பத்து லட்சம் வருடங்களுக்கு முன் உருவான ஏரியில் நீந்த ஆசையா?  மோனோ லேக் போகலாமே -(Post.15,204)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,204

Date uploaded in London – –  21 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

2-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

உலகின் அதிசய இடங்கள்

பத்து லட்சம் வருடங்களுக்கு முன் உருவான ஏரியில் நீந்த ஆசையா?  மோனோ லேக் போகலாமே –(MONO LAKE) 

ச. நாகராஜன் 

பத்து லட்சம் வருடங்களுக்கு முன் இயற்கை உருவாக்கிய ஏரியைப் பார்க்க வேண்டுமா. அதில் நீந்தவும் ஆசையா?

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள மோனோ லேக் உங்களை ‘வா, வா’ என்று அழைக்கிறது. 

இந்த ஏரி காரத்தன்மையும் உப்பும் கலந்த நீரைக் கொண்டதாகும்.

21 கிலோமீட்டர் நீளமும் 15 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இதன் பரப்பளவு மட்டும் 45133 ஏக்கர் ஆகும். இதன் அதிக பட்ச ஆழம் 159 அடி. சராசரியாக உள்ள அடி 57 அடி ஆகும்.

இதை ‘மூடிய ஏரி’ என்பார்கள். அதாவது இங்கிருந்து நீர் எங்கும் வெளியில் போகாது. ஒன்று ஆவியாக மாற வேண்டும். அல்லது நிலத்தடி நீராக இருத்தல் வேண்டும். 

இங்குள்ள இரால் மீன்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும் ஆல்கலி ஃப்ளை எனப்படும் பூச்சிகளும் இங்கு அதிகம். ஆகவே உணவு தேடி வரும் பறவைகளுக்கு இது அருமையான ஒரு இடமாக அமைகிறது.

ஷோர் பேர்ட் எனப்படும் கரைப்பறவைகளும் வாட்டர்பேர்ட் என அழைக்கப்படும் நீர்ப்பறவைகளும் இங்கு உள்ளன, இருபது லட்சம் வாட்டர் பேர்ட்கள்! 35 விதமான கரைப் பறவைகள்!!

பல மாதங்கள் இங்கு தங்கும் இவற்றைப் பார்க்க பறவை ஆர்வலர்கள் ஆயிரக் கணக்கில் கூடுகின்றனர்.

தென் அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கும் பல விசேஷப் பறவை இனங்களோ பார்ப்பதற்கே அற்புதமான காட்சியைத் தரும்.

இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை குட்ஸாடிகா இன மக்கள் என்பார்கள். இவர்கள் பலூட் என்ற மொழியைப் பேசுபவர்கள்.

1953ல் வெளியான படமான ‘ஃபேர் விண்ட் டு ஜாவா’ என்ற திரைப்படத்தில் மோனோ லேக் இடம் பெற்றது.

மோனோ லேக்கில் பார்ப்பதற்கே பிரமிக்க வைக்கும் இன்னொரு விசித்திரமான பாறை, டூஃபா ஆகும். கால்சியம் அதிகமாக உள்ள ஏரியின் அடியில் இருக்கும் நீரானது ஏரியின் மேல் பரப்பில் உள்ள நீரோடு கலக்கும் போது அதிலுள்ள கார்பனேட்டுகளுடன் சேரவே ஒரு வித இரசாயன விளைவு உண்டாகிறது. உடனே கால்சியம் கார்பனேட் உருவாகிறது – அதாவது சுண்ணாம்பு.

காலப் போக்கில் பல நூற்றாண்டுகளில் இது அருமையான நெடிய கோபுரம் போன்ற பாறைகளாக உருவாகின்றன. இது தான் டூஃபா டவர்! (TUFA TOWER)

லாஸ் ஏஞ்சலஸ் நகர் நிர்வாகம் இங்குள்ள நீரைப் பயன்படுத்தத் துவங்கியதால் ஏரியின் நீர்  மட்டம் குறையவே இந்தா டூஃபா டவர்களின் உயரம் பார்க்கவே பிரமிக்க வைக்கிறது.

மக்கள் இதில் ஏறுவது, உடைப்பது போன்ற செய்கைகளில் ஈடுபடவே அழகிய இந்தப் பாறைகள் அழிய ஆரம்பித்தன. விழித்துக் கொண்ட நிர்வாகம் 1981 முதல் இதைத் தீவிரமாகப் பராமரிக்க ஆரம்பித்தது.

இயற்கை ஆர்வலர்கள் இங்கு வருபவர்களிடம் இந்த டூஃபா டவர்களைப் பார்த்து மகிழுங்கள்,, போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்; அதை உடைப்பது அதில் ஏறுவது போன்றவற்றைச் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இங்கு ஐந்து மைல் நீளமுள்ள அழகிய நடைபாதைகள் பயணிகளுக்கென்றே உள்ளன. இதில் நடந்து சென்று இயற்கையை அனுபவிக்கலாம். நேவி பீச் ட்ரெய்ல் என்ற மூன்றரை மைல் நீள நடைபாதையில் செல்லும் போது செவ்வாய் கிரக மேற்பரப்பைக் காணலாம். ஆக அயல்கிரகத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை இது எற்படுத்தும்.

இங்கு நீந்தலாமா? இந்தக் கேள்விக்குச் சரியான விடை – நீந்தலாம்!

ஆனால் காரமும் உப்பும் நிறைந்த நீரில் குளித்தால் பிறகு வெளியே வந்து மிக நன்றாக சுத்த நீரில் குளிக்க வேண்டும்.

பயணிகள் இங்கு விரும்பும் இன்னொரு செய்கை – கயாகிங் செய்வது?

கயாக் என்றால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு விசேஷ படகு ஆகும். இதை பழங்காலத்தில் மீன் பிடிக்க உபயோகித்ததால் இதை ஹண்டர்ஸ் போட் – வேட்டைப் படகு என்று சொல்வார்கள். இதில் பல விசேஷ வடிவமைப்புகள் உண்டு. இதில் ஏறி நீர் மேல் செல்லலாம்!

ஆக உலகின் அதி விநோதமான மோனோ லேக் பலவித உன்னத அனுபவங்களுக்கு இடம் கொடுக்கும் ஏரியாகும்!

**

Leave a comment

Leave a comment