WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,211
Date uploaded in London – 24 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-11-25 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பில் ஒளி பரப்பப்பட்ட உரை
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபா அவதரித்த புட்டபர்த்தி திருத்தலமாகும். இது பிரசாந்தி நிலையம் என்ற பெயரில் பிரசித்தமாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தர்மாவரம் அருகே உள்ளது புட்டபர்த்தி என்னும் கிராமம்.
இந்த கிராமத்தில் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி காலை
மணி 5-06க்கு திருவாதிரை நட்சத்திரத்தில் ஶ்ரீ சாயிபாபா அவதரித்தார்.
அங்கு பெத்தவெங்கமராஜு என்பவருக்கும்
ஈஸ்வரம்மா என்ற புனிதவதிக்கும் மகனாகப் பிறந்தார் பாபா. குழந்தையைத் துணியிலே வைத்த போது அது அசைந்து ஆடியது. வியந்த அனைவரும் துணியை எடுக்கவே அதன் கீழிருந்த பாம்பு ஒன்று நெளிந்து ஓடியது.
பாம்புகள் நிறைந்த ஊர் புட்டபர்த்தி. ஆகவே ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் நிறைந்திருக்கும். புட்ட என்றால் புற்று என்று அர்த்தம். பர்த்தி என்றால் ஊர் என்று பொருள். ஆகவே புற்றுகள் நிறைந்த ஊரே புட்டபர்த்தி ஆயிற்று.இந்த ஊரின் அருகே ஊரை அரவணைத்து அழகிய சித்ராவதி என்னும் ஆறு ஒடுகிறது.
சத்யநாராயணன் என்று பெயரிடப்பட்ட குழந்தை இளம் வயதிலேயே பல அபூர்வ லீலைகளைக் காண்பிக்க ஆரம்பித்தது.
நாளுக்கு நாள் அவரை தரிசிக்க வரும் கூட்டம் அதிகமானது. ஆகவே அவர் பக்தர்களை சித்ராவதி நதிக் கரைக்கு அழைத்துச் செல்வார். மணலிலே கையை விட்டு அற்புதமான விக்ரங்களையும் பழங்களையும் இதர பொருள்களையும் எடுத்துத் தருவார்.
அங்கு அற்புதமான பஜனைப் பாடல்களை அனைவரையும் பாட வைத்தார்.
இடம் போதாத காரணத்தால் ஒரு கொட்டகை போட தீர்மானித்தது. அதுவும் போதவில்லை
பின்னர் பாதமந்திரம் என்ற இடத்தில் பக்தர்கள் கூட்டம் திரண்டது. ஶ்ரீ வேணு கோபால ஸ்வாமி கோவிலுக்கு அருகில் இது உருவானது. ஆனால் இதுவும் போதாது என்ற நிலையில் ஊருக்கு வெளியில் பிரசாந்தி நிலையம் என்ற ஒரு பெரும் கட்டிடம் அமைக்கப்பட்டது.
லட்சக்கணக்கானோர் இங்கு திரள்வது வழக்கமானது.
பகவானின் 25வது பிறந்த நாளான 23-11-1950 அன்று பாபா இங்கு குடியேறி அதைத் தன் தலைமை இடமாகக் கொண்டார்.
பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயி, பிரதமர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட, ஏராளமான அரசியல் தலைவர்களும் ஆகப் பெரும் விஞ்ஞானிகளும், இசை மேதைகளும், அறிஞர்களும், பல்துறை நிபுணர்களும், சாமானியர்களும் இங்கே குழுமலாயினர்; பாபாவின் ஆசிர்வாதத்தைப் பெறலாயினர்.
ஏராளமான அற்புத சம்பவங்களை நாள்தோறும் அவர் நிகழ்த்துவது வழக்கமானது.
சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.
வால்டர் கோவான் என்பவர் அமெரிக்கவின் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி. அவர் மனைவி பெயர் எல்ஸீ 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் அகில இந்திய ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநாடு சென்னையில் நடைபெற ஏற்பாடானது
அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாபாவோ திட்டவட்டமாக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார். அதற்காக வால்டர் கோவானும் எல்ஸீயும் டிசம்பர் 23ம் தேதி சென்னைக்கு வந்தனர். கன்னிமாரா ஹோட்டலில் தங்கியிருந்த வால்டர் டிசம்பர் 25ம் தேதி காலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட வால்டரைச் சோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார். சவங்களை வைக்கும் சவ அறைக்கு அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டது.
