தமிழர்கள் ஆரூடம் சொன்ன முறை: மாணிக்கவாசகர் விளக்குகிறார் (Post.15,207)

 Written by London Swaminathan

Post No. 15,207

Date uploaded in London –  22 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நம்மாழ்வார் பாசுரங்களில் உள்ள குறி சொல்லுவது பற்றிய விவரத்தை சென்ற கட்டுரையில் அறிந்தோம். கட்டுவிச்சியைக்   கூப்பிட்டு குறி கேட்டல், ஆடு பலி கொடுத்தல் , கள் படைத்தல் முதலியவற்றைக் கண்டோம். ஆனால் திருக்கோவையாரில் நெல்லினைப் பரப்பி அதிலுள்ள என்ணிக்கையைக் கொண்டு ஆரூடம் சொல்லுதல் ஆகியவற்றைக் காணலாம் ; 13 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரையில் கிரேக்க நாட்டிலும் குகைக்குள் இருந்தவாறு பெண்கள் குறி சொன்னதையும் அதை சாக்ரடீஸ் பிதகோரஸ் போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளதையும் எழுதினேன்.

இதோ மாணிக்க வாசகரின் திருக்கோவையார் பாடல்:

நெல்லை வைத்து குறி சொல்வது எப்படி?

திருக்கோவையார் 

கட்டுவித்தி/ கட்டுவிச்சி தானிட்ட நெல்லின் கண் முருகணங்கு காட்ட, ‘இதனை யெல்லீருங் காண்மின்; இவளுக்கு  முருகணங் கொழியப் பிறிதொன்று மில்லை ‘  யெனக் கட்டுவித்தி நெற்குறி காட்டிக் கூறா நிற்றல்.

அதற்குச் செய்யுள் :-   

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி        கூறன்சிற் றம்பலத்தான்   

இயலிதன் றேயென்ன லாகா        இறைவிறற் சேய்கடவும் 

மயிலிதன் றேகொடி வாரணங்       காண்கவன் சூர்தடிந்த    

அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்        றோன்று மவன்வடிவே.   

கட்டு வித்தி** விட்டு ரைத்தது** கட்டு விச்சி என்பது பழையவுரைகாரர் பாடம்.   இதன் பொருள்:

விறல் சேய் கடவும் மயில் இது அன்றே- அவனுடைய விறலையுடைய சேயூரு மயிலிது வல்லவே ! கொடி வாரணம் காண்க: அதுவேயு மன்றி,  அவன் கொடிக்கணுளதாகிய  கோழியையும் எல்லீருங்காண்க: 

வன்சூர் தடிந்த அயில் இது அன்றே- அதுவேயு மன்றி வலியனாகிய சூரைக்குறைந்த அயில் தானிது வல்லவே? 

இவையெல்லாஞ் சொல்லுகின்றதென்;

நெல்லில் தோன்றும் அவன் வடிவு – இப்பரப்பிய நெல்லிக்கண் வந்து தோன்றுகின்றது அவனதுருவமாம்;

அவ்வெறித்தொழிலை யறத்தொடுநின்று விலக்குகையும் அகத் தமிழிலக்கண மாகையின்,முருகணங்கென்றே கூறப்பட்டது

கட்டுவீச்சி ஒரு கைப்பிடி  நெல்லை எடுத்துப் பரப்புவாள்  

அதை நான்கு நான்காக பிரித்து எண்ணுவாள்

மீதி மூன்று நெல் இருந்தால் அது மயில்;

மீதி இரண்டு  நெல் இருந்தால் அது கோழி ;

மீதி ஒரு நெல் இருந்தால் அது வேல் ;

நெல் எதுவும் மிஞ்சவில்லை என்றால் அது முருகன் .

குறிக்கிலக்கணம் நென் மூன்று மிரண்டுமொன்றும் படுகை,  அஃதாவது அடியுங்கொடியு மூவகையும்  இதனில், .அடியாவது மயில், கொடியாவது கோழி ,உவகையாவது வேல் – ஆதலால் முருகணங்கெனவே கூறப்பட்டதென வறிக. 

****

இவ்வாறு பெண்களின் காதல் நோய்க்கு முருகனை வம்புக்கு இழுப்பது வடநாட்டிலும் உண்டு; காளிதாசனும் முருகன் அணங்கு பற்றிப் பாடுகிறான் .

நான் மகாராஷ்டிரத்தில்  சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு கோவிலில் என் மனைவி மற்றும் கூட வந்த பெண்களைரத் தடுத்து நிறுத்திவிட்டு எங்களை மட்டும், அதாவது ஆண்களை மட்டும் திரை போட்ட சந்நிதிக்குள் அனுப்பினர்; அது கார்த்திகேயன் சந்நிதி! பெண்கள் முருகன் சந்நிதிக்குள் போகக்கூடா து என்பது அங்கேயுள்ள விதி; சாஸ்திரம்

இதற்குப்பின்னர்   வேலனை அழைத்து வெறியாடுவர்; ஆடு பலி கொடுப்பார்கள் . இதெல்லாம் நம்மாழவார் பாசுர  கட்டுரையில் கண்டோம்; பெரிய வேறுபாடு இல்லை

வேலன் புகுந்து வெறியா       டுகவெண் மறியறுக்க    

காலன் புகுந்தவி யக்கழல்       வைத்தெழில் தில்லைநின்ற    

மேலன் புகுந்தென்கண் நின்றா        னிருந்த வெண் காடனைய   

பாலன் புகுந்திப் பரிசினின்        நிற்பித்த பண்பினுக்கே

பொருள்

எமன் உதைபட்ட சிவன் உறையும் தில்லையில் உள்ளான் என்னுள் புகுந்தான் ;அவன் இருந்த திருவெண்காடு போன்ற என் மகளுக்காக வெறியாட நேரிட்டது வேலனை அழையுங்கள் ; ஆட்டினைப் பலி கொடுங்கள் என்று தாயார் விளம்புகிறாள்

வெறியாடல் என்றால் என்ன ?

பூசாரி ஒருவர்  ஆவேசம் கொண்டு சாமி ஆடுவார் ; அவர்தான் வேலன். பெண்ணுக்கு ஏற்பட்ட நோய் போக அவர் ஆடும் இடம் முருகனுக்குரிய இடம் ஆகும் அங்கே நெல், அரிசி, பூ ஆகியவற்றில் ஆட்டின் ரத்தத்தைக் கலந்து ஆடுவார்கள் .

–subham—

Tags-கட்டுவிச்சி ,வெறியாடல், வேலன் ,ஆடு பலி, நெல், குறி சொல்வது எப்படி

Leave a comment

Leave a comment