ஞானமயம் வழங்கும் (23-11-2025) உலக இந்து செய்திமடல் (Post.15,212)

Written by London Swaminathan

Post No. 15,212

Date uploaded in London –  24 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா  யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 23- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

****

இன்று ஸ்ரீ சத்யசாயிபாபா பிறந்த தினம் .

முதலில்  பாபா நூற்றாண்டு விழாச்  செய்திகள் இதோ :

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா;

புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு:

புட்டபர்த்தி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றர். முன்னதாக, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல் பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.

புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி நவ.,19 காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில் மரியாதை செய்தார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோசாலையில் இருந்த பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.

விழாவுக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமை வகித்தார். நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் போதனைகள், சேவையின் மகிமைகளை பற்றி பேசினர்.

தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

சத்ய சாய்பாபா தற்போது தம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துவதாகவும், மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

***

கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் : நீதிபதிகள் கருத்து!

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பது தொடர்பான வழக்கில், கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை தரப்பில் மீனாட்சி அம்மன் கோயிலின் உப சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இணை ஆணையர், வருவாய் துறை அலுவலர் இணைந்து கோயில் சொத்துக்களை ஆவணங்களின் அடிப்படையில் பொருத்தி, உறுதி செய்ய வேண்டும் எனவும், வரும் 22ஆம் தேதி அது தொடர்பான கூட்டத்தை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் கிரானைட் கற்கள் புதிதாகப் பதிக்கப்படுவதாகவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு, கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

****

திருப்பதி பாலாஜி கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

2 நாள் பயணமாகத் திருப்பதி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரை வழிபட்டார்.

இதனை தொடர்ந்து, திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 9.30 மணி அளவில் வராகச் சாமியை வழிபட்டார்.அப்போது, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, வரவேற்பு அளித்துக் குடியரசுத் தலைவரை ஏழுமலையான் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

*** 

சபரிமலை ஆவணங்களை மாற்றி எழுதினார் தேவசம் போர்டு மாஜி‘ தலைவர் 

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளுக்கு பதிலாக செப்புத் தகடுகள் என ஆவணங்களில் மாற்றி எழுதியது, சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான மூலஸ்தானத்தின் இருபுறமும் உள்ள துவார பாலகர் சிலையில் இருந்த தங்க தகடுகளில் இருந்து, தங்கம் திருடு போனது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் முக்கிய நிர்வாகியுமான பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கை:

 கடந்த, 201 9 மார்ச் 19ல் பத்மகுமார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்திற்கு பின், தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவுகளின் சட்டங்களை அகற்ற பத்ம குமார் உதவினார். அவற்றை தங்க முலாம் பூசவும் ஒப்படைத்துள்ளார். 

இந்த கதவுகளில், தங்க முலாம் பூசப்பட்டதை அறிந்தும், பதிவேடுகளில் செப்பு தகடுகள் என மாற்றி எழுதினார். 

இதன் மூலம், தங்க தகடுகளை, உன்னிகிருஷ்ணன் பெற வழிவகுக்கப்பட்டது. அதன்பின் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு, அக்கதவுகளில் இருந்து தங்கத்தை அகற்றி திருப்பி அனுப்பப்பட்டது. இவற்றை, மீண்டும் சரிபார்க்க பத்மகுமார் தவறியுள்ளார்.

 ****

 சபரிமலையில் நெரிசல்: கேரள ஐகோர்ட் விளாசல் 

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், ‘கடந்த ஆறு மாதங்களாக பக்தர்கள் வசதிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என, கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதலே கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்பே செய்யாதது ஏன்? ஆறு மாதங்களுக்கு முன்பே, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். இதற்கு, தேவசம் போர்டின் அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்..பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை. என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது 

கேரள உயர் நீதிமன்றத்தின் கவலையை கருத்தில் கொள்வதாகவும், உரிய ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்யும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நெரிசலை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சபரிமலைக்கு விரைந்தனர்.

****

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது.

அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை

தற்போது நீதிமன்ற உத்தரவின் படி வரும் நவம்பர் 30ம் தேதி மாலை 3 மணிக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வருமாறு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் பெரிய கார்த்திகை தீப விழா டிசம்பர் மூன்றாம் தேதிதான் நடைபெறுகிறது

****

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்த அறிவிப்பும் தேவையில்லைமோகன் பகவத்

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.அசாமின் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ஹிந்து என்பது ஒரு மதச் சொல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கலாசாரத் தொடர்ச்சியில் வேரூன்றிய ஒரு நாகரிக அடையாளம். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தங்களது வழிபாடு முறைகளையும், பாரம்பரியங்களையும், விட்டுக்கொடுக்காமல், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி, இந்திய முன்னோர்களை நினைத்து பெருமை கொண்டால், அவர்களும் இந்துக்கள்தான். பாரதத்தில் பெருமை கொள்பவர் அனைவருமே ஹிந்துக்கள் தான்.

பாரதம் மற்றும் ஹிந்து என்பது ஒரு அர்த்தம் கொண்டவை. இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை. அதன் நாகரிக மரபே அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிறருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடங்கப்படவில்லை.

பண்பாட்டை வளர்ப்பதற்கும், உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒன்றுபடுத்துவதே ஆர்எஸ்எஸின் நோக்கம், இவ்வாறு அவர் கூறினார்.

***

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார்

டெல்லி ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி அதிக அளவில் இடதுசாரி மாணவர்கள் உள்ள யுனிவர்சிடி.  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் J N U ஜேஎன்யூ யுனிவர்சிட்டிக்கு சென்ற பொழுது ஜேஎன்யூ மாணவர்கள் கருப்புக்கொடியை தூக்கிக்கொண்டு மன்மோகன் சிங்கே இங்கு நுழையாதே என்று பிரதமரையே மிரட்டியது

இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது

இந்து மத துறவி ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஜகத்குரு விதுசேகர பாரதி மகாஸ்வாமி ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் சென்ற வாரம்,

12 ம் நூற்றாண்டில் அத்வைதம் தழைக்க அவதரித்து இந்துக்களின் முதல் அரசான விஜய நகர பேரரசு உருவாக காரணமாக இருந்த சாரதா பீடத்தின் ஜகத்குரு வித்யாரண்ய மகா ஸ்வாமிகளின் சிலையை நிறுவினார்;  மேலும் ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் விகாஸ் என்கிற பாடத்திட்டத்தையும் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி விது சேகர பாரதி ஸ்வாமிகள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா  யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  தேதியில் ஒரு மாற்றம் .

அடுத்த வாரம் நமது ஒளிபரப்பு கிடையாது ; ஆகையால் டிசம்பர் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்; 

அதற்கு முன்னதாக டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் கார்த்திகை விழாவுக்கு முன் கூ ட்டி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

எங்கும் தீப ஒளி பிரகாசிக்க ஞானமயம் குழு பிரார்த்திக்கிறது . வணக்கம்

—SUBHAM—-

Tags – World Hindu News, 23-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,

Leave a comment

Leave a comment