Post No. 15,249
Date uploaded in London – 7 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாயில் புல்லைத் திணியுங்கள்- பெரியாழ்வார் கோபம்
பெரியாழ்வார் பாசுரங்களில் இரண்டு அருமையான காட்சிகள் வருகின்றன; ஒன்று கோபக் காட்சி; இன்னும் ஒன்று கேலி, கிண்டல், பகடி செய்யும் காட்சி. அதை முதலில் காண்போம்.
இறக்கும் தருணம் வந்து விட்டது அப்போது யாரும் நாராயணா , ராமா, கிருஷ்ணா என்று உரக்கச் சொல்லி நமக்கு நல் வழி காட்ட மாட்டார்கள் . அல்லது சாகாதீர்கள் இந்த மருந்தைக் குடியுங்கள் அல்லது இதோ ஆக்சிஜன் சிலிண்டர்; இதிலிருந்து வரும் ஆக்சிஜனை சுவாசியுங்கள் என்றும் சொல்ல மாட்டார்கள் . அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா ?
“ஐயா; உயில் எங்கே இருக்கிறது? அல்லது இந்த வெற்றுத்தாளில் கையெழுத்துப் போடுங்கள். எங்காவது ‘லாக்க’ரில் பணம் வைத்திருந்தால் அந்த பாஸ்வோர்டினைச் சொல்லுங்கள் எங்கேயாவது தங்கம், வைரத்தைப் புதைத்து வைத்தால் சொல்லுங்கள்” என்றுதான் கேட்பார்கள்
சொல்லு சொல்லு என்று கத்துவார்கள்; இதை அழகாக்கப்படுகிறார் பெரியாழ்வார்
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல்லென்று, சுற்றும் இருந்து,
* ஆர்வினாவிலும் வாய் திறவாதே
அந்தக் காலம் அடைவதன் முன்னம்,
* மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி,
* ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
தமிழன் புதைத்துக் கெட்டான் என்பது பழமொழி; ஆகையால் உறவினர்கள் சொல்கிறார்கள்;
“மறைவிடத்தில் பொருளை சேமித்து வைத்திருந்தால் சொல்லுங்கள்; சொல்லுங்கள் என்று பல முறை கூச்சல் இடுவார்கள் அவர் வாயே திறக்க மாட்டார்; (அதாவது வாய்திறக்கும் நிலையில் இல்லை!) அவ்வாறு இறுதிக்காலத்தை அடைவதற்கு முன்னரே உள்ளத்தைக் கோவில் ஆக்குங்கள்; அதில் மாதவன் என்னும் சிலையை நிறுவுங்கள் ; அந்த தெய்வத்தின் மீது ஆர்வம் என்னும் மலரினைத் தூவி பூஜை செய்யுங்கள்; (அதாவது மானசீக பூஜை).இப்படிச் செய்தால் எம தூதர்களிடமிருந்து தப்பிக்கலாம்”.
பின்னர் எமதூதர்களைக் கண்டவுடன் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் பெரியாழ்வார் வருணிக்கிறார் அதற்கு முன்பாக உள்ளக் கோவில் பற்றி காண்போம்.
உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே
திருமந்திரம், பாடல் எண் 1823
பொருள்:-
மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் கருணைஅயை வாரி வழங்கும் கள்ளல்- கருணைக் கடல். சமய நூல்களைக் கற்றுத் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம். இந்தக் கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களாகும் எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் என்றார் திருமூலர்.
“ஆத்மலிங்கம் பஜரே, அதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை நினைத்தே.
சுவரை வைத்துத்தான் சித்திரம் என்று தமிழில் ஒரு பழமொழி உள்லளது. ஆரோக்கியமான உடலின்றி மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியது. பலவீனமான உடலினால் ஆத்ம முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான், பகவத் கீதையைப் படிப்பதைவிட காலபந்து விளையாடுவது மேல் என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.
***
அப்பர் பெருமான் அருளுரை
அப்பரும் தேவாரத் திருப்பதிகத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்துவார்:
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே
-நாலாம் திருமுறை, தேவாரம்
பொருள்:
இவ்வுடம்பைக் கோயிலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனதிற்குள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, அன்பை நெய்யும் பாலாய் நிறைய வைத்துப் பூசித்து, இறைவனைப் போற்றினேன்.
***
‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’
காளிதாசனும் உடலைப் பராமரிக்கவேண்டியதன் அவசியத்தை ஒரு பொன்மொழியால் உணர்த்துகிறான்.
