நாரயணீயம் நூலை உலகிற்குத் தந்த நாராயண பட்டத்ரி (Post No.15,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,190

Date uploaded in London –   17 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-11-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ச. நாகராஜன் ஆற்றிய உரை.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே

நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

இன்று நாம் நாரயணீயம் என்ற அற்புதமான நூலை உலகிற்குத் தந்து அருளிய நாராயண பட்டத்ரியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிச் சிந்த்திக்க இருக்கிறோம்.

நாராயண பட்டத்ரி கி.பி. 1560ம் ஆண்டு கேரளாவில் உள்ள மேல்பத்தூர் என்ற ஊரில் ஒரு பிராமண  குடும்பத்தில் அவதரித்தார்.

இவரது தந்தையார் மாத்ருதத்தர் மிகச் சிறந்த பண்டிதர். நாராயணர் அவரிடமே கல்வி பயின்றார். ரிக் வேதத்தை மாதவாசாரியார் என்பவரிடம் முறையாகப் பயின்றார். தர்க்க சாஸ்திரத்தை தாமோதராசாரியார் என்பவரிடம் கற்றார். வியாகரணத்தை அச்யுத பிஷாரடி என்பவரிடம் கற்றார். இப்படி அனைத்து சாஸ்திரங்களையும் இதிஹாஸ புராணங்களையும் தனது பதினாறு வயதிற்குள்ளாகவே கற்று மிகப் பெரும் பண்டிதராக அவர் திகழ்ந்தார்.

நாராயணரின் குருவான அச்யுதர் வாத நோயால் பீடிக்கப்பட்டு மிகவும் வருந்தினார். இதைக் கண்ட அவர் தன் யோக பலத்தால் அந்த வியாதியை தானே வாங்கிக் கொண்டார். அவரது அங்கங்கள் முடங்கின. குருவாயூரில் சென்று தவம் புரியத் தீர்மானித்த நாராயணர் தன்னை அங்கே கொண்டு போகச் சொன்னார்.

குருவாயூரப்பன் சந்நிதியில் ஒரு நூலை இயற்றி சமர்ப்பிக்க அவர் எண்ணம் கொண்டார்.

ஆனால் நூலை எப்படித் துவங்கி எழுதுவது என்று அவருக்கு தயக்கமாக இருந்தது. பிரபல கவிஞரான எழுத்தச்சனை அவர் நாட, அவர், “மீனைத் தொட்டு உண்” என்றார்.

இதன் உண்மையான அர்த்தத்தை உடனே உணர்ந்து கொண்ட நாராயணர் விஷ்ணுவின் மச்சாவதாரத்தை முதலாகக் கொண்டு நாராயணீயத்தைப் படைக்கலானார்.

குருவாயூரப்பனை வழிபட்டவாறே ஒரு நாளைக்கு பத்து ஸ்லோகங்கள் வீதம் நாராயணீயத்தைப் பாட ஆரம்பித்தார். நூறு நாட்களில் நூலைப் பாடி முடித்தார். 1587ம் ஆண்டு நூல் முற்றுப் பெற்றது.  அப்போது அவருக்கு வயது 27.

ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்த பின், “ஹே, குருவாயூரப்பா, இது உண்மையா என்று அவர் கேட்பார். ஆம் என்று குருவாயூரப்பன் தன் தலையை அசைத்து ஆமோதித்தவுடன அடுத்த ஸ்லோகத்தை இயற்ற ஆரம்பிப்பார். ஆகவே இது தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரும் நூலாகத் திகழ்கிறது.

நூலில் மொத்தம் 1038 ஸ்லோகங்கள் உள்ளன.

நாராயணீயத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து வரலாறுகளும் வேத வியாஸர் இயற்றி அவரது மகன் சுகருக்கு உபதேசித்த ஶ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கும் சரித்திரங்களே ஆகும்.

