Post No. 15,201
Date uploaded in London – – 20 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
11-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஐந்து ஐந்தாகக் கூறப்படும் சுவையான நல்ல விஷயங்கள் இதோ!
ச. நாகராஜன்
நம்முடைய சாஸ்திரங்களிலிருந்து மிக முக்கியமான விஷயங்களைச் சுவைபடத் தொகுத்துத் தருபவை சம்ஸ்கிருத சுபாஷிதங்கள். இவை பல்லாயிரக் கணக்கில் உள்ளன.
அவற்றில் ஐந்து ஐந்தாகக் கூறப்படும் சில விஷயங்களின் தொகுப்பு இது:
ஒரு காரியத்தைச் செய்யும் போது கவனிக்க வேண்டிய பஞ்சாங்க அம்சங்கள்
1) திதி 2) வாரம் (கிழமை) 3) நட்சத்திரம் 4) யோகம் 5) கரணம்
இந்த ஐந்து பஞ்சாங்க அம்சங்களையும் ஒரு காரியத்தைச் செய்யும்போது கவனிக்க வேண்டும்,
ஒரு காரியத்தைச் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டியவர்கள் ஐவர்.
ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர், நம்முடைய நலனுக்கு உதவுபவர்கள் யார், எதிராகச் செயல்படக் கூடியவர் யார் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
1) மித்ரர்கள் (நண்பர்கள்) 2) எதிரிகள் 3) மத்யஸ்தமாக எதிரியும் அல்ல, நண்பனும் அல்ல என்று நடுநிலையுடன் இருப்பவர்கள் 4) நம்மை நம்பி இருப்பவர்கள் 5) ஆதரவாளர்கள்.
இந்த ஐவரையும் பற்றி அறிந்து கொண்டு செயலில் ஈடுபட வேண்டும்.
தேவதைகளை ஆராதிப்பது எதற்காக?
தேவதைகளை ஆராதிப்பது ஐந்து விஷயங்களைப் பெறுவதற்காக. அவையாவன: 1) புகழ் 2) ஸ்வர்க்கம் அடைதல் 3) ஆயுள் 4) செல்வம் அடைதல் 5) வம்ச விருத்தி
கீழ்க்கண்ட ஐந்து இடங்களில் ஒரு போதும் வசிக்கக் கூடாது. அந்த இடங்கள் யாவை?
1) பணம் சம்பாதிக்க முடியாத இடத்தில் வசிக்கக் கூடாது.
2) பயமாக இருக்கும் இடத்தில் வசிக்கக் கூடாது
3) அவமானப்படும் இடத்தில் இருக்கக் கூடாது.
4) மிகுந்த இரக்கப்பட்டு நம்மை நடத்தும் இடத்தில் இருக்கக்கூடாது.
5) தர்மமாக இரந்து வாழும் இடத்தில் வசிக்கக் கூடாது.
உழைத்து கண்ணியமாக, நல்ல தொழில் நடக்கும் இடத்தில் நல்லவிதமாக நடத்தப்படும் பயமில்லாத இடத்தில், வாழ வேண்டும். இரக்கத்துடன் பரிதாபமாக நடத்தப்படும், இடத்திலும் பிச்சை போட்டு வாழும் இடத்திலும் வசிக்கவே கூடாது.
ஒரு சிசுவானது கர்ப்பத்தில் இருக்கும்போதே ஐந்து விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அவை யாவை?
1) ஆயுள் 2) கர்மா (தொழில்) 3) அறிவு 4)செல்வம் 5) முடிவு
இதிஹாஸ, புராணங்களில் ஞானிகளாகச் சொல்லப்படுபவர் ஐவர். அவர்கள் யார்?
1) கிருஷ்ணர் 2) சுகர் 3) ஜனக மன்னன் 4) ராகவர் 5) வசிஷ்டர்
தந்தையாக கருதப்பட வேண்டியவர்கள் ஐவர். அவர்கள் யார்?
1) ஜனிதா – பெற்ற தந்தை 2) உபநீதா – எவர் ஆரம்பித்து வைக்கிறாரோ அவர் 3) வித்யாதாதா – கல்வி புகட்டும் ஆசிரியர் 4) அன்னதாதா – உணவளிப்பவர் 5) பயத்ராதா – பயத்திலிருந்து காப்பவர்.
இவர்கள் ஒருவனின் தந்தை போல கருதப்பட வேண்டியவர்கள் ஆவர்.
வணங்கப்பட வேண்டியவர்கள் ஐவர். அவர்கள் யார்?
1) கடவுள் 2) முன்னோர் 3) (நல்ல) மனிதர்கள் 4) சந்யாசிகள் 5) விருந்தினர்.
திருப்திப்படுத்த முடியாத ஐவர் யாவர்
திருப்திப் படுத்த முடியாத ஐவர் இவர்கள் தாம்:
1) வீட்டு மாப்பிள்ளை 2) வயிறு 3) மனைவி 4) அக்னி 5) கடல்
வழிகாட்டிகள் ஐவர் ஆவர். அவர்கள் யார்?
1) தந்தை 2) தாய் 3) அக்னி 4) ஆத்மா 5) குரு
**