Post No. 15,229
Date uploaded in London – 30 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் —திருக்குறள் 280
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை; உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
****
ந தேன ஜாயதே சாதுர் யே நாஸ்ய முண்டிதம் சிரஹ- ஸம்ஸ்க்ருத பழமொழி
மொட்டை அடித்துக்கொண்டதால் மட்டும் சந்யாசி ஆகிவிடமுடியாது
xxx
புத்தர் உரைப்பதும் அஃதே
தம்மபதம் 266, 270):– ஒருவர் மஞ்சள் உடை தரித்து யாசகம் செய்து வாழ்வதால் புத்த பிட்சு ஆகிவிடமாட்டார். நேர்மையான பாதையை ஏற்று மாமிச உணவைத் தவிர்ப்வரே புத்த பிட்சு எனப்படுவார்
வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர், அருணகிரிநாதர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.
***
இதோ அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் …… தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் …… திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் …… பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் …… தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் …… தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் …… கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் …… புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும் …… பெருமாளே.
(தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்)
……… சொல் விளக்கம் ………
காவி யுடுத்தும் … காவித் துணியை உடுத்திக் கொண்டும்,
தாழ்சடை வைத்தும் … தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து
வைத்தும்,
காடுகள் புக்கும் தடுமாறி … காடுகளில் புகுந்து தடுமாறியும்,
காய்கனி துய்த்தும் … காய், பழவகைகளைப் புசித்தும்,
காயம் ஒறுத்தும் … தேகத்தை விரதங்களால் வருத்தியும்,
காசினி முற்றும் திரியாதே … உலகம் முழுவதும் திரிந்து
அலையாமல்,
சீவன் ஒடுக்கம் … சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்
பூத வொடுக்கம் … ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்
தேற உதிக்கும் … நன்றாக உண்டாகும்படி,
பரஞான தீப விளக்கம் காண … மேலான ஞான ஒளி
விளக்கத்தினையான் காணும்படி,
எனக்குன் சீதள பத்மம் தருவாயே … எனக்கு உன் குளிர்ந்த
தாமரை அடிகளைத் தந்தருள்க.
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் … பாவமே உருவெடுத்த
தாருகாசுரன் கூட்டத்தினர்
பாழ்பட உக்ரம் தருவீரா … பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே,
பாணிகள் கொட்டும் பேய்கள் … போர்க்களத்தில் கைகளைக்
கொட்டும் பேய்கள்
பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா … உளறும்
பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே,
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும் … அன்னங்கள் நிற்கும்
வயல்கள் சூழ்ந்த
சோலை சிறக்கும் புலியூரா … சோலைகள் விளங்கும்
புலியூரனே (சிதம்பரேசனே),
சூரர் மிகக்கொண்டாட … சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக
நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே. … நடனமாடும்
மயிலினை நடத்தும் பெருமாளே.
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை
குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன், சிவன் என்று ஆகிவிடும்.
***
சங்கரரும் சாடுகிறார்
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.
***
திருமூலரின் திருமந்திரம்
நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே
பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.
புத்தர் பேருரை
உச்சுக்குடுமி, மொட்டை, ஜடாமுடி, காவித்துணி, மஞ்சள் உடை, நிர்வாண கோலம் இவைகளால் ஒருவன் துறவி ஆகிவிட முடியாது என்று புத்தர், வள்ளுவர், திருமூலர், ஆதிசங்கரர் முதலிய பல தீர்கதரிசிகள் எடுத்துரைத்தத்தைக் கண்டோம். புத்தர் மூன்று இடங்களில் இதைச் சொல்வது குறிப்பிடத்தக்கது இன்றைய பெளத்த துறவிகள் புத்தர் சொன்னதைக் கடைப்பிடிப்பதில்லை என்பதை உலகெங்கிலுமுள்ள புத்த குருமார்களைக்கண்டால் புரியும்.
புத்தர் தம்மபதத்தில், மூன்று இடங்களில் இக்கருத்தை வலியுறுத்துகிறார் (தம்மபதம் 141, 264, 393)
நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்
.—subham—
Tags – சடை, தாடி, குடுமி, மொட்டை, அருணகிரிநாதர் , திருப்புகழ் , மழித்தலும் , பஜகோவிந்தம், நூலும் சிகையும் ,ஜடிலோ முண்டி திருமூலர்,