மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்: பெரியாழ்வார், அருணகிரிநாதர், எம். ஜி.ஆர். பாடல்கள்! (Post.15,277)

Written by London Swaminathan

Post No. 15,277

Date uploaded in London –  16 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மூன்றெழுத்தில்

என் மூச்சிருக்கும் அது

முடிந்த பின்னாலும்

பேச்சிருக்கும்

உள்ளம் என்றொரு

ஊர் இருக்கும் அந்த

ஊருக்குள் எனக்கொரு

பேர் இருக்கும்

கடமை அது கடமை

       (மூன்றெழுத்தில்…)

1964-ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத் தாய்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.

***

புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர். தி மு க DMK கட்சியில் இருந்தபோது பாடிய இப்பாடல் சிலேடைப் பொருள் உடைத்து. அவர் குறிப்பிட்ட மூன்று எழுத்து கடமையா அல்லது தி முக வா ? என்பது சிலேடை. ஆனால் தி மு க ரசிகர்கள் அதைக் கேட்டவுடன் அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து, தியேட்டர் கூரை கீழே விழுமோ என்று அஞ்சும் அளவுக்கு கைதட்டி வரவேற்றனர்.  அவர்கள் நம்பிய மூன்று எழுத்தினை அவரே அழித்து நான்கு எழுத்துக் கட்சியை ADMK உண்டாக்கினார்; பின்னர் அது ஆறு எழுத்துக் கட்சியாக AIADMK மாறியது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ! இதை எழுதக் காரணம் அவர்கள் நம்பிய மூன்று எழுத்து அழியக்கூடியது; ஆனால் பெரியாழ்வாரும் , அருணகிரி நாதரும் மூன்று எழுத்து என்ற சொற்களை பயன்படுத்திப் பாடியுள்ளதைக் காணுங்கள் இவர்கள் சொல்லும் மூன்று எழுத்து சிந்து, கங்கை  நதிக்கரைகளிலும் இமய மலை உச்சியிலும் ஒலித்த, ஒலித்துக்கொண்டிருக்கிற ஓம்காரம்! அப்பர் தேவாரத்தில் ஓம்காரம் சென்ற சொல்லே எண்ணற்ற இடங்களில் வருகிறது.

***

எம பயம் நீக்கென அரங்கனை வேண்டுதல் ;பெரியாழ்வார் பாடல்கள்

ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே

முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா

அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற

அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

பொருள்

ஒப்பற்ற விடையேறும் ரிஷபம்/ காளை சிவபெருமானும்,  நான்முகனும் உன்னை (உள்ளபடி) அறியமுடியாத பெருமை உடையோனே !  யமகிங்கரர்கள் இவனுக்கு ஆயுள்காலம் முடிந்தது என்று நினைத்து வருகையில்  எல்லா உலகங்களும் நீயே ஆகி மூன்று எழுத்துக்களாலான பிரணவ ஸ்வரூபியானவனும்  ஆன முதல்வனே! திரு அரங்கத்து அரவு (பாம்பு) அணைப் பள்ளியானே!. (யமகிங்கரர்கள்) அஞ்சும்படி பிடிக்கப் போகும் நாளன்று நீ என்னை காக்கவேண்டும்.

***

அருணகிரி நாதர்

ஓம் என்று பல பாடல்களில் அருணகிரி நாதர் குறிப்பிவிட்டாலும் அ,  உ, ம, என்று குறிப்பாகக் குறிப்பிடும் இடங்களும் உள. 

இகல வருதிரை பெருகிய சலநிதி

     நிலவு முலகினி லிகமுறு பிறவியி

          னினிமை பெறவரு மிடருறு மிருவினை …… யதுதீர

இசையு முனதிரு பதமலர் தனைமன

     மிசைய நினைகிலி யிதமுற வுனதரு

          ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி …… உமைபாகர்

மகிழு மகவென அறைகிலி நிறைகிலி

     மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி

          வசன மறவுறு மவுனமொ டுறைகிலி …… மடமாதர்

மயம தடரிட இடருறு மடியனு

     மினிமை தருமுன தடியவ ருடனுற

          மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ …… தொருநாளே

சிகர தனகிரி குறமக ளினிதுற

     சிலத நலமுறு சிலபல வசனமு

          திறைய அறைபயி லறுமுக நிறைதரு …… மருணீத

சிரண புரணவி தரணவி சிரவண

     சரணு சரவண பவகுக சயனொளி

          திரவ பரவதி சிரமறை முடிவுறு …… பொருணீத

அகர உகரதி மகரதி சிகரதி

     யகர அருளதி தெருளதி வலவல

          அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் …… விடுவோனே

அழகு மிலகிய புலமையு மகிமையும்

     வளமு முறைதிரு மயிலையி லநுதின

          மமரு மரகர சிவசுத அடியவர் …… பெருமாளே.

………………………………………..

சயனொளி திரவ பர … சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே,

அதி சிர மறை முடிவுறு பொருள் நீத … அதிக மேன்மை

உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே,

அகர உகரதி மகரதி சிகரதி … அகரம் போன்ற முதற்பொருளே,

உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,

யகர அருளதி தெருளதி … யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,

………………………..

திருவிடைக்கழியில் பாடிய திருப்புகழில்,

சிவனுக்கொரு சொற்பகர்வோனே  என்று ஓம் என்னும் ஓரெழுத்தை அல்லது ஒரு சொல்லைக் குறிப்பிடுகிறார்.

எட்டு குடியில் முருகனைப்பாடும்போது, ஓம்பெறும் ப்ரணவாதியுரைத்தெந்தனையாள்வாய் என்று வேண்டுகிறார்

சுவாமிமலையில் காமியத்தழுந்தி என்று தொடங்கும் திருப்புகழில் ஓமெழுத்தில் அன்புமிகவூறி ஓவியத்திலந்தமருள்வாயே — என்கிறார்  இப்படிக் கணக்கற்ற பாடல்களில் ஓம்காரத்தைக் காண்கிறோம்.

–subham—

Tags மூன்றெழுத்து என் மூச்சு பெரியாழ்வார், எம் ஜி ஆர் , அருணகிரிநாதர், பாடல்கள்!

Leave a comment

Leave a comment