
Post No. 15,216
Date uploaded in London – 25 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

பல திருப்புகழ் பாடல்களில் மனிதனின் கிழப்பருவம் பற்றி அருணகிரிநாதர் அழகுபட சந்தத் தமிழில் பாடியுள்ளார்; அதே போல பல பாடல்களில் மனிதனுக்கு வரும் நோய்களின் பட்டியலையும் அடுக்கியுள்ளார். ஆனால் மிகவும் அரிதாகவே மருந்துகள் என்ன என்று சொல்கிறார். தள்ளாத வயதினிலே நெஞ்சில் கபம் கட்டி, மருந்துகளைச் சாப்பிட்டு, வாய் குழறி முருகா என்ற நாமத்தைக் கூடச் சொல்ல முடியாத காலம் ஒன்று வரும். அதற்கு முன்னரே உனது நாமத்தைச் சொல்லி அருளைப்பெற வேண்டும் என்பது அவர் நமக்குச் சொல்லும் செய்தி. இந்த முக்கியச் செய்தியுடன் திரிபலா சூர்ணத்தின் மகிமையையும் நமக்குத் தெரிவிக்கிறார்.
இன்னும் ஒரு பாடலில் இக பர செளபாக்யம் அருள்வாயே என்கிறார் ஆக மனிதனுக்கு இகத்திலும்–அதாவது இந்தப் பூவுலகில் வாழும் போதும் , பரத்திலும்- அதாவது இறந்த பின்னர் நமக்கு ஏற்படப்போகும் நிலையிலும் நலமாக இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார். ஆகவே நாம் திரிபலா சூரணத்தைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல் கபம் முதலியன பாதிக்காத போதும் குளிர் காலத்தில் சாதத்துடன் கொஞ்சம் நெய்யில் இந்தச் சூர்ணப்பொடியைப் போட்டு ஒரு சிறிய கைப்பிடி சாப்பிடுவது நல்லது. ஏதோ திருப் புகழைப் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம் . எனது தந்தையார் மதுரைத் தினமணி பொறுப்பாசிரியர் (காலஞ்சென்ற) திரு வெங்கட்ராமன் சந்தானம் இவ்வாறு தினமும் சாப்பிடுவார். அதைப்பார்த்த எனக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டு லண்டனுக்கு திரிபலா சூர்ணப்பொடியை வாங்கி வந்து பல மாதங்களுக்குச் சாப்பிட்டேன். பின்னர் உடம்பில் நெய் சேர வேண்டாம் என்று விட்டுவிட்டேன் . நெய்யோடு சாப்பிடுவது நல்ல ருசியாகத்தான் இருந்தது; இந்தப் பொடியின் வாசனை பிடித்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
அருணகிரிநாதர் சொன்ன முக்கியமான விஷயம் இப்படியெல்லாம் மருந்துகள் சாப்பிடும் நிலை வருவதற்கு முன்னர் உன்னுடைய திருப்புகழைப் தினமும் பாடிப்பழக வேண்டும் என்பதேயாம் ; அதை மறந்து விடக்கூடாது.
***
திரிபலா சூர்ணம் என்றால் என்ன என்பதை அறியாதோர் என்னுடைய பழைய கட்டுரையைப் படியுங்கள்; கடைசியில் கொடுத்துள்ளேன்.
முதலில் அருணகிரிநாதர் சொன்னதைப் படியுங்கள்:-
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் …… தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் …… பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் …… டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக் …… கருள்தாராய்
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகந டத்தித் திட்டென எட்டிப் …… பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் …… பொருகோவே
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் …… றிரிவோனே
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் …… பெருமாளே.
