விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய புரட்சி! ஆர்டிபிஷியல் அஸ்ட்ரானட்ஸ் இனி பறப்பார்கள்!! (Post.15,239)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,239

Date uploaded in London –   4 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

விண்வெளி சாகஸம்!

விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய புரட்சி! ஆர்டிபிஷியல் அஸ்ட்ரானட்ஸ் இனி பறப்பார்கள்!!

ச.நாகராஜன்

அனைவரையும் அயர வைக்கும் ஒரு புதிய புரட்சி விண்வெளிப் பயணங்களில் ஏற்படப் போகிறது.

மனிதர்கள் விண்கலத்தில் பறப்பது போல இனி செயற்கை விண்வெளிவீர்ர்கள் விண்கலத்தில் ஏறி விண்ணில் பறக்க இருக்கிறார்கள்.

ஆர்டிபிஷியல் அஸ்ட்ரானட்ஸ் என்ற இவர்கள் விண்ணில் பறப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் இவர்களுக்கு மனிதர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர பொருள்கள் தேவையே இல்லை. இவர்கள் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டால் அவர்களுக்கு லைஃப் சப்போர்டிங் சிஸ்டம் எனப்படும் உயிர் காக்கும் அமைப்புகள் எதுவும் தேவை இல்லை.

இவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். சந்திரன் என்ன, செவ்வாய் கிரகத்திற்கே கூடப் பயணப்படலாம்.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள செவ்வாய் கழகத்திற்கு தலைவராக இருப்பவர் பாஸ்கல் லீ என்பவர். இவர் SETI நிலையத்தில் பணி புரியும் ஒரு விஞ்ஞானி.

“இப்போது நாம் ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு  மற்றும் ரொபாட்டுகளின் காலத்தில் நுழைந்து விட்டோம். ஆகவே முதல் செயற்கை மனிதனை உருவாக்கும் சாதனையைச் செய்வதில் கஷ்டம் ஏதும் இருக்காது என்கிறார் இவர்.

2025 ஜூலை மாத இறுதியில் இவர், ‘செயற்கை நுண்ணறிவு காலத்தில் செவ்வாய்க்கு மனிதர்களின் பயணம்’ என்ற ஒரு பட்டறையில் பேசும் போது பல அதிரடிக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“செயற்கை நுண்ணறிவு வந்து விட்டது. சூப்பர் நுண்ணறிவு மனிதர்கள் உருவாகப் போகிறார்கள். அப்படி இருக்கும் போது சூப்பர் செயற்கை விண்வெளிவீரர்கள் உருவாக மாட்டார்களா. என்ன” என்று கேட்டு அனைவரையும் பிரமிக்க வைத்தார் லீ.

“இவர்கள் மனிதர்களை விட இன்னும் திறமையாகச் செயல்படுவார்கள் என்று கூறிய லீ, “இனி என்ன?  சனி கிரகத்தைச் சுற்றி வரும் சந்திரனான டைடானுக்குக் கூடப் போகலாம். எல்லா நட்சத்திரங்களுக்கும் போகலாம்” என்று கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

“இவர்களை மட்டும் நாம் உருவாக்கி விட்டோமானால் இவர்களை இயந்திரங்களாகக் கருதக் கூடாது. இவர்களின் பெற்றோர்கள் நாம் என்று கர்வப்பட வேண்டும்” என்றார் அவர்.

ரொபாட்டுகளை விண்வெளிக்கு அனுப்பினால் அவர்களுக்கு மனிதர்களைப் போல ஹைட்ரஜனோ, ஊட்டச்சத்துக்களோ தூக்கமோ தேவை இல்லை. அவை எதுவும் கேட்காது. எதற்கும் ஆசைப்படாது

‘ஆனால் மனிதன், மனிதன் தான்’ என்கிறார் விஞ்ஞானி வெய்னர்ஸ்மித் (Weinersmith).

“மனிதர்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத தூரத்தில் உள்ள கிரகங்களுக்குச் செல்லும் வல்லமை படைத்தவை தாம் ரொபாட்கள். அங்கு அவை நவீன சாதனங்களை இயக்கி பல உண்மைகளைத் தரும். என்றாலும் மனிதனைப் போல அவற்றால் விரைவாக இயங்க முடியாது. செவ்வாய் கிரகத்திற்குச் சென்ற ரோவர்கள் மிக மெதுவாக ஒரு மணிக்கு 0.1 மைல் என்ற வேகத்தில் சென்றதை நினைத்துப் பாருங்கள்” என்கிறார் அவர்.

“செயற்கை நுண்ணறிவு செஸ் போட்டியில் வேண்டுமானால் மனிதனைத் தோற்கடிக்கலாம். அதனால் ஆய்வுச் சூழ்நிலைகளில் அவை மனிதனை வெல்லும் என்று அர்த்தமில்லை” என்று விளக்கும் அவர், “ஆனால் செயற்கை நுண்ணறிவு ரோவர்களின் இயக்கத்தைத் துரிதப்படுத்தும் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் large language models (LLM)  என்ற மாடல்கள் மனிதனின் மொழியைப் புரிந்து கொண்டு ஏராளமான தரவுகளைப் பரிசீலிக்கும். அந்த LLM-ஐ இப்போது செவ்வாயில் உள்ள ரோவர்களில் இயக்க முடியாது என்கிறார் டாக்டர் வேக்ஸ்டாப் (Dr Wagstaff) என்ற விஞ்ஞானி. ஏனெனில் அதை இயக்க அதிக சக்தி வேண்டும். அந்த அளவு சக்தியை இப்போதைக்குத் தர முடியாது என்பது அவரது விளக்கமாகும். உங்களுடைய ஸ்மார்ட் போனின் வேகத்தில் பத்தில் ஒரு பங்கு தான் அதன் வேகம்!

ஆக செயற்கை விண்வெளி வீரர்கள் மற்றும் ரொபாட்டுகளின் பயணம் நிச்சயம் தான்; அப்பயணத்தில் உள்ள தடைகளும் அவற்றிற்கான விடைகளும் ஆராயப்பட்டு வருகிறது. கூடிய சீக்கிரத்தில் விடைகள் கிடைக்கும்.

விடைகள் கிடைத்தவுடன் விண்கலத்தில் பறப்பான் செயற்கை விண்வெளிவீரன்!

**

Leave a comment

Leave a comment