WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,273
Date uploaded in London – – 15 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
14-12-2025 ஞாயிறன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு
– பெரியாழ்வார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் ஆகும். இது மதுரை ரயில் நிலையதித்லிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
108 வைணவத் திவ்யத் தலங்களில் இந்தக் கோவில் அமைந்துள்ள மதுரையும் ஒரு திருத்தலமாகும்.
ஆறுகள் கூடும் இடங்களுக்கு நமது நாட்டில் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கிருதமாலா என்னும் நதி பூமாலை போன்று இந்த மதுரை நகரைச் சுற்றி ஓடி மீண்டும் ஒன்று சேர்வதால் இது கூடல் நகர் என்ற பெயரைப் பெற்றது. இது கோவிந்தனின் அருள் பெற்றதால் திருக்கூடல் ஆயிற்று.
சில வருங்கள் முன்னர் கூட இந்தக் கோவிலுக்கு மிக அருகில் ஓடிக் கொண்டிருந்தது கிருதமாலா நதி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் சாக்கடை நீரைச் சேர்க்கவே அது அனுப்பானடியாக இன்று விளங்குகிறது.
மூலவர்: கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம், திருமுக மண்டலம்
தாயார்: மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி
தீர்த்தம் : கிருதமாலா, ஹேமபுஷ்கரணி
விமானம் : அட்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள் ; பெரியாழ்வார், வல்லபர், பிருகு முனிவர்
இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், கூடல் புராணம் உள்ளிட்ட நூல்களில் ஏராளமான வரலாறுகள் தரப்படுகின்றன.
கிருத யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றபடி ஒரு கோவிலை படைக்கச் சொன்னார். அவரும் இங்கு கிருதமாலா நதிக்கரையில் அஷ்டாங்க விமானத்துடன் ஒரு கோவிலை அமைக்க எம்பெருமானும் பிராட்டியும் இங்கு எழுந்தருளினர்.
திரேதாயுகத்தில் பிருது என்னும் ஒரு மன்னன் இந்தத் தலத்தின் மீது பறக்க முயன்ற சமயத்தில் அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் அவனது விமானம் பறக்க முடியவில்லை. அவன் கீழிறங்கி இங்கு பெருமாளை வணங்க ஆரம்பித்து இறுதியில் முக்தி பெற்றான.
துவாபர யுகத்தில் விஷ்ணு பக்தியில் சிறந்த மன்னனான அம்பரீஷனும் இங்கு பெருமாளை வழிபட்டு முக்தி அடைந்தான்,
கலியுகத்தின் ஆரம்பத்தில் புரூரவன் என்னும் மன்னன் இங்கு பெருமாளை வழிபட்டு வைகுந்தம் அடைந்தான். அவனது புதல்வன் இந்திரத்யும்னன் என்பவனும் இங்கு வழிபட்டு வந்தான். அவனது புதல்வனே மலயத்வஜ பாண்டியன் ஆவான்.
அவன் வடக்கே உள்ள மன்னர்களை வென்று இமயத்தில் தன் மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையையும் பதித்தான்.
பின்னால் வந்த வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் முக்தி அளிக்கும் தெய்வத்தைப் பற்றி தனக்கு உரைத்து நிரூபணம் செய்பவருக்கு பொற்கிழி தருவதாக அறிவித்தான். அப்போது அவன் அரசவையில் புரோகிதராக இருந்த செல்வநம்பியின் கனவில் பெருமாள் தோன்றி ஶ்ரீ வில்லிப்புத்தூரில் இருக்கும் பெரியாழ்வாரை அழைக்குமாறு கூறினார். அவரும் அழைக்கப்பட்டார். பெரியாழ்வார் அரசவைக்கு வந்து வேதம், இதிஹாஸம். புராணங்கள் ஆகியவற்றிலிருந்து பல மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி திருமாலே பரம்பொருள் என்று நிரூபிக்கலானார். அப்போது பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது. இதனால் ஆச்சரியமுற்ற மன்னன் பெரியாழ்வாரை யானை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்து கௌரவித்தான். அதனைக் காண பெருமாள் பிராட்டியுடன் கருட வாகனத்தில் விண்ணில் தோன்றினார்.
இதனைக் கண்ட ஆழ்வார், “இப்படி அழுகுடன் நீ காட்சி தந்தால் நின் அழகுக்கு கண் திருஷ்டி பட்டு விடாதோ என்று நினைத்து பெருமாளை பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார்.
இந்தப் பலாண்டு தான் எல்லா வைணவத் தலங்களிலும் பெருமாளுக்கு முன்னர் முதன் முதலில் பாடும் திருப்பல்லாண்டாக அமைந்து விட்டது.
மதுரையில் ஓடும் வைகை நதி உருவான வரலாறு ஒன்று உண்டு. திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்த போது அவரது ஒரு பாதம் சத்தியலோகம் வரை சென்றது. அங்கிருந்த பிரம்மா அந்தப் பாதங்களை தனது கமண்டல தீர்த்தத்தால் அலம்ப அதிலிருந்து வந்த நீர்த்துளிகள் வையத்தில் இங்கு வீழுந்து வைகை ஆனது. அதுவே இரண்டாகப் பிரிந்து ஒரு மாலை போல ஆனது. ஒன்று வையை எனவும் மற்றொன்று கிருதமாலா எனவும் பெயரைப் பெற்றது.
இந்தத் தலம் திருமங்கையாழ்வாராலும் திருமழிசை ஆழ்வாராலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலமாகும், பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலமும் இதுவே என்பதால் அவராலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலமாகும் இது. மணவாள மாமுனிகள் இப்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்துள்ளார். இராமானுஜரால் பெரிதும் விரும்பி போற்றப்பட தலம் இது.
இங்கு கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. கீழ்த்தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் பெருமாள் வியூக சுந்தரராஜன் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
இரண்டாவது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூன்றாவது அடுக்கில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
நவகிரகங்கள் இந்தக் கோவிலில் இருப்பது ஒரு சிறப்பாகும். இங்குள்ள சிற்பங்கள் வியக்க வைக்கும் சிறப்புகளைக் கொண்டவையாகும்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கூடலழகரும் மதுரவல்லி நாச்சியாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி! வணக்கம்!!
**