நரசிம்மாவதாரம் பற்றி அவர் பாடத் தொடங்கிய போது அவரால் அதை சரியாக விவரிக்க முடியவில்லை. அதனால் அவர் திகைத்தார். அப்போது நரசிங்கம் தோன்றி அங்குமிங்கும் நடமாட ஆரம்பிக்கவே, அதைக் கண்டு அதை அப்படியே அவர் பாடினார்.

நூலை முடித்தவுடன் அவருடைய வாத நோய் முற்றிலுமாக நீங்கி விட்டது.

நாராயணீயத்தை பாராயணம் செய்தாலும், அதைப் படிக்கக் கேட்டாலும் ஐஸ்வர்யம் பெருகும். கொடிய வியாதிகள் நீங்கும்.கிரக பீடைகள் நீங்கும். உத்யோக உயர்வு கிடைக்கும்.  ஆண்- பெண் இருபாலாருக்கும் தக்க முறையில் விவாகம் நடக்கும், புத்திர சந்தானம் உண்டாகும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும் என்று இப்படி பலவாறாக பலன்களை பல ஸ்ருதி கூறுகிறது.

எட்டாம் சதகத்தில் உள்ள 13வது ஸ்லோகம் மந்திர சக்தி வாய்ந்தது என்று காஞ்சி மஹாபெரியவாள் கூறி இருக்கிறார்.

இதை பக்தியுடன் சொல்பவர்களுக்கு வியாதிகள் உடனே குணமாகும் என்பது அவரது அருளுரை.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநி: 

அனந்தபூமா மம ரோகராஸிம்

நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ!

“பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணுவே!! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம்
தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை அடக்கியருள வேண்டும்”

என்பது இதன் பொருள்.

48 நாட்கள் தொடர்ந்து இதைக் கூறி கடுமையான வியாதிகளிலிருந்து ஏராளமானோர் குணமடைந்துள்ளனர்

நாராயண பட்டத்ரி நாற்பதுக்கும் மேற்பட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.

பிரக்ரிய ஸர்வஸ்வம் என்ற நூல் பாணினியின் சித்தாந்த கௌமுதியைப் போன்று அமைந்துள்ள ஒரு இலக்கண நூல் ஆகும்.

அபனீயப் ப்ரமாணம் என்பது பல சம்ஸ்கிருதச் சொற்களை அறிய உதவும் ஒரு நூல்.

தாது காவியம் என்பது கண்ணபிரானின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்ட நூலாகும்.

மான மேயோதயம் என்பது ஒரு தத்துவ நூல்.

ஶ்ரீ பாத ஸப்ததி என்பது தேவியின் புகழைப் பாடும் ஒரு துதி நூலாகும்.

கண்ணனைப் பற்றிக் கூறும் ஸ்தோத்திரம் குருவாயூர்புர ஸ்தோத்திரம் என்ற நூலாகும்.

தனது நூல்களில் இவர் அத்வைத கருத்தையும் த்வைத கருத்தையும் விளக்கி இருப்பதால் இன்றளவும் இவரை த்வைதி என்றும் அத்வைதி என்றும் விளக்கும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

நாராயண பட்டத்ரி 106 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து 1666ம் ஆண்டில் குருவாயூரப்பனுடன் ஒன்று கலந்ததாக வரலாறு கூறுகிறது.

நாராயணீயத்தை அன்றாடம் பாராயணம் செய்து வரும் பல்லாயிரம் குடும்பங்கள் அடைந்து வரும் நற்பலன்களை அந்தக் குடும்ப உறுப்பினர்களே அனுபவ வாயிலாக இன்றும் கூறி வருவது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

நாராயணீயதை உலகிற்கு அளித்த நாராயண பட்டத்ரியைப் போற்றி அவர் அருளிய நாராயணீயத்தைக் கற்போம்; பாராயணம் செய்வோம். பயன் பெறுவோமாக!

நன்றி வணக்கம்!

**

 **************************

Leave a comment

Leave a comment