உலகின் அதிசய வெந்நீர் ஊற்றுக்களும், புவி வெப்ப ஊற்றுக்களும்! (Post.15,248)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,248

Date uploaded in London –   7 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

வாகரேவாரேவா!   (WHAKAREWAREWA) – உலகின் அதிசய வெந்நீர் ஊற்றுக்களும்புவி வெப்ப ஊற்றுக்களும்!

 ச. நாகராஜன்

நியூஜிலாந்தின் வடக்கே உள்ள தீவில் உள்ள வெந்நீர் ஊற்றுக்கள் உலகத்தோரை பிரமிக்க வைப்பவை.

 1886ம் ஆண்டு மார்ச் மாதம்  இந்தப் பக்கமாக ஏராளமான போர் படகுகள் வருவதை இங்குள்ள பழங்குடி இனத்தவரான மாவோரி மக்கள் கண்டு இது பழங்காலப் பிசாசுகள் எடுத்திருக்கின்ற வடிவம் என்று கூறினர். ஏதோ ஒரு பெரிய ஆபத்து வரப் போவதற்கான அறிகுறி தான் இது என்றனர் அவர்கள்.

உள்ளூர் செய்தித்தாள்கள் இது போன்ற ஒரு காட்சியை இப்பகுதியில் யாரும் கண்டதே இல்லை என்று வியந்து செய்தி வெளியிட்டன.

மாவோரி மக்கள் பயந்தபடியே நடந்து விட்டது. அந்த வருடம் ஜூன் மாதம் பத்தாம் தேதி தராவேரா என்ற எரிமலை வெடித்து அந்த நிலப்பகுதியையே மாற்றி விட்டது.

 ரோடோருவா என்ற நகரம் நியூஜிலாந்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள பெரிய நகரம். இதையொட்டி உள்ள பகுதியில் எரிமலைகள் வெடிக்கவே கந்தகம் கலந்த நீர் சுடச்சுட ஆங்காங்கே பீறிட்டு எழுந்தது.

 ஏராளமான வெந்நீர் ஊற்றுக்கள் (HOT SPRINGS) பொங்கி எழுந்தன. புவி வெப்ப ஊற்றுக்களும் (GEOTHERMAL FOUNTAINS) உருவாகின.

பொஹோடூ என்ற வெந்நீர் ஊற்று ஆகாயத்தைத் தொடுவது போல எழுந்து பீறிட்டது. நூறு அடி உயரம் வெந்நீர் ஆவி பறக்கச் சுடச்சுட எழுந்த காட்சியைக் கண்ட மக்கள் மலைத்தனர்.

 ரோடோருவா நகருக்கு அருகில் இருந்த வாகரேவாரேவா இந்த வெந்நீர் ஊற்றுக்களால் பிரபலமானது. இது பழங்குடியினரான மாவோரி மக்கள் வசித்து வரும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

 படீர் படீரென கந்தகக் குமிழிகள் புகையுடன் எழுந்து வரவே மக்கள் அரண்டு போயினர்.

ஏராளமான வெந்நீர் ஊற்றுக்கள் ஆங்காங்கே உருவாயின. இங்குள்ள ஏரி ஆழமில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஆழம் 20 மடங்கு அதிகரித்து 700 அடி ஆழத்தைக் கொண்ட ஏரியாக மாறியது.

 1934ம் ஆண்டு இந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த பிரபல எழுத்தாளரான பெர்னார்ட் ஷா, “ஐயோ! நான் பார்த்ததிலேயே மிக மோசமான பகுதி இது தான்” என்று கடுமையாக விமரிசித்தார்.

 இயற்கையே உருவாக்கித் தந்த வெந்நீர் ஊற்றுக்களைப் பார்த்த நியூஜிலாந்து எஞ்ஜினியர்கள் 1961ம் ஆண்டு முதல் ஜியோதெர்மல் ஸ்டேஷனை உருவாக்கினர். இயற்கையின் இயல்பான வெப்பத்தால் மின்சாரத்தை உருவாக்கி அவர்கள் மகிழ்ந்தனர்.

 வாகரேவாரேவாவில் சுமார் 500 குளங்கள் உள்ளன. எல்லாமே கொதிக்கும் குளங்கள் தாம். 65 கெய்ஸர் ஊற்றுக்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. இப்போது ஏழு கெய்ஸர்கள் மட்டும் இயக்கத்தில் உள்ளன.

1972ம் ஆண்டு முடிய இங்குள்ள டே ஹோரு கெய்ஸர் ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து தடவை 20 அடி உயரம் வரை பொங்கி எழுந்து வந்தது.

இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 873 தான்! இங்குள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் தான். 2025ம் ஆண்டின் புள்ளி விவரப்படி பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 108!

 ஆனால் மாவோரி மக்களின் அனுபவம் வாய்ந்த நூற்றுக் கணக்கான பழமொழிகள் வியக்க வைப்பவை. அவர்களின் பண்பாடும் நடனமும் கூட வியக்க வைப்பவை. அனைத்தையும் இணையதளத்தில் காணலாம்.

 ‘வாகரேவாரேவா உல்லாசப் பயணம்’ என்ற சுற்றுலாவில் தேர்ந்த வழிகாட்டிகள் ஒவ்வொரு கெய்ஸரின் பெயரைச் சொல்லி அது எப்படி மற்ற கெய்ஸர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று விளக்கி வரலாறைக் கூறுகின்றனர். இதைப் பார்க்கவும் கேட்கவும் இப்போது இந்தப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

 ஜில்லென்ற குளிர்ந்த நீர் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும்  நதிகளைப் பார்க்கும் பயணம் வேறு; கந்தகப்  புகை வீச அதனூடே சென்று வெந்நீராகக் கொப்பளிக்கும் நீரூற்றுகளைப் பார்க்கும் அனுபவம் வேறு!

 உலகத்தினர் அனைவரையும் வாகரேவாரேவா வா, வா என்று அழைக்கிறது!

**

Leave a comment

Leave a comment