ஆலயம் அறிவோம்! திருவல்லம்! (Post No.15,295)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,295

Date uploaded in London – –  22 December 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லண்டனிலிருந்து 21-12-2025 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

தாயவன், உலகுக்குத் தன் ஒப்பு இலாத

தூயவன், தூ மதி சூடி எல்லாம்

ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்

சேயவன், உறைவிடம் திருவல்லமே

                                                                                      – திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருவல்லம் திருத்தலமாகும். தமிழ்நாட்டில் வேலூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும் இராணிப்பேட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் உள்ளது.

இறைவன் : வல்ல நாதர், வில்வநாதேஸ்வரர்

இறைவி : வல்லாம்பிகை, ஜடகலாபாம்பாள் அல்லது தீக்காலி அம்பாள்

தல விருட்சம் : வில்வ மரம்

தீர்த்தம்: கௌரி தீர்த்தம், நீவா நதி

இத்தலத்திற்கு வில்வவனம், வில்வாரண்யம், தீக்காலி வல்லம் ஆகிய பெயர்களும் உண்டு.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.

திருமாலாலும் பிரமனாலும் இங்கு சிவன் வலம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதால் இந்த ஊர் திருவலம் என்ற பெயரைப் பெற்றது/

விநாயகர் இங்கு சிவனை வலம் வந்து வழிபட்டதால் திருவலம் என்ற பெயரை இந்தத் தலம் பெற்றது என்றும் கூறுவர்..

ஒரு காலத்தில் வில்வமரங்கள் அடர்ந்த காடாக இது திகழ்ந்ததால் இதற்கு வில்வவனம் என்ற பெயர் உண்டு.

வில்வநாதேஸ்வரர் கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது.

கஞ்சனகிரி மலையிலிருந்து திருவல்லத்திற்கு அபிஷேக தீர்த்தத்தைக் கொண்டு வரும் அர்ச்சகரை கஞ்சன் என்பவன் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட சிவபிரானின் வாகனமான நந்தி தேவர் கஞ்சனை எட்டு பாகங்களாகக் கிழித்தார். சிவபிரானிடம் இறவாமல் இருக்கும் வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதைக் கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாயிலை நோக்கியவாறு இருக்கிறார்.

கஞ்சனின் எட்டு உடல் பாகங்கள் விழுந்த லாலாப்பேட்டை, சீகராஜபுரம், மாவேரி, வடகால், தென்கால், மணியம்பட்டு, குகைய நல்லூர், நரசிங்கபுரம், மருதம் பாக்கம் ஆகிய எட்டு ஊர்களில் சிவன் கோவில்கள் உள்ளன. கஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபிரான் தைப்பொங்கல் கழிந்த மூன்றாம் நாள் இந்த எட்டுக் கோவில்களுக்கு எழுந்தருளி கஞ்சனுக்கு மோக்ஷம் அளிக்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெறுகிறது.

கஞ்சனகிரி மலையில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுவதைக் கவனித்த பக்தர்கள் இப்போது கூட்டமாக அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இங்குள்ள நதியை “நீ வா” என்று இறைவன் அழைத்ததால் அது நீ வா என்ற பெயரைப் பெற்றது; காலப்போக்கில் நிவா நதி என்று அழைக்கப்படலாயிற்று.

இத்தலத்தில் தான் விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இதை உணர்த்தும் விதத்தில் துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அவர் காட்சி அளிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருக்கிறார்.

கோவிலில் மூலவர் சந்நிதியில் வில்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி சதுரபீட ஆவுடையார் மீது ஸ்வயம்பு லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். கர்பக்ருஹம் அகழியின் அமைப்பை உடையது.

மூல ஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களின் திருவுருவங்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. ஒரு முகப்பு வாயில் மற்றும் முன்மண்டபத்தைக் கொண்டுள்ளது.

உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபமும் அருகில் காசி விஸ்வநாதர் சந்நிதியும் சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. அடுத்து அருணாசலேஸ்வரர் சந்நிதி அமைந்திள்ளது. இதையடுத்து பல சிவலிங்கங்கள் உள்ளன.

சுவாமி சந்நிதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

ஆறுமுகர் சந்நிதியில் வள்ளி தெய்வானையும் மூலையில் அருணகிரிநாதர் சிலையும் உள்ளன.

வெளி பிரகாரத்தில் கிழக்கில் கொடிமரம் மற்றும் பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

தக்ஷிணாமூர்த்தியின் சீடரான சனக முனிவரின் சமாதி வில்வநாதேஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் அமைந்துள்ளது. இங்கு வழிபாடு நடத்துவோருக்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சிவானந்த மௌன குரு ஸ்வாமிகள் என்னும் சித்தர் பலரின் நோய்களைத் தீர்த்து வந்த மகான் ஆவார். அவர் இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து வந்தார். இவருக்கு இக்கோயிலின் அருகே தனி மடம் உள்ளது. 1988 ஜனவரி முதல் தேதியன்று இவர் சமாதி அடைந்தார். இவரது சமாதி இங்கு உள்ளது.

 இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தின் சிறப்பை “நசையொடு தோலும்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில், “மாயன், திசைமுகனாரும், திசை புவி, வானும் திரிதர வாழும் சிவன் மூதூர்” என்று குறிப்பிட்டு அருளியுள்ளார். மாயனாகிய திருமாலும், நான்முகனும் பல திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுகலத்தில் உள்ளவர்களும், வலம் வந்து சூழ வாழ்கின்ற சிவபிரானின் பழைய ஊர் என்பது இதன் பொருளாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வில்வநாதேஸ்வரரும் வல்லாம்பிகை அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

Leave a comment

Leave a comment