Post No. 15,262
Date uploaded in London – 11 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தேச முத்துமாரி–பாரதியார் பாடல்
தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழி
லாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்
நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
***
ஷெல்லி தாசன் என்ற பெயரில் கவிதைகளை எழுதிய பாரதியார் பின்னர் சக்திதாசன் என்று ஏன் பெயரை மாற்றிக்கொண்டு எழுதினார் என்பதைக் காண்போம்.
பாரதியார் ஒரு காளி மாதா பிரியர் ; அவர் பாடிய பக்திப் பாடல்களில் நாற்பதுக்கும் மேலான கவிதைகள், தேவி மீதான துதிகள் ; அது மட்டுமல்ல. வேறு பல பாடல்களிலும் தேவியை , சக்தியைக் குறிப்பிடத் தவற வில்லை . சக்தியை வேண்டினால் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிகையில் அவர் காணி நிலத்துக்கு கூட சக்தியைத் தான் வேண்டினார் . அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்ற அவருடைய வரிகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது .
அவர் பாடிய துவக்க காலப் பாடல்களில் ஒன்று உஜ்ஜயினீ மாகாளி பற்றிய பாடல்; அது மட்டுமல்ல; காளியின் நடனத்தை, வெடிபடு மண்டலத் திடிப்பல தாளம் போட என்ற கவிதையில், தான் கண்ட காளி தேவி நடனத்தை நமக்கும் காட்டுகிறார்
ஊழிக் கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண்டீ! கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
***

நவராத்திரிப் பாட்டு
(உஜ்ஜயினீ)
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ)
சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)
***
காளிப் பாட்டு
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்
***
கஷ்டம் வந்தாலும் அது அவளது அருளே!
இவ்வளவு கேட்டாரே, சக்தி தேவி செவி சாய்த்தாளா ? அதைப் பற்றி அவரே கவலைப் படவில்லை ; ஏனெனில் இந்துக்களின் நம்பிக்கை முன்னை வினை. ஆகையால் கொடுத்ததை ஏற்றுக் கொள் என்று அவரே சக்தி பற்றிய பாடலில் பாடிவிடுகிறார் :
ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு;
சக்திசில சோதனைகள் செய்தால்-அவள்
தண்ணருளென் றேமனது தேறு.
ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து;
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து!
****
தான் மட்டும் சக்தியை வணங்கினால் போதாது என்று கருதி ஓம் சக்தி கவிதையில் எல்லோரையும் சக்தியை வணங்கி கல்வியும் செல்வமும் பெற வாழ்த்துகிறார்
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
***
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
****
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
****
சக்தி தேவி, அவருக்கு சக்தியைக் கொடுத்ததை அவரது பாடல்களிலிருந்து அறிய முடிகிறது ஏனெனில் அவைகளைப் படிக்கையில் நமக்கே சக்தி பிறக்கிறது . மேலும் அவர் கேட்ட ஒன்றினை தேவியானவள் கொடுத்தாள் என்பதை யாரும் மறுக்க முடியாது கோடி கவிதைகளை வெள்ளமெனப் பொழிய வேண்டினார் ; வாணியும் செவி சாய்த்தாள் ; அதையும் காலத்தால் அழியாத அவரது கவிதைகளில் காண முடிகிறது; அவருக்கு செல்வம் எவ்வளவு கிடைத்திருந்தாலும் நாம் அதை அப்படியே காண முடியாது; காரணம் காலத்தால் அவை தேயக்கூடியவை மறையக் கூடியவை; அவர் பெற்ற கவிதைச் செல்வமோ காலத்தால் அழியாதவை; தேயாதவை; புதுக்கருக்கு அழியாதவை பட்டை தீட்டப்பட்ட வைரம் போலவும், பத்தரை மாத்துத் தங்கம் போலவும் ஜொலித்துக்கொண்டு இருக்கும்
***
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்ற பாடலில் 46 கண்ணிகள் உள்ளன. சக்தியை வணங்கினால் கிடைக்கும் பலன்களின் மிக நீண்ட பட்டியலை அதில் காணலாம்.
*****
லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியின் நாமங்களை விளக்கிய டாக்டர் சுதா சேஷய்யன் போன்றோர் முன்னரே பாரதியைப் பல நாமங்களுக்கு மேற்கோள் காட்டியுள்ளனர் ; இதோ சில நாமங்களை நாமும் ஒப்பிட்டு மகிழ்வோம் ; தேவியின் கடாக்ஷத்தைப் பெறுவோம்
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ) என்று உஜ்ஜயினீ . நவராத்திரிப் பாட்டைத் துவக்குகிறார் .
அதில் வரும் ஸ்ரீ மாதா, லலிதா சஹஸ்ரநாமத்தின் முதல் வரி யாகும்!
அம்பிகை-295; லலிதா சஹஸ்ர நாமத்தின் எண் ;
ஆதி சக்தி – 615
உமா -633;
கல்யாணீ – 324;
சண்டிகா – 755 ;
துர்கா – 190 ;
நித்யா -136 ;
பகவதி-279 ;
பராசக்தி -572 ;
பவானி- 112 ;
மஹா காளீ – 751 ;
மஹா சக்தி – 217 ;
மஹாலக்ஷ்மீ – 210 ;
மாதா – 457 ;
வாக்வாதினி -350;
சரஸ்வதி – 704 ;
மாதா / அன்னை என்பதை பாரதியார் நூற்றுக்கணக்கான இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
பல இடங்களில் சம்ஸ்க்ருத நாமாவளிகளின் தமிழாக்கத்தைக் காணலாம் ; வெள்ளைக் கமலம், ; வெள்ளைத் தாமரை என்பார் பாரதியார். அதற்கு கமலம் என்றும் போன்ற சொற்களையும் லட்சுமிக்கு செல்வத் திருமகள் என்றும், வாக் தேவதைக்கு வாணீ என்றும் பாரதியார் பாடுகிறார் ; ஜெய ஜெய பவானீ என்று துவங்கும் அவருடைய சத்ரபதி சிவாஜி கவிதை முதிலியனவும் தேவியைப் போற்றியே துவங்குகிறது ; இவ்வாறு நோக்கினால் நூற்றுக்கணக்கான இடங்களில் சஹஸ்ரநாமத்தின் தாக்கத்தைக் காணலாம்.
***

பாரதியார் வேண்டுகோள் பலித்தது!
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!
***
காணி நிலம் வேண்டும் பாடலை இப்படி முடிக்கிறார் :
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
எவ்வளவு உண்மை ! இன்று வரை பாரதிக்குப் பின்னர், அவருக்கு இணையான கவிஞன் தோன்றவில்லையே ! அவருடைய பாடல்தானே தமிழுக்கு உயிர் மூச்சாய், பிரணவ மந்திரமாக விளங்குகிறது !

–subham—
Tags- பாரதியார் , லலிதா சாஸ்ரநாமம் , சக்தி, காளி,