச்சிய தர்மாரெட்டியை நேற்று சிறப்பு ஆய்வு குழு திருப்பதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது.
***
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து, அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பூஜாரி மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். ‘பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்’ என, கண்டக்டர் அந்தோணி அடிமை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், ‘இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லும். ஏன் இன்று பைபாசில் இறங்க சொல்கிறீர்கள்?’ என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கண்டக்டர், ‘பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் வர முடியாது’ என, அவதுாறாக பேசினார்.
அந்த பஸ்சில் வள்ளியூரை சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார்.
சுப்பிரமணியன் இறங்க மறுத்ததால், பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கு அவர் குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சுப்பிரமணியனிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பஸ் நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.
மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட கண்டக்டர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர்
பயணியிடம் அவதூறாக பேசிய நாகர்கோவில் அரசு பஸ் கண்டக்டர் அந்தோணி அடிமையை சஸ்பெண்ட் செய்து, போக்குவரத்து பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார்.
****
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு மறைமாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு வழக்கில் 1966ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னும் ரோமன் கத்தோலிக்க மிஷனின், தற்போது மதுரை ஆர்ப்பிஷப்பகம் – மதுரை மறைமாவட்ட பிஷப் இல்லம் வசமே உள்ளது.
‘மதுரை புரோக்ரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரீஸ்’ என்ற பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நிலத்தில் கட்டுமானத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர், மண்டல இணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர், மறைமாவட்ட பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி நவ., 25க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
****
பஜனைப் பாடகி மைதிலி தாகூர் மாபெரும் வெற்றி

பஜனைப் பாடல்களைப் பாடி பக்கதர்களின் பேராதரவினைப் பெற்ற 25 வயது பாடகி மைதிலி தாகூர் பீஹார் சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றது இந்துக்களுக்கு பெரிய மகிழ்சசியை அளித்துள்ளது
பீஹார் சட்டசபையின் இளம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மைதிலி தாகூர். இவரின் வயது 25. நாட்டுப்புற பாடகியான மைதிலி தாகூர், பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த அதே நாளில் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சமூக வலைதளத்தில் பிரபலமானவர். இப்போது அலி நகர் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகி உள்ளார். . இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட ஆர்.ஜே.டி. வேட்பாளர் வினோத் மிஸ்ராவை 11,730 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ஹிந்தி போஜ்புரி மைதிலி அவதி மொழிகளில் உள்ள கிராமப் புற பாரம்பரியப் பாடல்கள் பாடி பெரும் புகழ் பெற்றவர்.
இதன் மூலம் பீஹார் அரசியலில் மிக இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வினோத் மிஸ்ராவை எதிர்த்து களம் கண்டார்.
அலிநகர் தொகுதி ஆர்ஜேடியின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதியாகும்.
பீஹாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டி என்ற ஊரில் 2000ம் ஆண்டு பிறந்தவர் மைதிலி தாகூர். இசைத்துறையில் தமக்கு என தனியிடம் பிடித்தவர்.
டில்லி பல்கலைக் கழகத்தில் 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்
100க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றி, அதன் மூலம் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். 2021ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை வென்றவர்.
****
திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!
அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 44 லட்சம் ரூபாய் வழங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தனது பிறந்தநாளை கொண்டாடினார். திருமலையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகையில் கே.என்.நேருவின் பெயர் மற்றும் அவர் வழங்கிய நன்கொடை குறித்த விவரங்கள் ஒளிபரப்பப்பட்டது.
****
லண்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு டாக்டர் உடையாளுர் கல்யாணராமன் தலைமையில் ராதா கல்யாண மகோத்சவம் நடைபெறவுள்ளது. லண்டனில் வெம்பிளி பார்க் ஸ்டேஷனிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ள Sattavis Patidar (பதிதார்) ஹாலில் இந்த வைபவம் மூன்று நாட்களுக்கு காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம் என்றபோதிலும் முன்னதாகப் பதிவு செய்வது அவசியம் .Sri Radha Madhav Kalyanam UK
என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் நன் கொடைகள் வரவேற்கப்படுகின்றன
****
கிறிஸ்துவ – முஸ்லிம் கவுன்சில்கள் கருத்தரங்கம்: அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
கலிபோர்னியாவில், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் கவுன்சில்கள் இணைந்து நடத்திய கருத்தரங்கில், ‘ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடத்தியதற்கு அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், நியூயார்க் மாகாண சர்ச் கவுன்சிலின், ‘மத தேசியவாத திட்டம்’ அமைப்பினரும், இந்திய – அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலான, ஐ.ஏ.எம்.சி.,யும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இக்கருத்தரங்கில், மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள் என்ற பெயரில், அமெரிக்க வாழ் ஹிந்துக்களை குறி வைத்து நியாயமற்ற முறையில் வெறுப்புணர்வுகளை முன்வைத்ததற்காக, அமெரிக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வடக்கு கலிபோர்னியா மற்றும் இந்தியாவில், ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் மற்றும் உலகளாவிய மத தேசியவாதங்கள் உடனான உறவுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில், உலகெங்கிலும் அதிகரித்து வரும் மதத்தை அடிப்படையாக கொண்ட தேசியவாத அரசியல் இயக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஹிந்து தேசியவாதத்தின் தீவிர வடிவம் என்று கருதப்படும் ஹிந்துத்துவம், விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது..
சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக கூறப்படும் கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தால் சமூகத்தில் எவ்வாறு பிளவு ஏற்படுகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ தேசியவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவைதவிர, ஹிந்துத்துவ கொள்கைகள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டு, கலிபோர்னியாவில் உள்ள ஹிந்து சமூகத்தினரிடையே அவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விவாத பொருள் ஹிந்துத்துவம் என்றாலும், விவாதத்துக்கான கருப்பொருளாக ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் என தலைப்பிடப்பட்டது ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
மேலும், கருத்தரங்கின் விவாத தலைப்பு ஹிந்து மதம் என்ற ஒரு மதத்தையே தவறாக சித்தரித்து, அதை ஒரு வன்முறை சித்தாந்தமாக பார்க்க துாண்டுகிறது என்றும், இது ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை துாண்டுகிறது என்றும் ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியதுடன், தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் 23–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 16-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,