அலுவல் நிமித்தமாக வெளியே சென்றிருந்த டாக்டர் மீண்டும் திரும்பி வந்த போது வால்டர் உயிரோடு இருந்ததைக் கண்டார். அவர் காதுகளிலும் நாசித் துவாரங்களிலும் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. டாக்டர் அதிசயப்பட்டார். சிவப்பு உடை அணிந்திருந்த ஒருவர் நோயாளியைப் பார்க்க வந்தார் என்றும் அதன் பின்னர் அவர் உயிர் பிழைத்தார் என்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் கூறினர்.
வால்டர் பாபாவுடன் தான் உயரமான ஒரு இடத்திற்குச் சென்றதாகவும் அங்கிருந்த ஒரு தலைவரிடம் பாபா வால்டரைத் தன்னுடன் அனுப்ப வேண்டுமென்றும் அவருக்குச் சில வேலைகளை அளிக்க இருப்பதாகவும் கூற, அவர் சம்மதிக்க, இருவரும் கீழே வந்ததாக வால்டர் கூறினார்.
அமெரிக்காவில் சாண்டியாகோவில் பிரபல சைக்கியாட்ரிஸ்டாகத் திகழ்ந்த டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் 1972 மே மாதம் பங்களூர் வந்து பாபாவை தரிசித்தார். பல அனுபவங்களைப் பெற்றார்.
“ஆச்சரியம்! நம்பமுடியாதது! நினைத்துப் பார்க்கவே முடியாதது” என்றெல்லாம் கூறிய சாண்ட்விஸ் ,’இனி சைக்கியாட்ரியே இல்லை. இனி உலகை சாயி-கியாட்ரியே ஆளும்” என்று வியந்து கூறினார்.
CANCER IS CANCELLED என்று பலரின் கேன்ஸர் வியாதியை பாபா நீக்கி அருளியுள்ளார்.
ஒளிவட்டம் என்னும் அவ்ரா பற்றிய தலை சிறந்த நிபுணராகத் திகழ்ந்தார் அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்க் பாரனோஸ்கி. அவருக்கு ஒருவரின் ஒளிவட்டத்தை எந்த வித சாதனமும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கும் சக்தி உண்டு.
1978ம் ஆண்டு மே மாதம் பிருந்தாவன் அருகே கோடைகால பத்து நாள் வகுப்பு ஒன்று நடந்தது இதில் எட்டாம் நாளன்று பேசிய பாரனோஸ்கி தான் பாபாவிடம் கண்ட அதிசயம் ஒன்றை வெளியிட்டார். “நான் ஒரு விஞ்ஞானி. நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரையாடல்களை இவ்வுலகத்தில் பல இடங்களில் நிகழ்த்தியுள்ளேன்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்ட அவர், “சுவாமியிடமிருந்து வெளி வரும் ஒளி வட்டம் வரம்பை மீறி எல்லையற்றதாக இருக்கிறது. அவரது இளஞ்சிவப்பு வண்ணம் எங்கும் ஊடுருவிச் செல்கிறது. அவர் நடந்து வரும் போது அது அனைவரின் மீதும் பாய்கிகிறது. அவரை “LOVE WALKING ON TWO FEET “என்றே கூறலாம் என்றார்.
பாபா தனது 65ம் நாள் பிறந்த நாளன்று உலகிலேயே மிகச் சிறந்த அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய சூப்பர் – ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலை நிறுவி தேவையானோருக்கு இலவச சிகிச்சை அளிக்க தீர்மானித்தார். 1991ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இது திறந்து வைக்கப்பட்டது. மூன்று லட்சம் சதுர அடியில் இது அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கும் கூட்டத்தில் பாபா தெலுங்கில் உரை ஆற்றுவது வழக்கம். அப்போது பஜனைப் பாடல்களை இசைக்க அனைவரும் சாயி பஜனில் கலந்து ஐக்கியமாவர்.
உலகிலுள்ள பல நாடுகளிலும் சாயி இயக்கம் பரவ ஆரம்பித்தது.
சேவா தள் என்னும் அமைப்பின் வழியாக சேவை ஆற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே தொண்டு புரிய ஆரம்பித்தனர்.
தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பாபா 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மகா சமாதி அடைந்தார். ஐந்து லட்சம் மக்கள் அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி, கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு திரண்டு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். ஏப்ரல் 27ம் தேதி அவர் சமாதி புட்டபர்த்தியில் நிறுவப்பட்டது.ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு அவள் அருளை இன்றும் பெற்று வருகின்றனர்.
அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் இன்று நாம் மனப்பூர்வமாக அவரை வணங்கித் துதிப்போமாக!லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ சத்யசாயிபாபா அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி! வணக்கம்!!
**