சரீரமாத்யம் கலு தர்மசாதனம்– குமார சம்பவம் 5-3
சிவனை அடைய தவமியற்றும் பார்வதியை ஒரு யோகி சந்த்தித்துச் சொல்கிறார்: உன் உடலின் சக்திக்கேற்ற தவத்தை மேற்கொண்டிருக்கிறாயா? ஏனெனில் தர்ம காரியங்களைச் செய்வதற்கு மூல நம்முடைய உடல்தான் ;அதாவ்து உடலை வருத்தி தவம் இயற்றுதல் அவசியமன்று.
***
பெரியாழ்வார் பாசுரங்களைத் தொடர்ந்து காண்போம்
4.5.4 மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி, * காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் * மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி, * வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே.
***
எம தூதர்கள் அச்சுறுத்தல்
பெரியாழ்வார் திருமொழி 4.5.4
4.5.4 மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேல் மிடற்றினை உள் எழ வாங்கி,
* காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்
கண்ணுறக்கம் அதாவதன் முன்னம்
* மூலமாகிய ஒற்றை எழுத்தை
மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி,
* வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே.
மேல் பக்கம் எழுந்த ஒரு காற்று (வாயு) மேல் எழுந்து நெஞ்சு கீழே இடிய விழுந்து கால்களும் கைகளும் பதைபதைத்து தீர்க்க நித்திரை உண்டாவதற்கு முன் சகல வேதங்களுக்கும் காரணமான திரு மந்திரத்தில் உள்ள பிரணவத்தை அளவெடுத்து உச்சரித்து கடல் போன்ற வடிவை உடைய எம்பெருமானை அடைய வல்லீரகள் ஆகீல் பரமபதத்தை அடையலாம் மற்றும் அடியார் கூட்டங்களுடன் கூடலாம் .
***
4.5.5 மடி வழி வந்து நீர் புலன்
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே,
* கடை வழிவாரக் கண்டம் அடைப்பக் கண் உறக்கம் ஆவதன் முன்னம்
* தொடை வழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
* இடை வழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்றேத்த வல்லீரே.
பெரியாழ்வார் திருமொழி 4.5.5
யம கிங்கரர்களை கண்ட பயத்தாலே, மடியில் உள்ள லிங்கத்தின் வழியே வந்து சிறுநீர் பெருகவும் வாயில் பெய்த பொரிக்கஞ்சியும் கழுத்தை அடைக்க மறுபடியும் கடை வழியாலே வழியவும் கண் உறக்கம் கொள்வதற்கு முன், ரிஷிகேசன் என்று துதிக்க வல்லீரகள் ஆனால், யமலோகத்தில், உங்களுடைய துடையில் செந்நாய்களானவை கவ்வ மாட்டாது; உங்களை சூலத்தால் யமகிங்கரர்கள் குத்தவும் மாட்டார்கள்; நீங்கள் நடுவழியிலே வஸ்திரத்தையும் இழக்க மாட்டீர்கள் .
****
வாயில் புல்லைத் திணியுங்கள்- பெரியாழ்வார் கோபம்
பெருமாளைத் தொழாதவர்கள், பெற்றதாய்க்கு நோய் போன்றவர்கள்
குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்
குருக்களுக்கு அனுகூலராய்ச்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி
வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு
நோய்செய்வான் பிறந்தார்களே
***
என்ன வியப்பு! இறைவனை எண்ணாமல் கவளம் கவளமாக சோற்றை ஊத்தை வாய்க்குள் போடுகிறார்களே
வண்ண நல் மணியும் மரகதமும்
அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
கவளம் உந்துகின்றார்களே
***
இறைவனை எண்ணாமல் சாப்பிடுவோர் பாவத்தை அல்லவா உண்ணுகிறார்கள்
உரக மெல் அணையான் கையில் உறை
சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம் பரந்து ஏறும் செங்
கமல வயற் திருக்கோட்டியூர்
நரகநாசனை நாவிற் கொண்டு அழை
யாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ
***
பெருமாளை வணங்காமல் உண்ணுவோர் இந்த பூமிக்குச் சுமை; அவர்கள் வாயிலிருந்து சோற்றினைப் புடுங்கி, வாயில் புல்லைத் திணியுங்கள்
ஆமையின் முதுகத்திடைக் குதி
கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
யாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே
****
ஐம்புலன்களில் தூய்மையுடைய வைணவர்களின் பாத தூளிகள் படுவதால் இந்த உலகம் சிறக்கிறது
பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று
ஏத்துவார்கள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்
உலகம் பாக்கியம் செய்ததே
—subham—
Tags -பெரியாழ்வார் கோபம், கிண்டல், பாத தூளிகள், வாயில், புல்லைத் திணியுங்கள், தமிழன் புதைத்துக் கெட்டான்,