தந்த உலக்கையும், உரலில் ரத்தினைக் கற்களும்! அருணகிரிநாதர் காட்டும் காட்சி!! (Post.15,272)

ஸ்ரீரங்கம் தந்த சிற்பம் , பதினேழாம் நூற்றாண்டு 

Written by London Swaminathan

Post No. 15,272

Date uploaded in London –  14 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ்நாட்டின் செல்வவளத்தைக் காட்டும் காட்சி ஒன்றினை சங்க காலம் முதல் தற்காலம் வரை காண்பது மகிழ்ச்சி தரும். கலித்தொகையில் கபிலர் வருணித்த காட்சியை அருணகிரிநாதர் திருப்புகழில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தரித்துள்ளார்.

குருடனைப்  பார்த்து ராஜ முழி முழி’ என்றால் செய்ய முடியாது. அதே போல பிச்சைக்காரனிடம் போய் உனக்கு எவ்வளவு வேண்டும்? என்று கேட்டால் நம்முடைய சக்தியைக் குறைவாக மதிப்பிட்டு, ‘100 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் தாங்க சாமி’ என்பான். அதாவது மனம் போல மாங்கல்யம். ஆனால் முத்தும் யானைத் தந்தமும் கொழித்த தமிழ் நாட்டில், அந்தக்காலத்தில், தந்த உலக்கையையும் சந்தன மரத்தினால் ஆன உலக்கையையும் பயன்படுத்தினர். கபிலர் கூட குறிஞ்சிக் கலியில் அந்தப் பெண்கள் தானியத்தைக் குத்தத்தான் பயன்படுத்தினர் என்றார். அருணகிரியோ ஒரு படி மேலே சென்று வள்ளி குத்திய உரலில் ரத்தினக் கற்களும் முத்துக்களும் இருந்தன என்கிறார் ; கற்பனை என்று எண்ணி இதை ஒதுக்காமல் அதற்குப் பின்னுள்ள செல்வக் கொழிப்பினை, ஆக்கபூர்வ மனநிலையைக் காண வேண்டும்; முத்தும் தந்தமும் ரத்தினக் கற்களும் இல்லாத நாட்டில் டாffபோடில்ஸ் DAFFODILS போன்ற மலர்களின் அழகினைத்தான் வோர்ட்ஸ்வொர்த் WORDSWORTH போன்ற கவிஞர்கள் பாட இயலும். நாமோ சந்திரனையும் பாடுவோம்; இந்திரனையும் பாடுவோம்; தங்கத்தையும் பாடுவோம் வயிரத்தையும் பாடுவோம்;  அந்த அளவுக்குச் செல்வச் செழிப்பு ! இதோ ஒரு திருப்புகழ்

பாடல், 

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்

     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் …… புலவோரென்

றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்

     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் …… றியல்மாதர்

குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்

     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் …… திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்

     குறித்திருபொற் கழற்புணையைத் …… தருவாயே

அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்

     கலக்கணறக் குலக்கிரிபொட் …… டெழவாரி

அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்

     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் …… பயில்வோனே

கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்

     கழைத்தரளத் தினைத்தினையிற் …… குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்

     கயத்தொடுகைப் பிடித்தமணப் …… பெருமாளே.

****

திருப்புகழ் விளக்கம் (தமிழிலும் ஆங்கிலத்திலும்    பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்; கெளமரம்.காம் )

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன

சொப்பனத்திலும் அற்ற எனக்கு … யாசிப்பவர்களுக்கு மிக்க

இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று

சொல்லும்படியான எனக்கு,

இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித்

தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு …

இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து,

அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு

முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு

எனக் குறுகி … ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வரபெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின்  குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து,

கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம்

இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன்

கழல் புணையைத் தருவாயே … ஆடைக்குள் மறைத்து

வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில்

துன்பப்படும் பிறப்பு என்ற கடலை (பவ சாகரம்)  நான் தாண்டி உய்யஇனி

அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக.

அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து

உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ …

அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக

அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை

பொடிபட்டு உதிர,

வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக்

கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே …

எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய

பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே,

கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த

மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை …

துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை,

கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக்

கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே. … வேங்கை

மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படிகணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.

***

* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

***

ஸ்ரீரங்கம் தந்த சிற்பம் , பதினேழாம் நூற்றாண்டு ;Sriranagm Ivory Carving

இந்தப்பாடலில் மேலும் சில சுவையான விஷயங்களை கவனித்து இருப்பீர்கள் ; அதாவது, அந்தக் காலத்தில் பிச்சை எடுக்கும் புலவர்களும் கூட படாடோப ஆடைகளுடன் கையில் கங்கணம் மோதிரத்துடனும் சென்றார்கள் அவர்களுக்கு கூஜா தூக்கும் ஒருவன் வெற்றிலை ப்பெட்டியைச் சுமந்து வருவான் இன்னும் ஒருவன் அவர் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலைப் பெறுவதற்கு ஒரு சட்டியை ஏந்தி வருவான் .

அதற்குப்பின்னர், பணக்காரன் வீட்டுப் பெண்களை ரம்பா ஊர்வசி மேனகா என்று புகழவேண்டும் அதுகளுக்கோ குரங்கு மூஞ்சி !

இன்னும் ஒரு உருவகம்! உனது மரத்தால்ஆன காலணிகளைத் தா ; அவைகளை நான் தெப்பம் போலப் பயன்படுத்தி பிறப்பு இறப்பு என்னும் பவ சாகரத்தைக் கடக்கிறேன் என்கிறார் புலவர்.

***

OLD ARTICLE ON IVORY FIGURES IN INDIA

கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan 

swami_48@yahoo.com

Date: 6 September 2018 

Time uploaded in London – 18-55  (British Summer Time) 

Post No. 5399

—Subham—

Tags- தந்த உலக்கை, உரலில் ரத்தினைக் கற்களும்:, அருணகிரிநாதர், காட்சி, திருப்புகழ் ,பவ சாகரம் 

Leave a comment

Leave a comment