– திருப்புகழ் சொல் விளக்கம்
தலைமயிர் கொக்குக் கொக்கநரைத்து … தலைமயிரானது
கொக்கின் இறகு போல நரைத்தும்,
கலகலெ னப்பற் கட்டது விட்டு … கலகல என்று பல்லின்
கட்டுக்கள் யாவும் விட்டும்,
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டு … தளர்ந்த நடை ஏற்பட்டு,
தத்தித்தத்தி அடிகளை வைத்தும்,
தடுமாறித் தடிகொடு தத்தி … தடுமாற்றத்துடன் கம்பை
ஊன்றித் தள்ளாடி நடந்தும்,
கக்கல்பெ ருத்திட்டு அசனமும் விக்கி … இருமல் தொடர்ந்து
பெருகியும், உணவு தொண்டையில் அடைத்து விக்கல் எடுத்தும்,
சத்தியெடுத்துச் சளியுமி குத்து … வாந்தி எடுத்தும், சளி
அதிகரித்தும்,
பித்தமு முற்றிப் பலகாலும் … பித்தமும் பலத்துப் போய்,
பலதடவையும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்க … எள் எண்ணெயில் இட்டு
ஒன்றுபட்டு எரிக்க
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டு … கடுகு (கடுக்காய்), நெல்லி, தான்றி ஆகிய
மூன்றும் சேர்ந்த திரிபலை, சுக்கு, திப்பிலி முதலியவற்றை இட்டு வறுத்து,
தெளியவ டித்துற் றுய்த்து … தெளிவாக கஷாயத்தை வடிகட்டி
வாய்க்குள் இட்டும்,
உடல் செத்திட்டுயிர்போமுன் … உடல் செத்துப்போய், உயிர்
நீங்குவதற்கு முன்னாலே,
திகழ்புகழ் கற்று … விளக்கமுடைய உனது திருப்புகழைக் கற்று,
சொற்கள்ப யிற்றி … அப்புகழுக்கு உண்டான சொற்களைப்
பழகுமாறு செய்து,
திருவடியைப் பற்றித் தொழுதுற்று … உன் திருவடிகளைப்
பற்றிக்கொண்டு தொழுது வணங்கி,
செனனம் அ றுக்கைக்கு … பிறப்பை அறுப்பதற்கு
பர முத்திக் கருள்தாராய் … மேலான மோக்ஷத்திற்குத் திருவருளை
அருள்வாயாக.
கலணைவிசித்துப் பக்கரை யிட்டு … சேணத்தை இறுக்கக் கட்டி,
அங்கவடியை அமைத்து,
புரவிசெலுத்திக் கைக்கொடு வெற்பைக் கடுகநடத்தி …
குதிரைப் படையை நடத்தி, துதிக்கையை உடைய மலைபோன்ற
யானைப்படையை வேகமாகச் செலுத்தி
திட்டென எட்டிப் பொருசூரன் … திடுமென ஓட்டிப் போர்
செய்யும் சூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டு … பெரும் சேனை அழிந்து
போய், தடுக்கமுடியாமல் கைவிட்டு,
திரைகட லுக்குட் புக்கிட … அலைமோதும் கடலுக்குள் புகுந்து
ஒளிந்து கொள்ள,
எற்றிக் களிமயிலைச் சித்ரத்தில் நடத்தி … தாக்கி, செருக்குடன்
கூடிய மயிலை அழகுறச் செலுத்தி
பொருகோவே … போர் செய்யும் பெருமானே,
குலிசன்மகட்குத் தப்பியு … வஜ்ராயுதப் படையுள்ள இந்திரன்
மகளாம் தேவயானைக்குத் தப்பியும்
மற்றக் குறவர்மகட்குச் சித்தமும் வைத்து … குறவர் மகளாம்
வள்ளிக்கு மனத்தைப் பறிகொடுத்தும்,
குளிர்தினை மெத்தத் தத்து … குளிர்ந்த தினை மிகுதியாக
விளைகின்ற
புனத்திற் றிரிவோனே … தினைப்புனத்திலே அலைந்து திரிந்தவனே,
கொடியபொருப்பைக் குத்திமு றித்து … கொடுமையான
கிரெளஞ்சமலையை வேலால் குத்தி அழித்து,
சமரம்விளைத்துத் தற்பர முற்று … போரை விளைவித்து,
தானே மேலானவனாக நின்று,
குலகிரி யிற்புக் குற்று … மேலான மலையிற் சென்று பொருந்தி
உறை யுக்ரப் பெருமாளே. … வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப்
பெருமாளே.
