WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,272
Date uploaded in London – – 15 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-12-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே
நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.
மக்களின் நெஞ்சங்களை அலை பாய வைத்து கிருஷ்ணரின் நர்த்தனங்களிலும் கானங்களிலும் ஈடுபடுத்தி உன்னதமான ஒரு பரவச நிலையை ஏற்படுத்தியவர் யார்?
இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் வரும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்று.
ஊத்துக்காடு வேங்கட கவி என்றும் அறியப்படும் இவர் 1715ம் ஆண்டு ராமசந்திர ஐயர் – கமலநயனி தம்பதிகளுக்கு மன்னார்குடியில் பங்குனி மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார்.
இவர் ஊத்துக்காடு என்னும் ஊரில் வாழ்ந்தார்.
ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு கிராமத்தை அடையலாம்.
பழைய காலத்தில் இந்த ஊர் கோவூர் என்ற பெயருடன் விளங்கியது. ஆனால் தண்ணீரே இல்லாமலிருந்த இடத்தில் ஶ்ரீ கிருஷ்ணர் தனது லீலையைச் செய்து ஒரு ஊற்றை உருவாக்கியதால் ஊத்துக்காடு என்ற பெயரைப் பெற்றது.
பிரசித்தி பெற்ற காளிங்க நர்த்தன பெருமாள் கோவில் இங்கு உள்ளது. ஆகவே இதற்கு தென் கோகுலம் என்ற பெயரும் உண்டு.
இந்த ஊரில் தான் வேங்கடகவி வாழ்ந்து வந்தார். இளமையிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமையை இவர் பெற்றார்.
நீடாமங்கலத்தில் வாழ்ந்த ராஜா பாகவதர் என்பவரிடம் முறையாக இசையைப் பயின்றார்.
இவரது தாயின் அறிவுரையின் படி ஶ்ரீ கிருஷ்ணனையே குருவாகக் கொண்டு உபாசனை செய்ய ஆரம்பித்தார்.
இவரது தமையனார் காட்டு கிருஷ்ண ஐயர் என்பவர் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன் அரசவையில் புலவராகத் திகழ்ந்தார்.
அவரே இவரது பாடல்களை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார்.
‘இது ஒரு திறமாமோ’ என்ற பேகடா ராகப் பாடலே இவர் முதலாவதாக இயற்றிய கீர்த்தனை ஆகும். பிறகு அற்புதமான எளிய தமிழில் மளமளவென்று இனிய ராகங்களில் சொற்கள் விளையாட ஏராளமான கீர்த்தனைகளைப் புனைய ஆரம்பித்தார்.
சுமார் 246 பாடல்களை இவர் கிருஷ்ணர் மீது இயற்றியுள்ளார். அத்தோடு முருகன் மீது 9, விநாயகர் மீது 6, சிவன் மீது 5, அம்பிகை மீது 12, ராமன் மீது 5, ராதா மீது 4 அனுமன் மீது 1, சரஸ்வதி மீது 1 என்று பாடல்களை இயற்றியுள்ளார்.
அத்துடன் வால்மீகி, ஜெயதேவர் உள்ளிட்டவர்கள் மீதும் இவர் பாடல்களை இயற்றியுள்ளார்.
கானடா ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்துள்ள இவரது அலைபாயுதே கண்ணா பாடலைக் கேட்டு ரசிக்காதவர் யாரும் இருக்கமாட்டார்கள். திரைப்படத்தில் கூட இந்தப் பாடல் இடம் பெற்று ஆயிரக்கணக்கானோர மகிழ்வித்தது.
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த என்ற ஹம்சத்வனி ராக ஆதி தாளப் பாடலையும்
ஆடாது அசங்காது வா கண்ணா என்ற மத்யமாவதி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த பாடலையும் கேட்காத பக்தர்களே இருக்க முடியாது.
மிக பிரபலமான ஸ்வாகதம் கிருஷ்ணா மோஹன ராகத்தில் அனைவரையும் மயக்கும் பாடலாகும்.
பால்வடியும் முகம் என்ற பாடல் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த பாடல்.
அசைந்தாடும் மயில் ஒன்று, மாடு மேய்க்கும் கண்ணே என்று இவரது புகழ் பெற்ற பாடல்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஹிந்தோளம், ஆரபி போன்ற ஜனரஞ்சகமான ராகங்களில் இவர் பெரும்பாலான பாடல்களை அமைத்த போதும் நீலாம்பரி ராகத்திலும் இவர் பாடல் உண்டு. அபூர்வ தாளமான சங்கீர்ண மட்டிய தாளத்திலும் இவர் பாடல் உண்டு.
ஊத்துக்காடில் உள்ள உற்சவ விக்ரஹமான காளிங்க நர்த்தன கிருஷ்ண விக்ரஹம் அபூர்வமான வியக்க வைக்கும் அமைப்பைக் கொண்டதாகும். இதன் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணர் நடனமாடும் கோலத்தில் இது அமைந்துள்ளது. இந்த விக்ரஹத்தில் கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கு காளிங்கனின் தலைக்கும் ஒரு நூலை விட்டு எடுக்கும் அளவு மட்டுமே இடைவெளி உள்ளது. கிருஷ்ணர் வலது காலைத் தூக்கியபடி நர்த்தன கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டைவிரல் மட்டுமே காளிங்கனின் வாலைத் தொடுகிறது..
இங்கு தான் கிருஷ்ணரின் அருளைப் பெற்றார் வேங்கட சுப்பையர்.
வேங்கட சுப்பையரின் ஒரு பாடல் குறிப்பிடத்தகுந்த ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறது. ‘குரு பாதாரவிந்தமு கோமளமு’ என்ற பாடலில் அவர் கூறுகிறார்: “தான் யாரிடமும் கற்கவில்லை; அனைத்தும் கிருஷ்ணரின் அருளே” என்று குறிப்பிடுகிறார்.
இப்படி இவர் குறிப்பிடுவதால் இவருக்கு அனைத்தையும் அருளியது கிருஷ்ணர் தான் என்பது பக்தர்களின் கருத்தாகும்.
ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்களைத் தொகுத்து நீடாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளார்.
கே.ராஜம்மாள் (நீடாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் மனைவி)
5. எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம் சென்னை 600003
என்ற முகவரியில் இது பற்றிய விவரங்களை அறியலாம்.
இதிலிருந்து 105 பாடல்களைத் தொகுத்து www.projectmadurai.org
இணையதளம் வெளியிட்டுள்ளது. டிஜிடல் பிரதியை இதில் பார்க்கலாம்.
இவரது பாடல்களில் உள்ள இனிமையான தமிழ் வார்த்தைகளின் இணைப்பையும் அவை தரும் பரவசத்தையும் விளக்க வார்த்தைகளே இல்லை.
ஊத்துக்காடு வேங்கடசுப்பையரைப் போற்றுவோம்; அவர் பாடல்களைக் கேட்டும் பாடியும் இறைவன் திருவருளைப் பெறுவோம்.
நன்றி. வணக்கம்!
–SUBHAM—
TAGS- ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்