ஜாக்கிரதை! பரபரப்புச் செய்திகள் செய்யும் மாய வேலைகள்!! (Post.15,289)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,289

Date uploaded in London –   20 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜாக்கிரதை! பரபரப்புச் செய்திகள் செய்யும் மாய வேலைகள்!! 

ச. நாகராஜன் 

நாம் வாழும் இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

பொய்யான செய்திகளும், பரபரப்புச் செய்திகளும் பல்வேறு காரணங்களுக்காக சோஷியல் ஊடகங்களில் பரப்பி விடப்படுகின்றன. 

இதனால் விளையும் சேதங்கள் சொல்ல முடியாத அளவு துயரங்களை ஏற்படுத்துகின்றன.

பல்வேறு அரசுகள் தவறான செய்திகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றன.

ஒன்று – DISINFORMATION.

இன்னொன்று –    MISINFORMATION

DISINFORMATION என்பது வேண்டுமென்றே பரப்பிவிடப்படும் தவறான செய்திகள்.

இது மதக்கலவரங்களைத் தூண்டி விடும். அரசியல் ஆதாயங்களுக்காக பிரிவுகளை ஏற்படுத்தி சண்டைகளை மூட்டி விடும்.

வணிக நோக்கத்திற்காக செய்திகள் உண்மை போல தரப்படும். 

இந்த வகைச் செய்திகள் சமுதாயத்திற்கே மிக ஆபத்தானவை. 

அடுத்தது MISINFORMATION.

அவசரம் அவசரமாக செய்திகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது இந்த வகையில் சேரும். 

இன்று சோஷியல் மீடியாக்கள் தரும் செய்திகள் நொடிக்கு நொடி நூற்றுக்கணக்கில் வெளியாவதால் அவற்றை நமது பங்கிற்கு பரப்பாமல் இருப்பதே நாம் சமுதாயத்திற்குச் செய்யக் கூடிய முதல் சேவையாகும்.

இன்று ஒவ்வொரு மனிதனும் ஒரு செய்தி தரும் “சிறந்த செய்தியாளனாக” ஆகிவிட்டான். பெரும்பாலானோரது முக்கிய நோக்கம் அதிகம் பேர் தங்கள் தளத்தை நாட வேண்டும் என்பது தான். 

ஆகவே செய்திகளை சரிபார்க்காதபோது இன்னொருவரிடம் அவற்றை சொல்லாமல் இருப்பதே சமுதாயத்திற்கு நாம் செய்யும் சேவையாகும்.

கோவிட் காலத்தில் பரப்பிவிடப்பட்ட செய்திகள் எவ்வளவு பெரிய சேதத்தை விளைவித்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 

நமக்கு வரும் செய்திகளை எப்படி செக் செய்வது? 

முதலில் செய்தி வெளியிடும் ஆதாரத்தை சரி பார்க்க வேண்டும். ஆதாரமான செய்தி தளங்கள் போன்ற அடையாளத்தைக் கொண்டுள்ள இவற்றில் ஒரே ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் இருக்கும். உஷாராக இருப்பவர்கள் இதைப் பார்த்து பொய்ச் செய்தி பரப்புபவரை இனம் காணலாம். 

யார் இதைத் தருகிறார் என்பதை சரி பார்க்க வேண்டும். வம்புக்காரர்களும், தற்பெருமை கொண்டு அதிகம் பேர் தங்கள் தளத்திற்கு வருகிறார்கள் என்று சொல்பவர்களும் பொழுதுபோகாமல் இருப்பவர்களும் தரும் செய்திகளைப் பார்க்கவே கூடாது. இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்கி ஓரம் கட்டினாலேயே போதும், இவர்கள் அடங்கி விடுவர். 

ஒரு செய்தி நமக்கு வரும்போது அது சரிதானா என்பதை இன்னொரு Source மூலமாக சரிபார்ப்பது இன்னொரு வழி. இதன் மூலம் முதலில் இதைத் தருபவரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்.

 ஒரு செய்திக்கு கீழே உள்ள விமரிசனங்களைப் பார்ப்பது இன்னொரு வழி.

 ஒரு செய்தி செய்தியாக தரபப்டுகிறதா, அல்லது ஜோக் என்ற ரகத்தில் சேர்க்கப்பட வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

 நாம் ஒரு தலைப்பட்சமாக ஒரு அரசியல்வாதியையோ அல்லது நமக்குப் பிடித்தவரையோ சார்ந்து இருந்தால் நமது பார்வையும் மஞ்சள் காமாலை பார்வையாகவே இருக்கும். ஆகவே நடுநிலையுடன் நாம் இருக்க வேண்டியது அவசியம். 

செய்திகளோடு தரப்படும் படங்கள் நம்மை மயக்கும்.

உண்மை போல செய்தியை நம்ப வைக்கும் தந்திரப் படங்களாக இவை இருக்கக் கூடும். ஒரு நொடியில் ஒருவரை படங்கள் இறந்தவராகக் காட்டும். இன்னொரு நொடியில் செய்திக்கு வலுவூட்டும் பல போஸ்களைத் தரும். ஆர்டிபிஷயல் இண்டெலிஜென்ஸ் யுகம் இது. 

உண்மையை சரிபார்க்கும் இணைய தளங்கள் பல உண்டு. அவற்றில் செய்திகளைச் சரி பார்க்கலாம். 

அமெரிக்க தேர்தலிலிருந்து அடுப்பங்கரை சமையல் உணவு தயாரிப்பு வரை வரும் செய்திகளை நம்புவதும் நம்பாததும் நமது இயற்கையான அறிவிலேயே உள்ளது. 

இதை உடனடியாக ஆயிரம் பேருக்கு அனுப்புங்கள் என்று சொல்லும் போதே உடனடியாக நம் மனதில் அடிப்படையான ஒரு சந்தேகம் அனுப்புபவரைப் பற்றி எழ வேண்டும்.

 சமுதாய சேவைக்கான முதல் படி எந்த ஒரு செய்தியையும் நமது பக்கத்திலிருந்து பரப்ப வேண்டாம் – அது உண்மையா என்று சரிபார்க்காத வரை!

***

Leave a comment

Leave a comment