****

தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
Meanings in Tamil and English by
Sri Gopala Sundaramhttps://www.kaumaram.com/thiru/nnt1321_u.html#
***
QUIZ மருந்துப் பத்து QUIZ (Post No.12,171)
Post No. 12,171
Date uploaded in London – – 22 June , 2023
1. திரி கடுகம் என்று தமிழ் நூலுக்கு மருந்தின் பெயர் இட்டது ஏன்
2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலின் பெயரில் உள்ள 5 வேர்கள் என்ன ?
3. ஏலாதி என்பன என்ன?
4.அஷ்ட சூர்ணத்தில் உள்ள எட்டு மருந்துச் சரக்குகளை சொல்ல முடியுமா?

5. திரிபலா சூர்ணம் என்பது என்ன ?
6.ரோஜா இதழ்களை வைத்து தயாரிக்கும் சாப்பிடக்கூடிய பண்டம் எது?
7.நெல்லிக்காயை வைத்து தயாரிக்கப்படும் லேகியத்தின் பெயர் என்ன?
8.கரிசலாங்கண்ணி மூலிகை என்ன நோய்க்குச் சிறந்த மருந்து ?
9.பாம்பின் பெயருள்ள இருதய நோய் சிகிச்சை மூலிகையின் பெயர் என்ன ?
10.மருத்துவத்தின் தந்தை ஹிப்பாக்ரடீஸ் என்ற கிரேக்கர் என்பர் மேலை நாட்டினர். ஆனால் இந்துக்கள் சொல்லும் மருத்துவத் தந்தை யார் ?
****
Answers
1.திரி கடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகும்;அவை வியாதிகளைப் போக்குவது போல தீமைகளை அகற்ற , ஒவ்வொரு பாடலிலும் 3 வழி களைக் குருகிறது இந்த நீதி நூல்.. திரிகடுகம் நூலாசிரியர் நல்லதனார்
2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலில் உள்ள 5 வேர்கள் :கண்டங்கத்திரி, சிறுவழு துணை , சிறு மல்லி, பெரு மல்லி,நெருஞ்சில் செடிகளின் வேர்கள் ஆகும்.இவை எப்படி உடலுக்கு நன்மை செய்கின்றனவோ அது போல மனிதனுக்கு நன்மை செய்யும் நீதிகள் இந்த நூலில் உள்ளன . ஆசிரியர் காரியாசான்.
3. நீதிகளைக் கூறும் தமிழ் நூலுக்கு ஏலாதி என்று நூலாசிரியர் கணி மேதாவியார் பெயரிட்டார். ஈழம், சிறு நாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவை காலத்தை மருந்துபி போட்டிகள் எப்படி உடலுக்கு நன் மை பயக்குமோ அப்படி ஒவ்வொரு பாடலிலும் 6 நீதிகளை வழங்குகிறார்.
4.அஷ்ட சூரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம்.
5.நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம்.
6. ரோஜா குல்கந்து
7. சியவன பிராஷ்
8.கல்லீரல் நோய்கள் , குறிப்பாக மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.
9.ஸர்ப்பகந்தி (Rauvolfia serpentina, the Indian snakeroot) ரத்த அழுத்தம், பாம்புக்கடி விஷம் நீங்க உதவும்
10. மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி
—- subham ——
Tags- திருப்புகழ் , திரிபலா சூர்ணம் , அருணகிரிநாதர், இருமல், சளி, முருகன் நாமம்