
Post No. 15,286
Date uploaded in London – – 19 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
7-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சுனேய் பூலோ சதுப்பு நிலம் (SUNGEI BULOH WETLAND RESERVE)– சிங்கப்பூர் அதிசயம்!
ச. நாகராஜன்
சுனேய் பூலோ சதுப்பு நிலம் (SUNGEI BULOH WETLAND RESERVE) என்று ஒரு அழகிய இயற்கை வளம் இருக்கிறது என்பதையே அறியாமல் இருந்தது சிங்கப்பூர்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் இயற்கை ஆர்வலர்கள் கூக்குரலிடவே இதைப் பற்றிய முக்கியத்துவம் உலகினருக்குத் தெரிய வந்தது.
2002ம் ஆண்டு சிங்கப்பூர் இந்த இயற்கை வளச் சதுப்புநிலத்தைப் பாதுகாப்புப் பகுதியாக அறிவித்தது.
130 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த நிலமானது ஏஷியன் பாரம்பரியப் பூங்காவாக/ 2003ம் ஆண்டு பட்டியலிடப்பட்டது.
அப்படி என்ன விசேஷம் இந்தப் பகுதியில் என்று கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான பறவைகள் இனிய குரலில் ஓசை எழுப்பும்.
சைபீரியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடும் குளிரிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து செல்லும் பறவைக் கூட்டங்கள் வழியில் தங்குமிடமாக இதைத் தேர்ந்தெடுத்து இங்கு வரும்.
1989ல் இங்கு ஒரு பூங்கா அமைக்கப்பட்டது. நாளுக்கு நாள் இதன் அருமை தெரிய வரவே இதன் பெருமை பரவியது.
சுனேய் பூலோ சதுப்பு நிலம் அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் பிரதம மந்திரி கோ சோக் டாங்கால் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
சுனேய் பூலோ என்றால் மூங்கில் நதி என்று மலேசிய மொழியில் பொருள். ஒரு காலத்தில் இங்கு மூங்கில் மரங்கள் மிக அதிகமாக இருந்ததை இந்தப் பெயர் மூலம் அறியலாம். 5.2 மைல் நீளமுள்ள இந்தப் பகுதி தரைமட்டத்திலிருந்து 357 அடி உயரத்தில் இருக்கிறது.
இரண்டரை மணி நேரத்தில் இந்தப் பகுதியை முற்றிலுமாகச் சுற்றிப் பார்த்து விட முடியும்.
யூரேசியன் விம்ப்ரெல், காமன் க்ரீன்ஷாங்க், ரெட் ஷாங்க், மங்கோலியன் ப்லோவர், உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்களை இங்கு பறவை ஆர்வலர்கள் கண்டு மகிழ்கின்றனர். இவர்கள் ஒளிந்திருந்து பறவைகளைத் தொந்தரவு செய்யாமல் பார்க்க இடங்கள் உள்ளன.
உப்புநீர் முதலைகளையும் இங்கு காண முடியும். ஜெல்லி மீன்கள், ஈல் உள்ளிட்டவற்றையும் இங்கு காணலாம்.
அத்தோடு அரிய வகை பாம்புகள் இங்கு உள்ளன. நாய் முக நீர்ப் பாம்புகள், கட்டுவிரியன், நாகப்பாம்பு உள்ளிட்ட பலவகையான நாகங்கள் இங்கு உள்ளன.
இங்கு 500 அரிய வகைத் தாவர இனங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. சதுப்புநிலக் காடுகளில் மட்டுமே காணப்படும் மரங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.
வருடம் 365 நாளும் இங்குள்ள பூங்கா திறந்து வைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு இயற்கை வளம் பற்றித் தெரிவிக்கும் பல்வகைத் திட்டங்களை இந்த சதுப்புநில மையம் உருவாக்கி நடத்தி வருகிறது.
சிங்கப்பூர் சுனேய் பூலோ சதுப்பு நிலத்தில் அரிய பறவை இனங்கள், தாவர வகைகள், சதுப்புநில அதிசயங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழலாம்.
**