டைட்டானிக் விபத்தும் அது பற்றி எடுக்கப்பட்ட படத்திற்கு நேர்ந்த விபத்தும்! (Post.15,283)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,283

Date uploaded in London –   18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

டைட்டானிக் விபத்தும் அது பற்றி எடுக்கப்பட்ட படத்திற்கு நேர்ந்த விபத்தும்! 

ச. நாகராஜன் 

உலகின் மிக மிக மோசமான கப்பல் விபத்து என்று கூறப்படுவது டைட்டானிக் என்ற கப்பல் கடலில் மூழ்கியது தான்!

உலகின் பிரம்மாண்டமான இந்தக் கப்பலின் எடை 46328 டன்கள். இதன்  நீளம் 269 மீட்டர் அதாவது 882.5 அடி. 28.2 அடி அகலம் (92.5 அடி)

 மிகுந்த ஆரவாரத்துடன் கடலில் பயணித்த டைட்டானிக் 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி ஒரு பனிப்பாறையில் மோதி மூன்று மணி நேரத்தில் முற்றிலுமாக மூழ்கி விட்டது. சவுத் ஆம்ப்டனிலிருந்து கிளம்பிய இந்தக் கப்பல் நியூயார்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

2224 பயணிகளில் 1500 பேர்கள் இறந்தனர். ஆகவே உலகின் மிக மோசமான கப்பல் விபத்து என்ற பெயரைப் பெற்றது இது.

இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களுள் ஒருவர் டோராதி ஜிப்ஸன் (DOROTHY GIBSON) என்ற இருபத்தியிரண்டே வயதான திரைப்பட நடிகை ஆவார்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நியூயார்க் செல்வதற்காக இவர் டைட்டானிக் கப்பலில் ஏறினார்.

கப்பல் பனிப்பாறையின் மீது மோதுகின்ற சமயத்தில் இவர் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அவசரம் அவசரமாக லைஃப் போட்டுகள் கீழே இறக்கப்பட அதில் முதல் படகில் ஏறி இவர் உயிர் தப்பினார்.

 நியூயார்க்கிற்கு வந்த டோராதியை எக்லேர் பிலிம் கம்பெனியை நடத்தி வந்த அவரது முதலாளி உயிர் பிழைத்தமைக்காகப் பாராட்டினார். உடனடியாக ஒரு சின்ன படம் தயாரிக்க முடியுமா என்று கேட்டார் அவர். என்ன நடந்தது என்று டோராதி சொல்ல அவர் உதவியுடன் கதை வசனம் தயாரிக்கப்பட்டது.

தனது பெற்றோருக்கும் காதலனுக்கும் நடந்ததைச் சொல்வது போல கதை அமைக்கப்பட்டது.

தான் விபத்து நடந்த சமயத்தில் என்ன ஆடை அணிந்திருந்தாரோ அதே ஆடையை டோராதி அணிந்து படத்தில் நடித்தார்.

படத்தின் பெயர் ‘ஸேவ்ட் ஃப்ரம் தி டைட்டானிக்” (SAVED FROM THE TITANIC)

 படம் ஓடிய மொத்த நேரம் பத்து நிமிடங்கள் தான். அந்தக் காலத்தில் தியேட்டர்களீல் இப்படி ‘ஒரு ரீல்’ படங்கள் ஏராளமாக ஓடிக் கொண்டிருந்தன.

பனிப்பாறைகளைப் பற்றிய பல போட்டோ படங்களுடன்  இந்தப் படம் திரையிடப்படவே திரையரங்குகளில் கூட்டம் ஏராளமாக வந்து குவிந்தது.

நியூ ஜெர்ஸியில் ஒரு ஸ்டுடியோவிலும் நியூயார்க் துறைமுகத்திலும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

கடைசியில் டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த கதி தான் இந்தப் படத்திற்கும் நேர்ந்தது.

பாதுகாப்பாக ஒரு ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருந்த  இந்தப் படத்தின் ஒரே ஒரு பிலிம் காப்பி அந்த ஸ்டுடியோ 1914ல் தீப்பற்றி எரிய அதில் அழிந்தது!

 டைட்டானிக் பற்றி இதுவரை 20 திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்டிருக்கின்றன.

28 டாகுமெண்டரி படங்கள் இந்த விபத்தைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.

இன்னும் சுமார் 31 தொலைக்காட்சித் தொடர்கள் இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன! 

**

Leave a comment

Leave a comment