WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,252
Date uploaded in London – – 8 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-12-2025 அன்று நடைபெற்ற ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
மின் உலாவிய சடையினர், விடையினர்,
மிளிர்தரும் அரவோடும்
பன் உலாவிய மறை ஒலி நாவினர்,
கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர்,,
புகழ் மிகு கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை
ஓடிட, வீடு ஆமே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான கீழ் வேளூர் திருத்தலமாகும். இத்தலம் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வேளூர் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன. கிழக்கே இந்தத் தலம் அமைந்துள்ளதால், “கீழ் வேளூர்” என்ற பெயரைப் பெற்றது.
, இறைவன் : கேடிலியப்பர், அக்ஷயலிங்க ஸ்வாமி
அம்மன் – வனமுலை அம்மன், சுந்தர குஜாம்பாள்
தல விருக்ஷம் – பத்ரி, இலந்தை
தீர்த்தம் – சரவண பொய்கை, அக்னி தீர்த்தம்,, சேஷ தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம், சந்திர மற்றும் குபேர தீர்த்தங்கள்
புராதனமான இந்தக் கோவிலைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
படைப்பு தெய்வமான பிரம்மா தனது படைப்பாற்றல் குறைவுபட்டதால் இங்கு வடக்கு கோபுர வாயிலின் எதிரே பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி அக்ஷயலிங்க ஸ்வாமியை வேண்டி வழிபட்டார். உடனே அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் வந்தது.
இங்கு அமைந்துள்ள திருமஞ்சனக் குளம் தோஷ நிவர்த்தியை ஏற்படுத்தும் குளமாகும். நிருதி மூலையில் உள்ள இந்தக் குளத்தில் நீராடி இந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தீர்த்தம் தெற்கு மூலையில் உள்ளது. இதில் நீராடினால் சரும வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
இன்னொரு புராண வரலாறும் உண்டு.
சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர் தனக்கு கொலையினால் ஏற்பட்ட பாவம் போவதற்காக சிவ பிரானை வழிபட்டார். கொலைபாதகங்கள் வீரஹத்தி என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தொல்லையிலிருந்து விடுபட சிவபிரான் முருகனை நோக்கி “நீ பத்ரிவனம் எனப்படும் கீழ்வேளூர் சென்று எம்மை வழிபடுக” என்று அருள் பாலித்தார். அப்படியே முருகபிரானும் கீழ்வேளூர் வந்தார். கோவிலின் முன்னால் தன் வேலாயுதத்தால் குத்த சரவண தீர்த்தம் என்ற குளம் உருவானது. அதில் நீராடி கேடிலியப்பர் என்னும் அக்ஷயலிங்க ஸ்வாமியை அவர் வழிபடலானார். ஆனால் அப்போதும் வீரஹத்திகள் அவரைச் சூழ்ந்து தொல்லை கொடுத்தன. அன்னை பராசக்தி முருகன் படும் கஷ்டத்தைக் கண்டு வீர ஹத்திகளின் மீது கோபம் கொண்டு அனைவரும் அஞ்சும்படியான கோர ரூபத்தை எடுத்தாள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளுடன் ஆகாயத்தையும் சேர்த்து ஐந்து இடங்களிலும் வட்டமாகப் பரவி நின்றாள். அஞ்சுவட்டத்து அம்மன் ஆகி முருகனின் தவத்திற்கு
இடையூறு ஏற்படாத வண்ணம் காத்தாள்.
பார்வதியின் கோர உருவத்தைக் கண்ட வீர ஹத்திகள் அஞ்சி ஓடின. தவம் முற்றுப் பெறவே முருகபிரான் முன்னர் சிவன் காட்சி அளித்து ஆசி வழங்கினார். அவரது நெற்றிக் கண் சுடரினால் வீரஹத்திகள் அழிந்தனர்.
நிலையாக இங்கிருந்து பக்தர்களுக்கு அருள் புரிவாயாக என்ற சிவபிரானின் வாக்கை ஏற்று அம்மனும் அஞ்சுவட்டத்து அம்மன் என்ற பெயருடன் இங்கு நிலை பெற்று அனைவருக்கும் அருள்பாலிக்கலானாள்.
இந்த தலத்தைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.
சிங்கத்வஜன் என்னும் ஒரு அரசன் காட்டில் வேட்டையாடி களைப்படைந்தான். தாகம் தணிப்பதற்காக ஒரு முனிவரது ஆசிரம் சென்று ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வருமாறு கத்தினான். தியானத்தில் இருந்த முனிவர் இதனால் கோபம் கொண்டு, “கழுதை போலக் கத்தும் நீ ஒரு கழுதை ஆகக் கடவது” என்று சபிக்க அவன் கழுதை ஆனான்.
இன்னொரு அரசன் விந்திய மலையில் தவம் புரிந்த அகத்திய முனிவரை தரிசனம் செய்யச் சென்றோரை துன்புறுத்தி வந்தான். இதனால் அவனை அகத்தியர் கழுதையாகும் படி சபித்தார்.
இந்த இரண்டு கழுதைகளையும் வணிகன் ஒருவன் துணி மூட்டைகளைச் சுமக்கப் பயன்படுத்தலானான். ஒரு நாள் இரு கழுதைகளும் அக்ஷயலிங்க கோவிலில் இருந்த பிரம்மதீர்த்தத்தில் நீரைப் பருகின. உடனே அக்ஷயலிங்க ஸ்வாமி அருளால் அவைகளுக்கு முந்தைய ஜன்மம் நினைவுக்கு வர அவைகள் மனிதர் பேசும் மொழியில் பேச ஆரம்பித்தன. இவை பேசுவதைக் கேட்ட வணிகன் அவற்றை விட்டு ஓடி விட்டான். இரு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. ஆடி மாதம் பௌர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தில் நீர் அருந்தினால் நீங்கள் மீண்டும் மனித உருவை அடைவீர்கள் என்று அசரீரி ஒன்று ஒலித்தது. அதன் படியே அவை நீர் அருந்த மனித வடிவத்தைப் பெற்றன.
இன்னொரு வரலாற்றின் படி மார்க்கண்டேயர் தம் நித்ய பூஜையைத் வழக்கம் போலத் தொடங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து கடல் பொங்கி அண்டங்கள் அழிய ஆரம்பித்தன. “என்றும் அழியாத தென் இலந்தை வனம் சென்று கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாயாக” என்று அசரீரி ஒன்று ஒலித்தது. அவரும் உடனே அக்ஷயலிங்க ஸ்வாமியை வழிபட கீழ் வேளூர் வந்தார்; வழிபட்டார். ஆகவே உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலம் கீழ்வேளூர் என்பது விளங்குகிறது.
மூலவர் அக்ஷயலிங்க ஸ்வாமி என்ற கேடிலியப்பர் ஸ்வயம்பு மூர்த்தி. அம்மன் வனமுலை அம்மன் என்றும் சுந்தர குஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. சந்நிதி கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்கள் இங்கு உள்ளன. உள் பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, அகஸ்தியர், விஸ்வநாதர், கைலாஸநாதர், பிரஹதீஸ்வரர். அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
முருகப் பெருமானுக்கும் குபேரனுக்கும் தனித்தனியாக மிகப் பெரிய சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள விநாயகர் பத்ரி விநாயகர் என்ற திருநாமத்தைக் கொண்டுள்ளார்.
இங்குள்ள நடராஜர் இடது பாதத்தை ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்திய முனிவருக்குக் காட்சி அளித்து அருள் பாலித்தார்.
கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்று.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடி அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கேடிலியப்பரும் வனமுலை அம்மனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி! வணக்கம்!!
**